Saturday, February 08, 2014

பழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு சிங்கம்

இந்திரா நகர் ஸ்டேஷன் பக்கத்தில் உள்ள நடை பாலத்தில் நடக்கும் போதே கீழே சிங்கத்தைப் பார்த்து விட்டேன். நன்கு வளர்ந்த ஆண் சிங்கம். உட்கார்ந்து இருந்ததால் முழுமையான உயரம் தெரியவில்லை. முகமும் பிடரியும் உட்கார்ந்தவாக்கிலே மூன்று நான்கடி உயரம் இருக்கும். ஏனோ திரும்பி ஓடத் தோன்றவில்லை. சிறு தயக்கத்துடன் இறங்க ஆரம்பித்தேன்.

வழக்கமாக நான் அலுவலகம் செல்லும் நேரத்தில் அங்கு சிங்கம் இருப்பதில்லை. அவ்வப்போது சில சோம்பேறி நாய்கள் தூங்குமூஞ்சி மரத்தடியில் இருப்பதுண்டு. அந்த சிங்கம் அங்கு எப்படி வந்திருக்கும் என்று யோசித்தேன். அடையாரின் அந்த பகுதிக்குப் பெயர் கானகம். ஒரு வேளை வழி தவறி கானகத்திலிருந்து வெளியே வந்திருக்கும் என்றால், முன்னூறு வருடங்களாக ஒரு சிங்க பரம்பரை உள்ளே இருந்திருக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை. மேலும் கானகம், சதுப்பு நிலக்காடாக இருந்திருக்க வேண்டும். அப்படிப் பட்ட காட்டில் சிங்கம் இருக்காது. சிங்கத்திற்கு உகந்த இடம், மரம் அருகிய வெப்பமண்டலச்சமதளப் புல்வெளி. சதுப்பு நிலக்காடோ, கான்க்ரீட் காடோ அல்ல.

நடை பாலத்தின் படிக்கட்டுக்கு எதிரே ஒரு அரசியல் கட்சியின் விளம்பரம், தட்டி மீது ஒட்டப்பட்டிருக்கும். தலைவருக்குப் பின்னால் ஒரு சிங்க முகம் இருக்கும். இன்று அந்த முகம் விளம்பரத்தில் இல்லை. கீழே முப்பரிமாணத்தில், குப்பைத்தொட்டி அருகே அமர்ந்த நிலையில் இருந்தது. அங்கு இருக்க வேண்டிய சோம்பேறி நாய்கள், சிங்கத்தை மிக மரியாதையுடன் பார்த்துக் கொண்டிருந்ததாக எனக்குத் தோன்றியது. குப்பைத்தொட்டி மீதும், சிங்கத்திற்குப் பக்கத்திலும் ஒன்றிரண்டு காகங்கள் உற்சாகமாகவே காணப்பட்டன.

பரபரப்பான பழைய மகாபலிபுரம் சாலைக்கு மாறாக இருப்பது இந்த இடம். அதிகம் வாகனங்கள் வர வேண்டாத இடம். பெரும்பாலும் கல்வி நிலையங்களும், ஒன்றிரண்டு அரசாங்க அலுவலகங்களும் இருக்கும் இடம். பத்து மணிக்கும் முன் வந்ததால் பாலிடெக்னிக் மாணவமாணவிகள் சிலர் பள்ளிக்கு ஓடுவதைப் பார்க்கலாம். இப்போது கோடை விடுமுறை என்பதால் அவர்களும் இல்லை.

வெய்யில் அதிகம் இல்லாதபோது முன்பெல்லாம் ஒரு போலீசும் பேச்சுத்துணைக்கு இன்னொரு போலீசோ யாரவது டாக்சி டிரைவரோ இருப்பார்கள். பாலிடெக்னிக்கும் இன்ன பிற கல்வி நிலையங்களும் விடுமுறை என்பதால் அவர்கள் சமீப காலமாக இருப்பதில்லை.

மாலை நேரங்களில் ஐஸ் விற்கும் ஒரு பெண்ணும், கடலை விற்கும் ஒரு ஆணும் இருப்பார்கள். காலையில் மோர் விற்கும் ஒரு ஆள் இருப்பார். அந்த ஆளை இன்னும் காணவில்லை. ஆனால் அந்த வண்டி மட்டும் அங்கு இருந்தது.

நான் படி இறங்கி சாலைக்கு வந்த பொது, எனக்கும் சிங்கத்திற்கும் இடையே பத்தடி தூரமே இருக்கும். சிங்கத்தின் நிதானம் எனக்கு ஒரு தெம்பை கொடுத்திருக்க வேண்டும். அதன் முகத்தைப் பார்த்துக்கொண்டே மெதுவாக அதைக் கடந்தேன். சிங்கம் என்னையோ, சுற்றி இருந்த நாய், காகங்களையோ சிறிதும் சட்டை செய்யவில்லை. ஒரு ஜென் துறவி போல வெயிலையும், மர நிழலையும் அனுபவத்துக் கொண்டிருந்தது.

காடு பற்றிப் படித்ததாலும் டிஸ்கவரி சானல் சில சமயம் பார்த்ததாலும் சிங்கம் போன்ற விலங்குகளுக்கு முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஓரளவுக்கு தெரிந்து இருந்தது. முகலாய மன்னர்களின் அவையோன் போல பின் புறமாகவே மெதுவாக நடந்தேன். விலங்குகள் தாக்கத் தயாரானால் உயரத்தை அதிகப்படுத்தி காண்பிக்க வேண்டும். அதற்கும் தயாராக முதுகில் மாட்டி இருந்த கணினிப் பையை தோளில் வைத்துக்கொண்டேன்.

இன்னும் நூறடி தான். வாகன சந்தடி நிறைந்த சந்திப்பு வந்து விடும். நகரத்தானுக்கு உரிய, காட்டுத்தனமான போக்குவரத்தில் தன்னை காத்துக்கொள்ளத் தெரிந்த சென்னைவாழ் பாதசாரிக்கு, ஒரு படத்திலிருந்து இறங்கிய சிங்கம் ஈடாகாது. நான் தப்பித்து விடுவேன்.

என் பயம், தற்காப்பு, சாமர்த்தியம் எதுவும் எதுவும் சிங்கத்தை ஒன்றும் செய்ய வில்லை. ஒரு நிறைவோடு திருப்தியாகவே இருந்தது. பரபரப்பான சாலையில் செல்லும் யாரும் சிங்கம் இருப்பதையே பொருட்படுத்தவில்லை. அவரவர்க்கு அவரவர் வேலை. போக வேண்டிய இலக்கை நோக்கி, பிறருக்கு வழி விடாமல் விரைந்து செல்லப் பழகப் படுத்திய வாகனங்களில் அவர்கள் பறந்து கொண்டிருந்தார்கள்.

அலுவகத்திற்குச் செல்ல, நான் திரும்ப வேண்டிய சந்திப்பை நெருங்கி விட்டேன். எல்லா பக்கங்களிலிருந்தும் வாகனகள் வர, அவற்றை சமாளித்து, அவற்றிற்காக ஒதுங்கி, சிங்கத்திடமிருந்தும் தப்பித்து இடது புறம் திரும்பினேன்.

நாளை ஐஸ் விற்கும் பெண்ணோ, கடலைக்காரனோ அல்லது போலீசோ சீக்கிரம் வந்தால் பரவாயில்லை.

No comments:

One law for all - Ignoring Subjectivity*

A recent incident in my apartment complex highlighted a concerning disparity: businessmen seem to operate under a different set of rules. Wh...