Wednesday, June 08, 2016

மாதிரி


சந்துரு அதிகம் மாறவில்லை.  சற்று முன் வழுக்கை,  பனிரெண்டாம் வகுப்பில் பார்த்தது போலத்தான் இருக்கிறான்.  கடந்த ஐந்து நாட்களில் மற்ற நண்பர்களிடம் அதிகம் பேசப்பட்ட விஷயம் இதுவாகத்தான் இருக்கும்.  இருபத்தைந்து வருடங்கள் கழித்து சந்திக்கும்போது, கண்கள் முதலில் தலையையும்,  வயிற்றையும் தான் பார்க்கின்றன.

கம்ப்யூட்டரும், ஒய்டூகேவும் வீசிய அலையில், எங்கள் வகுப்பிலிருந்த பத்து பேர் தவிர, மற்ற எல்லாரும் வெளி ஊர்களுக்கும், நாடுகளுக்கும் தூக்கி வீசப்பட்டோம்.  தேங்கிய அந்த பத்து பேரில் சந்துருவும் ஒருவன்.  அவன் திருச்சியிலேயே இருந்தது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.  அவனுக்குக்கூட திருச்சியிலேயே சம்பாதிக்கும் வாய்ப்பு வந்ததுதான் ஆச்சர்யம்.  ஓரளவு எழுதப்படிக்க, ஆணைக்கு கட்டுப்பட தெரிந்துவிட்டாலே சம்பாதிக்கும் வாய்ப்பை கொடுக்கும் வணிகமய காலம்!  

ஶ்ரீரங்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், கை வைத்த பனியன் அணிந்த, சந்துருவை பார்க்கும்போது அவன் அப்பா நினைவுக்கு வந்தார்.

“அப்பா எங்கே?” என்றேன்.

“அப்பா, அம்மா ரெண்டு பேரும், டெக்ஸாஸ்ல அண்ணா வீட்டில்.  க்ரீன் கார்ட் வாங்கியாச்சு.  தவிர அப்பாவுக்கு அண்ணா மேல பாசம் ஜாஸ்தி.” விட்டுக் கொடுக்காமல் பேசினாள் அகிலா.  சந்துருவின் அண்ணா அதி புத்திசாலி.  கோச்சிங் இல்லாத காலத்திலேயே திருச்சியிலிருந்து ஐஐடி போனவன் அவன்.  சந்துரு அதற்கு நேர் எதிர்.  எல்லா பாடங்களிலும் முப்பத்தைந்து வாங்க நொண்டி அடித்தவன்.  வராத படிப்பிற்காக, அவன் அப்பாவிடம் வாங்கிய அடிகள் எல்லாருக்கும் தெரியும்.  எப்படியோ நேஷனல் ஈவினிங் காலேஜில் பிஸிக்ஸ் கிடைத்தது.  குறைவாக மதிப்பெண் வாங்கிய பிராமணப் பையன்களின் புகலிடம் நேஷனல் ஈவினிங் காலேஜ்.  மூன்று வருடங்களில் அவன் படிப்பை முடித்ததாக நினைவில்லை.  
 
“காலேஜுக்கப்புறம் முழுக்க இங்க தான் இருந்தியா?”  - மற்றொரு சம்பிரதாயக் கேள்வி.

“இங்கதான். அல்லூர் மாமாட்ட சொல்லி ரயில்வேஸ்ல வேலை.”  மறுபடியும் அகிலா பதில் சொன்னாள். அவனைப் பற்றி பேசுவதை அவன் பாராட்டியதாகத் தெரியவில்லை.

அகிலாவை எனக்கு சிறு வயதிலிருந்து தெரியும்.    பக்கத்து வீடு, பொறுப்பான பெண்.  படித்து தங்கைகளுக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டு, தனக்கு தேடும்போது வயது இருபத்தெட்டு.  அந்த வயதிற்கு சந்துரு தான் கிடைத்தான்.  

“பேசிண்டிரு.  காபி கொண்டுவரேன்.  சக்கர போடலாமா?"

“வேண்டாம்."

