Anti-fragile எனும் ஆயிரங்காலத்துப் பயிர்
தமிழ் மொழிபெயர்ப்பில் உள்ள சிரமங்களையும் சிக்கலான சிந்தனைகளை எப்படி தமிழில் விளக்குவது என்ற ஆலோசனைகளிலும் சிந்தனைகளிலும் நேரம் சென்றது. நண்பருக்கு என்னுடைய பழைய கட்டுரைகளில் ஒன்றை அனுப்பத் தேடியபோது நான் நாஸிம் நிக்கலஸ் தாலேபின் Anti-fragile என்பதை விளக்க முயன்ற கட்டுரை கண்ணில் பட்டது. குழந்தைத்தனமாக சுற்றி சுற்றி விளக்கியிருந்தேன். எழுதிய எனக்கே அது புரியவில்லை.
ஆங்கிலத்திலேயே Anti-fragile என்பதை விளக்க ஒரு புத்தகமே தேவைப்பட்டிருக்கிறது. ஆனால், சிக்கலான இந்திய சமூகங்களே Anti-fragile. ஆனால் அவை அதை எப்படிப் புரிந்து கொண்டுள்ளன? நாம் உவமைகளைக் கொண்டு சிக்கலானவற்றைப் புரிந்து கொள்கிறோம். அந்த உவமைகளும் பெருமளவு இயற்கையுடன் ஒன்றியவை. தாவரங்கள், விலங்குகள், இயற்கை அமைப்புகள் கொடுத்த உவமைகளைக் கொண்டு சமூக பொருளாதார கருத்தியல்களைப் புரிந்து கொள்வது நமக்கு எளிது; அதுவே வழக்கம் கூட. வரம்பின்றி வரிகளின் மூலம் மக்களை வதைக்கும் அரசுக்கு 'யானை புக்க புலத்தை' உவமையாகக் கூறினர். அப்படி இருக்கும்போது Anti-fragile என்பதை விளக்க இயற்கை ஒரு உவமையையாவது கொடுத்திருக்க வேண்டும்.
Antifragility is a property of systems in which they increase in capability to thrive as a result of stressors, shocks, volatility, noise, mistakes, faults, attacks, or failures.
ஒரு பொருள் வலுவானது (robustness) என்றால், அதன் திண்மைக்கு உவமையாக 'தூணை'க் குறிப்பிடுகிறோம். வலுவானது, வளைந்து கொடுக்காது; ஆனால் அதீத தாக்குதலுக்கு உள்ளாகும்போது உடைந்து போகக் கூடும்.
ஒரு பொருள் வளைந்து கொடுத்து அழியாமல் எழுந்து நிற்கும் (resilient) என்றால், அதற்கு உவமையாக 'நாணலை'க் கூறுவோம். ஆற்றின் வெள்ளத்தில் கரையில் உள்ள மரங்கள் அடித்துச் செல்லப்பட்டாலும், ஆற்றில் உள்ள நாணல் வளைந்து கொடுத்துத் தப்பிக்கிறது.
ஒரு பொருள் பல்வேறு இன்னல்களைக் கடந்து அதன் மூலம் மேலும் தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்கு உதாரணம் - ஆயிரங்காலத்துப் பயிர். அது வறட்சி, வெள்ளம், நோய்கள், பூச்சிகள் என்று பல சோதனைகளை சந்தித்து ஒவ்வொன்றிற்கும் ஏற்றபடி தன்னை மாற்றிக்கொண்டே வந்துள்ளது. புதிய சோதனைகள் வந்தாலும், அதைக் கற்று, கடந்து அடுத்த தலைமுறையில் அதை எதிர்கொள்ளும் திறனை பயிர் பெற்று விடுகிறது. இதுவே Anti-fragile.
ஓரளவுக்கு இயற்கையுடன் தொடர்பு இருந்து, கொஞ்சம் கற்பனையும் இருந்தால், ஆயிரங்காலத்து பயிர் என்பதன் பொருள் தரும் பார்வை விரிவானதாகவும் ஆழமானதாகவும் இருக்கும். இவை இரண்டுக்கும் உள்ள தட்டுப்பாடுதான் தமிழனின் நிலைமை.
இயற்கையிலிருந்து விலகிப் போகும் போது, இந்த உவமைகள் எடுபடுவதில்லை. அது இப்போதைய தமிழின், தமிழனின் பிரச்சினை. பெரும்பாலான வாசகர்கள் நகரங்களில் இருப்பதால், இயற்கையை உவமையாகக் கூறுவது அவர்களிடம் தேவையான தாக்கத்தை உருவாக்குவதில்லை. நகர வாழ்க்கையிலும், நிறுவனச் சூழல்களிலும், அன்னியமாக இருந்தாலும் ஏற்கனவே அமெரிக்காவில் புழக்கத்தில் இருக்கும் ஆங்கில உவமைகள் நேரடியாகக் கிடைத்துவிடுவதால், புதிய உவமைகளை தமிழில் உருவாக்கிக் கொள்ளும் திறமையும் அவனிடம் இல்லை.
இதுவே தமிழின் சோகம்.
2 comments:
உங்கள் ஆதங்கங்களைப் புரிந்து கொள்கிறேன். தமிழ் குறித்த உங்களுடைய கவலைகளை ஒப்புக் கொள்கிறேன். இருந்தாலும் சில குறிப்புகள்:
1. "புதிய உவமைகளை தமிழில் உருவாக்கிக் கொள்ளும் திறமை" - தமிழுக்கோ தமிழர்களுக்கோ அவசியமா? அத்தியாவசியமா? இன்றியமையாததா? ஆங்கிலத்திலிருந்து (அல்லது பாரம்பரியப் படி, ஸம்ஸ்க்ருதத்திலிருந்தோ) உவமைகளையும் எடுத்தாட்கொண்டால் என்ன பிரச்சினை? கோமணம்வேட்டி மேற்துண்டு வகையறாக்களிலிருந்து நாம் குழாய்களுக்கும் சட்டைகளுக்கும் ஏகோபித்து மாறவில்லையா என்ன?
2. தமிழில் புதிய வார்த்தைகளை உருவாக்க வேண்டியது தேவையானதொன்றா? அப்படியே அன்டிஃப்ரஜைல் என்று எ யஎப்ழுதுவதால் என்ன தவறு நிகழ்கிறது?
3. மேற்கண்டவை பிறபுறங்களில் இருக்க - fragile என்பதற்குத் தமிழ்ப்படுத்தியெடுத்து தக்க சொற்றொடர்/சொல்லைச் சென்றடைய முயன்று, பின்னர் Anti-fragile எழவு பக்கம் செல்கிறேன்:
நொய் noy from Winslow's "A comprehensive Tamil and English dictionary" (p. 701) - ...Brittleness, fragileness, delicateness, as நொய்மை, நொய்யரிசி, s. Rice broken in pounding. நொய்யரிசிநொதிபொறாது. Broken rice will not bear boiling water; so the poor cannot bear sudden wealth.
அநொய்மை = Anti-fragililty?
பூஞ்சை pūñcai from "Kriyāvin̲ taṟkālat Tamiḻ akarāti" (p. 750) - பூஞ்சை பெ. (-ஆன) [பே.வ.] 1: (உடலைக் குறிப்பிடும்போது) நோயை எதிர்க்கக் கூடிய சக்தி இல்லாமல் மெலிந்திருப்பது; (with reference to one's body) being thin or weak or fragile. அவளுக்குப் பூஞ்சை உடம்பு, வெயில், குளிர் எதையும் தாங்க முடியாது.
ஆகவே, அபூஞ்சை? = Anti-fragililty?
4. வழக்காடல்களுக்கும் வாழ்க்கைமாற்றங்களுக்கும் ஏற்ப உவமானங்களும் உவமேயங்களும் உருவாகின்றன - ஆகவே தற்காலப் படிமங்கள், உவமைகள் என நாம் மனோவிசாலத் தன்மையுடன் இருக்கவேண்டியது, எப்போதுமே காலத்தின் கட்டாயம்தானே!
5. இயற்கையிலிருந்து மட்டுமேதான் மொழிப் பாரம்பரியமும் படிமங்களும் உருவாகவேண்டுமா? மொழியே மானுடத்தால் செயற்கையாக, ஒரு கருவியாக காலவாக்கில் உருவாக்கப்பட்டது தாமே? Isn't formal language a cultural artifact - a product of human endeavors?
