Sunday, June 29, 2008

தசாவதாரத்தின் கதை

1955 ஆம் ஆண்டு. தென் தமிழ்நாட்டில் ஒரு கிராமம். சுதந்திர தின கொண்டாட்டம். குழந்தைகளின் மாறு வேடப்போட்டி.

வக்கீல் சீனிவாசனின் 8 வயது மகனுக்கு நேரு வேடம் போட ஆசை. அம்மாவுக்கும் மற்ற அக்ரகாரத்து மாமிகளுக்கும் குழந்தைக்கு கிருஷ்ணன் வேடம் போட்டு பார்க்க ஆசை. குழந்தைக்கு வண்ணம் பூசிக்கொள்ளவோ வெற்றுடம்புடன் தோன்றவோ பிடிக்கவில்லை. குழந்தையின் ஆசை வென்றது. வெள்ளை வெளேர் என்று நேரு உடையில் மார்பில் ரோஜாவுடன் குழந்தை மேடை ஏறியது. பல்வேறு காரணங்களினால் வேறு ஒரு குழந்தை பரிசை வென்றது.

நம் கதாநாயகக் குழந்தைக்கு ஏமாற்றம். கிருஷ்ணனும், அக்ரகாரத்து மாமிகளும் தான் தன் தோல்விக்கு காரணம் என்று பரிபூரணமாக நம்பினான். கடவுளையும், அக்ரகாரத்து மாமிகளையும், பின்னர் சுற்றியுள்ள மனிதர்களையும் பழி வாங்கத்துடித்தான். மாறுவேடமே வாழக்கை என்று முடிவு செய்தான். அவனுடைய பழி வாங்கும் படலத்தின் முதல் வெற்றி 1997 இல் கிடைத்தது. அக்ரகாரத்து மாமிகளை ஓரளவு அவமானப்படுத்தும் முயற்சியில் அவ்வை ஷண்முகி வெற்றி பெற்றது. நம் நாயகனுக்கு இன்னும் திருப்தி வரவில்லை. நண்பன் ரவிக்குமாருடன் சேர்ந்து இந்த உலகை பழி வாங்க அடுத்த வாய்ப்பு - 2006 இல் தசாவதாரத்தை தொடங்கினான். பல்வேறு சோதனைக்குப்பிறகு 2008 இல் ஒரு வழியாக படத்தை வெளியிட்டான். ஊகித்திருப்பீர்கள் - அந்த குழந்தைதான் நம் உலக நாயகன் கமல ஹாசன்.

ஒரு நல்ல கதைக்கு ஒரு one-liner வேண்டும். நீங்கள் பார்த்து ரசித்த எல்லா படங்களுக்கும் இந்த ஒரு வரி கதை சொல்ல முடியும். இந்த ஒரு வரியில் இடம் பெரும் கதை மாந்தர் தான் கதையின் நாயகர்கள். நவராத்திரியில் - "வீட்டை விட்டு ஓடிய பெண் சந்தித்த ஒன்பது பேர்." - கதாநாயகி: வீட்டை விட்டு ஓடிய பெண்; மைக்கல் மதன காமராசனுக்கு - "இளம் வயதில் பிரிந்த நான்கு சகோதரர்கள் இணைகிறார்கள்." - கதாநாயகர்கள்: நான்கு சகோதரர்கள்

தசாவதாரத்திற்கு அவ்வாறு சொல்ல முயற்சித்தால் - "12 ஆம் நூற்றாண்டில் கடலில் போடப்பட்ட பெருமாள் 2004 இல் உலகைக்காக்கிறார்." அல்லது "அமெரிக்காவில் திருடப்பட்ட கிருமி நாகப்பட்டினத்தில் அழிக்கப்படுகிறது". கதை மாந்தர் பெருமாள் அல்லது கிருமி. கமல ஹாசனின் கொள்கைப்படி கடவுள் வேடம் போட முடியாது. கிருமி மிகச்சிறியதானதால் கிருமி வேடமும் போட முடியாது. அதனால் இடைப்பட்ட எல்லா வேடங்களையும் போட்டுள்ளார் கமல ஹாசன். பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் மகன் யார் கமல் என்று கேட்டான். குழப்பத்தை தவிர்க்க - எந்த முகமாவது பிளாஸ்டிக்கால் செய்தது போல் தெரிந்தால் அது கமல் என்று விளக்கினேன்.

பல வருடங்களுக்கு முன் என் டி ராமாராவ் தான வீர சூர கர்ணுடு என்று ஒரு படம் எடுத்தார். தலைப்பின் படி, கதாநாயகன் கர்ணனாக என்டிஆர். அடுத்த மிக முக்கியமான பாத்திரம் - துரியோதனன் - அதுவும் என்டிஆர். இரண்டும் எதிர்மறை பாத்திரங்களாகப்போனதால் அருச்சுனனாகவும் என்டிஆர். மகாபாரதக்கதையில் என்டிஆர் தவிர வேறு யாராவது கிருஷ்ணனாக நடிக்க முடியுமா? அதனால் கிருஷ்ணனாகவும் என்டிஆர். கிட்டத்தட்ட அதே அளவு புத்திசாலித்தனத்தில் இருக்கிறது கமலின் தசாவதாரம். ஒரே வித்தியாசம் - கமல் பல முகமூடிகளைப் பயன்படுத்தி, பாத்திரங்களுக்கேடையே வேறுபாட்டை காண்பிக்கிறார். முகமூடிகளுக்குப்பின் கமல் இருந்தால் என்ன - கல்லாப்பெட்டி சிங்காரம் தான் இருந்தால் என்ன?

கடவுள் பற்றி கமலின் குழப்பம் தான் கதை. விஞ்ஞானி கமல், கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார். சுனாமி போன்ற அழிவுக்கும் அந்த இல்லாத கடவுள்தான் காரணம் என்று சொல்கிறார். குழப்பத்தில் இந்தப்படம் பாபாவுக்கு இணையானது. பாபாவைவிட அதிக வெற்றி பெற்றால், இதற்கு (கருணாநிதி பாஷையில் சொல்வதென்றால்) "அவா" செய்த விளம்பரம் தான் காரணம். அல்லது ஆஸ்கர் ரவிச்சந்திரன் செய்த புண்ணியம் தான். ஆளவந்தான் படத்துக்குப்பின் தாணு கிட்டத்தட்ட நடுத்தெருவிற்கு வந்தார். அந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது - ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் தான். அதனாலாவது இந்தப்படம் ஓடினால் சந்தோசம் தான்.

No comments: