(படம் உபயம்: விமலாதித்த மாமல்லன்)
இதைப் பற்றி ஏற்கனவே அரைகுறையாக ஒரு விமர்சனத்தை வைத்துவிட்டேன். புத்தகத்தை முழுவதும் படித்தபின் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.
விமாவைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்த நாவல் அவரது அனுபவங்களிலிருந்து எழுதப்பட்டது என்று தெரிந்திருக்கும். திடுக்கிடும் திருப்பங்கள், அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் என்று எதுவும் இல்லாமல், 1980களில் இலக்கிய உலகில் சாதிக்க நினைத்த ஒரு இளைஞனின் அலுவலக, இன்ன பிற அனுபவங்களை சாவகாசமாக நடந்ததை நடந்தபடி விவரிக்கும் நாவல் இது. நாவல் முழுவதும் நாயகனுக்கானது. நாவல் முழுவதும் வரும் நண்பர்களும், இலக்கியவாதிகளும் சூழலைத் தருவதோடு வேறு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை - இரண்டு மூன்று பேரைத் தவிர.
சுந்தர ராமசாமி தோன்றும் அத்தியாயங்கள் அருமை. அற்ப விஷயங்களுக்குக் கூட அடித்துக் கொள்ளும் இலக்கிய உலகில் அவருக்கு இருந்த மரியாதையும் அதற்குக் காரணமான அவர் குணமும் அந்த அத்தியாயங்களில் வெளிப்படுகின்றன. இன்னும் சில நல்ல மனிதர்கள், பல சாதாரண மனிதர்களும் நாவலில் வந்து போகின்றனர்.
திரும்பத்திரும்ப நண்பர்களை சந்தித்து (வம்பு) பேசுவதே இலக்கியமா என்ற கேள்வி எழக்கூடும். அந்த கால சென்னை, அப்படி ஒன்று இருந்ததா என இன்றைக்குத் தோன்றும் அன்றைய வழக்கங்கள், சூழல்கள், ஆளுமைகள் படைப்பை சுவாரஸியமாக்குகின்றன. 1152 பக்கங்களை ஈடுபாட்டுடன் படிக்க வைப்பதே விமாவின் சாதனை. இக்கால இலக்கியம், உரைநடைகள், பேச்சு வழக்குகளில் கூட உவமைகள் மறைந்து கொண்டிருக்கின்றன என்று இரு பதிவுகளில் புலம்பியிருந்தேன். அது என் அறியாமையாகவும் இருக்கலாம். திரி ஸ்டவ்விற்கு நாடாளுமன்ற கட்டிடத்தை உவமையாகக் கூறும் விமாவின் பல உவமைகள் பிரபலமாக வேண்டும். நாவலாக இருந்தாலும், ஆயிரம் பக்கங்களுக்கு மேல், இலக்கிய வட்டச்சூழலையும் கொண்டு பார்க்கும் போது பின் நவீனத்துவம் போன்ற சொற்களை பயன்படுத்தி சாவடிக்காமல் இருக்கவும் ஒரு திறமை வேண்டும்.
மாமல்லனுடன் நடந்த இரண்டு மூன்று உரையாடல்களையும், அவர் எழுத்துகளையும் வைத்துப் பார்க்கும் போது, அவர் ஒரு ஒத்துழைக்கக் கடினமான perfectionist, நச்சரிப்பவர் என்று புரிந்து கொண்டேன். அதற்கு மேல் அவருக்கு இருந்த பிடிவாதம், லட்சியம், (சராசரியை விட அதிக) நேர்மை போன்றவை ஆபீஸின் நாயகனால் தெரிய வருகின்றன. தாரளமயமாக்கத்திற்கு முந்தைய சூழலில் தான் அப்படிப்பட்ட ஆளுமைகள் சாத்தியமோ! 1990கள் அவனை எப்படி மாற்றியிருக்கும்?
தமிழில் கதைப் புத்தகங்கள், நாவல்கள் ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பது சாதனை என்று ஒரு பதிப்பாசிரியர் தெரிவித்தார். (பிற புத்தகங்களின் நிலை அதை விட மோசம்.) இதை தமிழ் புத்தக சந்தையின் நிலைமையாகக் காண்கிறேன். பல பதிப்பகங்கள், நல்ல தரத்தில் புத்தகங்களை வெளியிடும் அளவுக்கு முன்னேறியிருந்தாலும், தமிழ் படிப்பவர்கள் குறைந்து வருகின்றனர். இந்தச் சூழலில், இப்படி ஒரு புத்தகம் எழுதி அதை வெற்றிகரமாக விற்றும் வருகிறார் விமாலத்தித்த மாமல்லன். கொஞ்சம் நம்பிக்கை வருகிறது. புத்தகக் கண்காட்சியில், விற்பனை ஆயிரத்தைத் தொட்டால் பெரும் மகிழ்ச்சி.
No comments:
Post a Comment