6. தனித்தமிழ் வகையறா பக்கம் போய், 'நொதிபொறா நொய்யரிசி' அளவுக்கு, எதிர்காலத் தமிழ் செல்லவேண்டுமா? (இல்லை என்றுதான் உங்கள் நிலைப்பாடு இருக்கும் எனத் தெரியும், இருந்தாலும்...)
1. பொருந்தி வந்தால் தவறு ஒன்றும் இல்லை. அமெரிக்க கார்ப்பரேட் உலகில் எனக்குப் பிடித்த படிமம் - Drink from a firehose. இதை தமிழில் மொழிபெயர்த்தால் ஒட்டாமல் இருக்கும். அதே போல, gaslighting - இதன் மூலம் எத்தனை பேருக்குத் தெரியும் என தெரியாது. ஆனால் இதுவும் ஆங்கில சூழலில் புரிந்து கொள்ளப்பட்ட உவமை. இவற்றிற்கு இணையான உவமைகள் தமிழ் சூழலில் தேவை. வெகுஜனக் கலையான சினிமாவிலிருந்து வந்தால் கூட பரவாயில்லை. வடிவேல், விவேக் போன்றவர்கள் பில்டிங்க் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் வீக்கு, ஆளில்லா கடையில் டீ ஆத்துவது, என்று சில உவமைகளைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இவற்றை தீவிரமான விஷயங்களில் ஏனோ பயன்படுத்த முடிவதில்லை.
2. தமிழில் புதிய வார்த்தைகளை உருவாக்க வேண்டியதில்லை. இருக்கும் வார்த்தைகளேயே அதிகம் யூஸ் பண்றதில்லை. :) பிற மொழிகளிலிருந்து எடுத்துக் கொள்வதில் தவறில்லை. அதற்கு முன், சற்றே முயன்று தமிழில், சமஸ்கிருதத்தில் தேட வேண்டும். நானும்தான்!
3. அநொய்மை, அபூஞ்சை - நன்றி. Anti-fragileஐ விளக்குவது போல இந்த வார்த்தைகளையும் விளக்கலாம். ஆனால் ஏற்கனவே ஆயிரங்காலத்துப் பயிர் என்ற உவமை இருக்கிறது. Anti-fragilஐ விளக்கவும் அதன் இடத்தில் பயன்படுத்தவும் ஆயிரங்காலத்துப் பயிர் என்ற உவமையே அதிக உபயோகமாக இருக்கும்.
4. ஆமாம். தற்கால உவமைகளும் படிமங்களும் தமிழில் வளரவில்லை என்பது தான் என் குறை. அல்லது தமிழில் உவமைகளை உருவாக்கத் தேவையான அளவுக்கு பேச்சும் எழுத்தும் இல்லாமல் போய் விட்டதாகத் தோன்றுகிறதா? அல்லது இருந்து எனக்குத் தெரியவில்லையா! நம்முடைய உவமைகள் சினிமாவிலிருந்து வருவதால், அதன் தாக்கம் குறைந்த காலமே நீடிக்கிறது. வடிவேலுவிஸங்களை இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகு பயன்படுத்த முடியுமா?
5. இயற்கையிலிருந்து தான் பெற முடியும் என்றில்லை. இயற்கையிலிருந்து பெரும் உவமைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பது என் கணிப்பு. அதைத் தவிர பிற துறைகள் நமக்குக் குறைவு. அமெரிக்காவின் கார் கலாச்சாரம் கொடுத்த உவமைகள் (https://owlcation.com/humanities/50-Car-Expressions-and-Idioms-That-Shape-The-English-Language) போல நமக்குக் கொடுக்க இயற்கையைத் தவிர வேறு இல்லை.
6. நொதிபொறா நொய்யரிசி என்பது பெரும்பான்மை தமிழர்களுக்குப் புரியும் என்று இருந்தால் பிரச்சினை இல்லை. சல்லடையில் தண்ணீர் பிடித்து வைக்க முடியாது என்ற அளவுக்குக் கூட தமிழில் உவமைகள் பயனில் இல்லை என்பது தான் குறை.
Post a Comment