Saturday, December 24, 2011

தாத்தாவும் கப்பல் ஒட்டிய தமிழர்களும்

வருடம் 1961.
 
ஒரு வழியாக தாத்தாவை சம்மதிக்க வைத்தாகி விட்டது.  அவரும் அதிகம் பயன் படுத்தாத ஒரு சட்டையை மாட்டிக்கொண்டுவிட்டார்.  ரேழியில் செருப்பை மாட்டிக்கொள்ளும்போது கொஞ்சம் யோசிப்பது போல நின்றார்.

வீட்டில் எல்லோருக்கும் மிக ஆச்சர்யமான விஷயம் - தாத்தா சினிமாவிற்கு கிளம்புவது.  சினிமா பற்றி அவருக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது.   அவர் கடைசீயாக பார்த்த படம் நாகையா நடித்த சக்ரதாரி. சினிமா போய்விட்டு லேட்டாக வீட்டுக்கு வருவது இன்னும் கோபத்தை கொடுக்கும்.  ஒரு முறை மரியாதைக்குரிய மாப்பிள்ளையைக்கூட வெளியே நிறுத்தி வைத்திருக்கிறார்.

அப்படிப்பட்ட தாத்தா பார்க்கக் கிளம்பியது - கப்பலோட்டிய தமிழன் படம் பார்ப்பதற்கு.  அவரை சம்மதிக்க அப்பாவும், சித்தப்பாவும் பகீரத பிரயத்தனம் செய்தார்கள்.  பரம எம்ஜியார் ரசிகரான சித்தப்பா, இதுவரை 5 தடவை ஒரு சிவாஜி படம் பார்த்தது இதுவே முதல் முறை.  ஒவ்வொரு நாளும் பார்த்துவிட்டு, பிழியப்பிழிய அழுது, சிவந்த கண்களுடன் வருவது எல்லாருக்கும் தெரியும்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிக்கும் தாத்தாவிற்கும் அறிமுகம் உண்டு.  அந்த அனுபவத்தை தாத்தா சொல்ல கேட்டிருக்கிறேன்.

"நான் அப்ப மெடிகல் டிரைனி.  என்னோட சீனியர் வ.உ.சிக்கு செக்-அப் செய்ய என்னை அனுப்பினார் - இன்சூரன்சுக்கு.  நான் போன போது, அவர் இல்லை.  அவர் வீட்டு அம்மா அடுப்பு, பாத்திரம் , அரிசி, காய் கொடுத்தா, நானே சமைச்சு சாப்பிட.  (இது நடந்தது 1920களில்). அடுத்த நாள் காலையில் அவர் வந்தார், நான் செக்-அப் செஞ்சு ரிபோர்ட் எழுதிட்டு வந்துட்டேன்."  இதை சொன்னபின் ரொம்ப நேரம் வ.உ.சியை சந்தித்த அனுபவத்தை அசை போடுவார் போல அமைதியாய் இருப்பார்.

வ.உ.சியில் ஆளுமை தாத்தாவை மிகவும் கவர்ந்திருக்க வேண்டும்.  பின் குடும்பம், பொறுப்பு என்று வந்த பின், காங்கிரசை ஆதரிப்பது, கதர் ஆடை அணிவதை தாண்டி, வ.உ.சி பற்றியோ,  சுதந்திரப்போராட்டம் பற்றியோ அவர் அதிகம் ஈடுபாடு காண்பித்ததில்லை.   சுதந்திரப்போராட்டம் பற்றிய படம் என்பதால் அவர் கொஞ்சம் மனம் மாறி சினிமா பார்க்க ஒத்துக்கொண்டிருக்கலாம்.

மீண்டும் 1961 .  கிளம்ப தயாரான தாத்தா நின்றார்.  "வேணாண்டா.  இந்த படம் பாத்ததுக்கப்புறம் எனக்கு வ.உ.சி முகம் ஞாபகம் இருக்காது, அந்த கூத்தாடி (sic ) முகந்தான் ஞாபகம் இருக்கும்.  Allow me to  retain the memory of Chidambaram Pillai."

சட்டையை கழற்றிவிட்டு வெற்றிலை போட ஆரம்பித்து விட்டார்.  அதற்குப்பிறகு அப்பாவோ, சித்தப்பாவோ அவரை வற்புறுத்தவில்லை.   ஒவ்வொரு தடவையும் சிவாஜி படம் பார்க்கும்போது, இந்த நிகழ்ச்சியை நினைவுகூற சித்தப்பா மறப்பதில்லை.

No comments:

Guilt, Fear and their effects

A senior gentleman passed away early this morning near my place.  Nothing unusual about elderly people passing away.  His son was away in fo...