இதுவரை சந்துரு பேசவில்லை.  படிக்கும் காலத்திலும், அவன் அதிகம் பேசிய நினைவில்லை.  கணக்கில் குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காக எல்லோரும்  கேஆரிடம் அடி வாங்கிய போது, அவனும் வாங்கியிருக்கலாம்.  அது தவிர பேசியதற்காக அடி வாங்காத ஒரே மாணவன் சந்துருவாக இருக்ககூடும்.  இரண்டு இடங்களில் அடி வாங்க வேண்டாம் என்ற காரணத்திற்காக அவன் பள்ளியில் அமைதியாக இருந்திருக்ககூடும்.

“என்ன பண்ணிண்டு இருக்க?” என்றேன்.   
 
 “பாட்டர்ன் பத்தி சில ஐடியா இருக்கு.  அத வச்சு கர்மா தியரிய என்னால் ப்ரூவ் பண்ண முடியும்னு நினைக்கிறேன்."

சந்துரு பற்றி கேள்விப்பட்டது உண்மைதானோ என்று தோன்றியது.  முகத்தை நேராக வைத்துக்கொண்டு, “சொல்லு” என்றேன்.

“உலகம் இயங்குவதில் சில பேட்டர்ன் இருக்கு.  உதாரணத்திற்கு, இனப்பெருக்கத்திற்கு முட்டை, விந்து, கருத்தரித்தல் என்ற பேட்டர்ன் ஒரு வெற்றிகரமான பேட்டர்ன்.  பிற இனப்பெருக்க முறைகள் இருந்தாலும், கருத்தரித்தல் போல அவை வெற்றிகரமாக இல்லை.  அது மாதிரி, வடிகட்டி ஒரு பேட்டர்ன்.  நம்ம உடம்பில பல வடிகட்டிகள் இருக்கு.  நமக்கு தெரிஞ்சது - சிறுநீரகம்.  இது தவிர மூக்குல, காதுல எல்லாம் வடிகட்டிகள் இருக்கு. வெளில ஓஸோன் லேயர் ஒரு வடிகட்டி.  தாவரங்கள் நீரையும் சத்துக்களையும் எடுத்துக் கொள்ள வடிகட்டிகள்.  அது மாதிரி, நம்ம மூளைல இருக்கற நியூரான்கள நான் வடிகட்டிகளாக் பார்க்கிறேன்.  எலக்ட்ரானிக் சர்க்யூட்ல வடிகட்டிகள் இருக்கறாப்ல,  நியூரான்கள் ஒரு இயற்கையான வடிகட்டி.  குழந்தையா இருந்த போது, அதிகம் டெவலப் ஆகாத இந்த சர்க்யூட்கள், வயசாக ஆக டெவலப் ஆகி, ஒரு சிக்னலுக்கு ஒரே மாதிரியான அவுட்புட் தரும்.  பயந்தாங்குளித்தனம், அடாவடித்தனம் இதெல்லாம் இந்த சர்க்யூட் பண்ற வேல."

அகிலா வரும் வழியாகத் தெரியவில்லை.  கேட்பதற்கு ஆள் கிடைத்ததால், சந்துருவால் பேசுவதை நிறுத்தமுடியவில்லை.  

“சுற்றுச்சூழல், உணவு சத்து, உடல் நலம் போல பல விஷயங்கள் இந்த சர்க்யூட்டோட அமைப்ப நிர்ணயிக்கும்.   அதனால் ஒரு குடும்பத்துல ஒரே இடத்துல இருக்கறவங்களோட பேட்டர்ன் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்க வாய்ப்பு இருக்கு. ஒரு சிசுவஷனல இயற்கையா எலக்ட்ரான் ஓடிண்டு இருக்கும்.  அதோட டைரக்‌ஷன மாத்தறது இந்த கர்மான்னு சொல்லுவா.  இப்ப ஸ்கூல்ல வாத்தியார் அடிச்சா, அடி வாங்கிண்டு அழறது இயற்கையா இருக்கும்.  ஆனா அன்னிக்கு ராவோட ராவா படிப்ப விட்டுட்டு ஊர விட்டு ஓடறதுக்கு கர்மா உதவும்.  அதாவது உன்னோட சிந்தனைய மாத்தறது கர்மா."
 
