[இந்தக் கதையில் வரும் சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே. இந்தக் கதையின் கரு கார் ஓட்டும் ஒரு நண்பர் கொடுத்தது. அவர் செய்ய நினைத்ததாக விளையாட்டாகக் கூறியதை சற்றே மசாலா தடவி பொறித்துள்ளேன்.]
மோசஸுக்கு எதேச்சையாகத் தான் அந்த யோசனை தோன்றியது. ஊழியத்திற்குப் போக முடியாமல் பணியின் அழுத்தம். வாக் இன் இண்டர்வ்யூ என்று ஏதாவதொரு நகரத்திற்கோ, சிற்றூருக்கோ வாராவாரம் அலைச்சல். திங்கட்கிழமை காலை தவறாமல் பாஸ்டர் கூப்பிட்டு விடுவார். பிளாக் செய்யலாமா என்று கூட யோசித்திருக்கிறான். உடனே எடுக்காவிட்டாலும், மரியாதைக்காக பின்னர் கூப்பிட்டுவிடுவான். ஒரு திங்கட்கிழமை தவறு செய்ய சிறு வாய்ப்பை பாஸ்டர் கொடுத்தார்.
இண்டர்வ்யூ முடிந்து ஆஃபர் லெட்டர் தயாரிக்கும் பணியில் இருந்த போது பாஸ்டரின் அழைப்பு வந்தது.
"நீங்க வேலை விஷயமா ஊர் ஊரா அலையுறீங்க. எத்தனை பேரை சந்திப்பீங்க! அதுல ஒருத்தர் கிட்ட கூட நீங்க கர்த்தர் பற்றி கூட பேசியிருக்க மாட்டீங்களா என்ன? உங்களோட நம்பிக்கை பற்றி எனக்குத் தெரியும். பேசியிருந்தீங்கன்னா அவங்க பெயர், விவரங்களை அனுப்புங்க. நம்ம காங்கரகஷன்ல எண்ணிக்கை குறைவா இருக்குல்ல.."
"கட்டாயம் அனுப்புறேன் பாஸ்டர். உங்களை நேரே சந்திக்கும்போது இதப் பத்தி பேசலாம்னு" என்று இழுத்தான்.
"அது நிச்சயம் பேசலாம். இப்போதைக்கு விவரங்களை அனுப்புங்க..." அலுப்புடன் பாஸ்டர் உரையாடலை முடித்துக் கொண்டார். லேசாக குற்ற உணர்ச்சி இருந்தது.
வந்திருந்த விண்ணப்பங்களைப் பார்த்தான்.
நெற்றியில் பொட்டோ, தலையில் பூவோ இல்லாத அந்தப் பெண்ணின் போட்டோவைப் பார்த்த போது தான் அந்த யோசனை தோன்றியது. பெண்ணின் முகவரி தான் வசிக்கும் பகுதியில் இல்லை என்பதை நிச்சயம் செய்து கொண்டு, ஹிந்து பெயராக இருந்த அந்தப் பெண்ணின் பெயரையும் முகவரியையும் எடுத்து வாட்ஸப்பில் பாஸ்டருக்கு அனுப்பினான்.
வாராவாரம் சில ஆண்கள், பெண்களின் விவரங்களை அனுப்பி வைத்தான். புகைப்படத்தைக் கொடுக்க வேண்டியிருந்தால் இருக்கட்டும் என்று பூ, பொட்டில்லாத பெண்களை மட்டும் தேர்ந்தெடுத்தான். முதல் கட்ட விசாரணையிலேயே அவன் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. மனித வளத்துறையில் இருந்ததால், அவர்களின் குடும்பப் பின்னணி ஓரளவுக்குத் தெரிந்திருந்தது. அதை வைத்து கொஞ்சம் கற்பனை சேர்த்து, பாஸ்டருக்குத் தெரிவித்தான்.
கிறிஸ்மஸ் காலத்தில் பாஸ்டரை நேரே சந்திப்பதைத் தவிர்க்க முடியவில்லை. அவனைப் பாராட்டி தனது அறைக்கு அழைத்து "உங்கள் சேவைக்கு நமது சர்ச்சிலிருந்து ஒரு சிறு பாராட்டு" என்று ஒரு கவரைக் கொடுத்தார். அதில் பத்தாயிரம் ரூபாய் இருந்தது.
இப்போது மோசஸுக்கு அடுத்த கட்ட யோசனை தோன்றியது. அடுத்த வாரம் பாஸ்டரை சந்தித்த போது, ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, "... அந்தப் பெண் கிட்ட தசம பாகம் பத்தி சொன்னபோது, தன்னிச்சையா தன்னோட சம்பளத்திலிருந்து ஆயிரம் ரூபாயைக் கொடுத்திச்சு. பாப்டிஸம் கூட பண்ணல.. கர்த்தரோட கருணை அவங்கள அப்படி மாத்தியிருக்கு."
அடுத்த சில மாதங்களில், பாஸ்டர் ஞானஸ்னானத்தைப் பற்றி அதிகம் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மோசஸின் ஊழியத்தால் அவர் தனது டார்கெட்டை அடைந்திருந்தார். அவருக்கு மேலிடத்திலிருந்து வர வேண்டியவை தடையின்றி வந்து கொண்டிருந்தது. மனிதர் ஒரு சுற்று பருத்தது போல இருந்தார்.
மோசஸுக்கு தான் செய்வது குற்றமாகத் தோன்றினாலும், அவ்வப்போது "நான் யாருக்கும் கெடுதல் நினைக்கலையே", "லவ் ஜிஹாத், காசுக்காக மதம் மாத்தறதுன்னு மனிதர்கள் இருக்கும் காலத்தில், நான் யாரையும் தவறான வழியில் மதம் மாற்றவில்லையே...நான் செய்வது தப்பே இல்லை" என்று சமாதானப்படுத்திக் கொள்வான்.
ஆறு மாதத்தில் மோசஸுக்கு மூன்று லட்ச ரூபாய் கிடைத்திருந்தது. முப்பதாயிரம் வரை மற்றவர்களின் தசமபாகமாகக் கொடுத்திருந்தான். இந்த விளையாட்டு இத்துடன் போதும் என்று முடிவு செய்து கொண்டான். பங்களுரில் வேறொரு பன்னாட்டு கம்ப்யூட்டர் கம்பெனியில் வாய்ப்பு கிடைத்த போது, தயங்காமல் ஒப்புக் கொண்டான்.
மோசஸிடமிருந்து அவனுடைய தொடர்புகளிடமிருந்து வர வேண்டிய தசம பாகம் நின்றது பாஸ்டரை குழப்பத்தில் ஆழ்த்தியது. ஊழியத்திற்கு வந்திருந்த உறுப்பினர்களிடம் மோசஸ் கொடுத்த புதிய கிறிஸ்துவர்களின் முகவரிகளைப் பிரித்துக் கொடுத்து, விசாரிக்க அனுப்பினார்.
அடையார் ஆரக்ஷணியும், அண்ணா நகர் அஸ்விதாவும், திருவான்மியூர் அவந்திகாவும் முன்பின் தெரியாத பெந்தகொஸ்தெ மனிதர்களுக்கு எப்படி அவர்களுடைய முகவரி கிடைத்தது என்று குழம்பிக் கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment