Sunday, May 05, 2024

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே

சில வரலாறு தொடர்பான புத்தகங்களை மொழிபெயர்க்க வாய்ப்பு கிடைத்தது. அதின் மூலம் வெகுஜனங்களைக் குறி வைத்து எழுதப்படும் வரலாறு பற்றி புரிந்தது.

வரலாறும் பிற ஆராய்ச்சித் துறைகளைப் போல வறண்டதே. அசாத்திய பொறுமையும் ஊகிக்கும் திறனும் இருந்தால் வரலாற்றை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.   அதை வெகுஜனங்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும் என்றாலும் அதற்காக அடிப்படைகளில் கை வைக்கக் கூடாது.  வரலாற்றுக் கட்டுரையை தினத்தந்தி தலைப்பு போல எழுதுவது ஆராய்ச்சிக்கு இழைக்கப்படும் அநீதி.  

பொது மக்கள் வரலாற்றை மறந்து விடக்கூடாது என்பதற்காக இலக்கியங்கள் பயன்பட்டன.  அவை வரலாற்றை சுவாரஸியமாக்கின. உதாரணத்திற்கு நமது இதிகாசங்கள்.  வெவ்வேறு காலகட்டத்தில் அவற்றில் உப கதைகள் சேர்க்கப்பட்டு, பல்வேறு கால சரித்திரங்கள் அவற்றில் மறைந்துள்ளன.  

மகாபாரதப் போரில் பாண்டியர்கள் பங்கு பெற்றனர் என்பது உண்மையா, பொய்யா என்று தெரியாது.  ஆனால், மகாபாரதம் எழுதப்பட்ட போது, பாண்டியர்கள் தென்னாட்டில் ஆதிக்கம் செலுத்தினர்;  அவர்கள் வட நாட்டிலும் புகழ் பெற்றிருந்தனர் என்று தெரிகிறது.   இதற்கு மற்றொரு உதாரணம் - அக நானூறிலும் புற நானூறிலும் 'மோரியர்' என்று மௌரியர்களைக் குறிப்பிடும் பாடல்கள் உள்ளன.  இவற்றைக் கொண்டு புற நானூறு எழுதப்பட்ட காலம் மௌரியர் காலம் என்று எடுத்துக் கொள்ள முடியாது.  மௌரியர்களின் புகழ் நாடெங்கும் வீச அது இலக்கியத்திலும் இடம் பெற்றது.

வரலாற்றுப் பின்னணியில் எழுதப்படும் கதைகளையும் நாம் இப்படித்தான் பார்க்க வேண்டும்.  பொன்னியின் செல்வன் வரலாறு அல்ல.  வரலாற்றின் மீது ஈடுபாடு வரவழைக்கும் ஒரு சுவாரஸியமான (?) மர்மக் கதை. அவ்வளவு தான்.  கதைகளையும் வரலாற்றையும் குழப்பிக் கொள்வதால் பெரும் அனர்த்தம் நிகழ வாய்ப்புள்ளது.  உதாரணத்திற்கு:

செப்பேடு ஒன்றில் ஆதித்த கரிகாலன் இளம் வயதில் இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.  அவன் கொல்லப்பட்டதாகவோ, தற்கொலை செய்து கொண்டதாகவோ, பாம்பு கடித்து இறந்ததாகவோ எதுவும் கூறப்படவில்லை.  மற்றொரு தரவில், ஆதித்த கரிகாலன் மரணத்தில் கொலையில் சம்பந்தப்பட்டதாக நான்கு பிராமணர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டு அவர்கள் நாடு கடத்தப்பட்டனர் என்ற தகவல் கிடைக்கிறது.  கிடைத்துள்ள தகவல்கள் இவை மட்டுமே.  இவை உண்மையாக இருக்க அதிக சாத்தியம் உள்ளது.  செப்பேடுகள் பெஸ்ட் செல்லர்ஸாக போட்டி போட்ட காலம் இருந்ததாக நமக்குத் தகவல்கள் இல்லை.

வரலாற்று ஆய்வாளவர் நீலகண்ட சாஸ்திரி, ஆதித்த கரிகாலன் இறப்பில் உத்தம சோழனுக்கு ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற ஒரு ஊகத்தை மட்டும் முன்வைக்கிறார்.   (பார்க்க - உடையார்குடிக் கல்வெட்டு ஒரு மீள்பார்வை - பொங்கு தமிழ் - கருத்துக்களம் (yarl.com))

இதைப் படித்த முதல் வெகுஜன வரலாற்று ஆசிரியர் - ஆதித்த கரிகாலனை, உத்தம சோழன் சூழ்ச்சி செய்து கொன்றான் என எழுதுவார்.  சுவாரஸியம் தேவை பாருங்கள்!  இரண்டாவது வெவாஆ - உத்தம சோழனுக்கும் இராஜராஜ சோழனுக்கும் ஒரு ரகசிய உடன்பாடு இருந்ததோ என்ற சந்தேகத்தை முன்வைப்பார்.  மூன்றாவது வெவாஆ - இந்த உடன்பாடு இருந்தது என்ற தொனியில் எழுதுவார்.  (இப்படிப்பட்ட வரலாறு ஏற்கனவே எழுதப்பட்டு புத்தகமாக வந்து விட்டது.)  தமிழ் சினிமா பாதிப்பில், நான்காவது வெவாஆ - ஆதித்த கரிகாலனும் இராஜராஜனும் ஒரு தாய்க்குப் பிறந்தவர்களல்ல என்று எழுதுவார். ஐந்தாவது வெவாஆ - ஆதித்த கரிகாலனின் தாய் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர் என்று எழுதுவார்.  அவரவர் வசதிக்குத் தானே வரலாறு.  பேரார்வம் மிக்க இளைய தலைமுறை திரைப்பட இயக்குனர் இதை இரு ஜாதிகளுக்கு இடையே நடந்த போர் என்று படமெடுப்பார்.  வரலாற்றுக்கு வீடு பேறு கிடைத்திருக்கும்.

வெகு ஜனங்கள் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் வரலாறு ஆர்வலர்களுக்கு குறைந்த பட்சம் தரவுகளையும் ஊகங்களையும் பிரித்துக் கூறும் வழக்கம் வேண்டும்.  வரலாறு என்ற பெயரில் கதை சொல்வது வரலாற்றுக்கு இழைக்கப்படும் துரோகம்.


1 comment:

Kumar said...

Good one anna. Shared in FB but couldn't tag you there

One law for all - Ignoring Subjectivity*

A recent incident in my apartment complex highlighted a concerning disparity: businessmen seem to operate under a different set of rules. Wh...