“உன்னோட நியூரான்களின் அமைப்பும், வெளிலேர்ந்து வரும் சிக்னலும் உன்னோட சிந்தனைய பாதிக்கும்.   இந்த பாதிப்பு ரீ-என்றன்ட் ஆக இருக்கு.  ரீ-என்றன்ட்ன்னா தன்னைத் தானே மாத்திக்க ஒரு புரோகிராமுக்கு இருக்கற சக்தி.  படிச்சிருப்பயே?"

என் பதிலுக்கு அவன் காத்திருக்கவில்லை.  என்னிடமும் பதில் இல்லை.

“அதாவது நியூரல் நெட்ட இன்னும் திடப்படுத்திக்கும்.  பழகின எடத்துக்குப் போக நாம ஒண்ணும் யோசிக்கத் தேவையில்ல இல்லயா, அதான்.  அதாவது இன்னிக்கு நீ ஊர விட்டு ஓடலைன்னாலும், இன்னும் நாலஞ்சு தடவ அடி வாங்கினா  ஆட்டமாடிக்கா ஓடிடுவ." 

"இந்த சிக்னல் எல்லாம் எப்போதும் சுத்திண்டு இருக்கும்.  பூமிய சுத்திண்டு இருக்குமான்னு திட்ட வட்டமா தெரில.  ஆனா சுத்திண்டு இருக்கும்."

என் மௌனம் எனக்கே சங்கடமாக இருந்தது.  “சிக்னல்னா, எலக்ட்ரோ மாக்னடிக்கா?” என் மௌனத்தை உதறினேன்.

“அனேகமா எலக்ட்ரோ மாக்னடிக் இல்லை.  சப் அடாமிக் பார்ட்டிகளாக இருக்கலாம்.  நியூட்டிரீனோ, ஹிக்ஸ் போஸான் மாதிரி ஏதாவது இருக்கலாம்.  இப்ப ஒரு நிலமைல இந்த சர்க்யூட் ஊர விட்டு ஓட வெச்சா, இதே சர்க்யூட் சிக்னல் ரிவர்ஸ்ல வரும்போது வாத்தியார பாத்தா ஒளிஞ்சுக்கர பயந்தாங்குளித்தனத்த கொடுக்கும்."

“ஆனா இது ஒண்ணும் மாத்த முடியாததுன்னு இல்ல.  நியூரான்கள்ல கொஞ்சம் நெகிழ்ச்சி இருந்தா, சர்க்யூட் வேற மாதிரி நடந்துக்கும்.   நியூரான்களின் சர்க்யூட்ல நேனோ மீட்டர் அளவுல வித்தியாசம் இருந்தால்கூட எலக்ட்ரானோட ஓட்டம் மாறலாம்.  இன்னும் நிறைய படிக்கணும்னு பார்க்கிறேன்.  முடியல…”  
 
நல்ல வேளை, அகிலா காபியுடன் வந்தாள்.  “ஹீ ஈஸ் டிஸ்லெக்ஸிக்.  இப்ப பிறக்கிற குழந்தைகளுக்கு டிஸ்லெக்சியா இருந்தால் சமாளிக்க வழி இருக்கு.  அப்ப இல்ல.” விரக்தியுடன் புன்னகை செய்தாள்.  ஆனால் அவள் சந்துரு மேல் அசாத்திய மரியாதை வைத்திருப்பதாகத் தெரிந்தது.  காதலாகவும் இருக்கலாம்.

“ஐன்ஸ்டைன் கூட டிஸ்லெக்ஸிக்னு ஞாபகம்.”  எனக்கே அப்படி சொன்னது அசட்டுத்தனமாகத் தோன்றியது.

“நீ நியூ ஜெர்ஸில தான இருக்க.  ப்ரின்ஸ்டன் யுனிவர்ஸிடி பிஸிக்ஸ் டிபார்ட்மெண்ட்ல யாராவது தெரியுமா?"

என் வட்டம் வாராவாரம் சக இந்தியர்களுடன் கூட்டாஞ்சோறு சாப்பிடுவதோடு நிற்கிறது.    இல்லை என்று தலை ஆட்டினேன்.

வெளியே வந்து ரங்க ரங்கா கோபுரம் அருகே கோலக்குழாய்களை பார்த்தபோது, வடிகட்டி நினைவுக்கு வந்தது. 

  

No comments: