Sunday, July 12, 2015

ஜட்ஜ்மென்ட் டே

அந்த அறையில் ஒன்றிரண்டு மனிதர்கள் தவிர எல்லாரும் பிற உயிரினங்கள்.  அதில் மிகச்சில உயிரினங்களே, அவனுக்குப் பரிச்சயமானவை.  ஒன்றை ஒன்று தின்னும் இனமானாலும், அவை மிக அமைதியாக இருந்தன.  சமரசம் உலாவும் இடம் என்று நினைத்துக்கொண்டான்.

கதவு திறந்து, ஒரு புழு வெளியே வந்தது.  அவனைப்பார்த்து சிரித்தாற் போல இருந்ததால், அவனும் லேசாக சிரித்து வைத்தான். அருகே வந்தபோதுதான் தெரிந்தது அதன் முகமே அப்படித்தான் என்று. 

“என்ன கேட்டாங்க?” என்றான்.  

“என்ன செஞ்சன்னு கேட்டாங்க.  தின்னது, செத்ததை சொன்னேன்.  அடுத்ததா மீன்னு சொல்லிட்டு போகச்சொல்லிட்டாங்க.”

தீர்ப்பில் புழு திருப்தியாக இருப்பதாகத் தோன்றியது.  அவனுடைய முறைக்காக காத்திருந்த்தான்.  

“உள்ளே வாங்க.  ” என்ற குரல் கேட்டதும் எழுந்து உள்ளே சென்றான்.  வசீகரமான ஒரு இளைஞன் புன்முறுவலுடன் வரவேற்றான்.

"வி அசோக் தானே?” என்று உறுதி செய்துகொண்டு, "இங்க இருக்கிற ப்ரோஸீஜர முதல்ல உங்களுக்கு சொல்லிடறேன்.  அதற்கப்புறம் ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.” என்று ஆரம்பித்தான்.

“உங்களோட அடையாளம், கர்ம வினைகள் எல்லாத்தையும் இப்ப சரி பார்த்து விடுவோம்.  எங்க ஸிஸ்டம்ல தப்பு வர வாய்ப்பு கம்மி.  உங்க உலக குழப்பத்துல வந்தாலொழிய.” என்று சிரித்தான்.  அசோக்குக்கு சற்றே எரிச்சலாக இருந்தது.

"வி அசோக். வெங்கட்ராமனுக்கும், கீதாவிற்கும் பிறந்தவர்.  பிறந்த தேதி எட்டு, நாலு, ஆயிரத்து தொளாயிரத்து அறுபத்தி நான்கு.  உடன் பிறந்தவர்கள், ஒருவர், மூன்று வயது இளைய சகோதரன்.  பிறந்த இடம், மயிலாப்பூர்.  இறந்த போது வசித்த இடம் - ஆதம்பாக்கத்தில் ஒரு சந்து.”

ஆதம்பாக்க முகவரி பற்றி ஒரு கிண்டலை ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததனால், அசோக் எரிச்சல் படவில்லை.

“இந்த கோஆர்டினேட்ஸ் எல்லாம், உங்களுக்காக. எங்களுக்கு வேற ஒரு ஸிஸ்டம்.

எல்லாம் சரியாக இருக்கிறதா?”

அசோக் தலையாட்டினான்.  “சரின்னு சொல்லிடுங்க.  இவங்க கவனிச்சிருக்க மாட்டாங்க. ” என்று பக்கத்தில் கை காட்டினான். அப்போது தான் அந்த குள்ளனை அசோக் கவனித்தான். குள்ளன் ஒரு பலகையில் குறிப்பு எழுதிக்கொண்டிருந்தான்.  

“சரி” என்றான் அசோக்.

"மற்ற அடையாளங்களையும் சரி பாத்திடுங்க… “ என்று தொடர்ந்தான் இளைஞன்.  சரி பார்த்தபின்,

“அடுத்த அறைல, உங்க கர்மாவ செக் பண்ணுவாங்க.  அதுல டிஸ்ப்யூட் வர வாய்ப்பு இருக்கு.  அது கொஞ்சம் புது  ஸிஸ்டம்.  கலியுக ஆரம்பத்லதான் லைவ் ஆச்சு.  அதுக்கு முன்னாடி எங்க டிபார்ட்மெண்ட்லயே கர்மா செக் பண்ணிகிட்டு இருந்தோம்.  லோட் அதிகாமாச்சுன்னு, அத பிரிச்சு, புது ப்ராஸஸ் பண்ணிட்டோம்.” 

“ஏதாவது கேள்வி இருக்கா?”  என்றான்.

“எனக்கு முன்னால ஒரு புழு வந்தது.  அதுக்கும் இதே ப்ராஸஸ்தானா?”

“இல்லை. கொஞ்சம் வித்தியாசம் உண்டு.  அவங்களுக்கு எல்லாம், அடையாளம் அவ்வளவு முக்கியம் இல்லை.  கர்மாவும் ரொம்ப சிம்பிள். அதை எல்லாம் பெரியவர் பாக்க மாட்டார்.  எங்க ப்ராஸஸ்லயெ அடுத்த ஜென்மத்த முடிவு பண்ணிடுவோம்.  அனேகமா, எல்லா புழுவும் ஒரே பதிலத்தான் சொல்லும்.”

“அப்ப எதுக்கு கேள்வி?  நேர அடுத்த ஜென்மத்த சொல்லிட வேண்டியது தானே?”

“லட்சத்துல, கோடில ஒரு புழு ஏதாவது யோசிச்சு பதில் சொல்லும்.  அப்ப எங்க முடிவ மாத்திக்கணும்.  அதால யோசிக்க முடியுதுங்கறதால, நேரா மனுசனா பிறக்க ஆர்டர் போட்டுருவோம்.  கொஞ்சம் பூர்வ ஜென்ம வாசனை இருக்கும்.  ஆனா அதுக்குன்னு சில வேலைகளும் கிடைக்கும்.  சில நாய் எல்லாம் ஸ்க்ஸஸ்புல் ஸீஎக்ஸோவாகக்கூட ஆயிருக்காங்க.”

அசோக்குக்கு புரிந்ததுபோல் இருந்தது.

“க்ரிஸ்டியன்ஸ், முஸ்லீம் எல்லாம் இந்த ப்ராஸஸ்ல வருவாங்களா?”

“இல்லை.  அவரவர் நம்பிக்கைக்கு ஏத்தாப்பல ப்ராஸஸ் இருக்கு.  வேற கேள்வி இல்லைன்னா, நீங்க அடுத்த அறைக்கு போகலாம்.”

அடுத்த அறையில் ஒரு முதியவரும், ஒரு இளைஞனும் கூடவே இன்னொரு குள்ளனும் இருந்தனர்.

“உட்காருங்க. இங்க கொஞ்சம் நேரமாகும்.” என்றார் பெரியவர்.  

“உங்க தொழில், சீனியர் டேட்டா அனலிஸ்ட்ன்னு போட்டிருக்கு.  அத தகவல் இயந்திரத் தொழிலாளின்னு மாத்த வேண்டியிருக்கு.  நார்மலைஸேஷன்.”  என்றான் இளைஞன்.  அசோக் அதை விரும்பவில்லை.

“உங்க கணக்குல, இருபது பூஜைகள் இருக்கு.”

அசோக் யோசித்தான்.  கடந்த இருபத்தைந்து வருடங்களாக, அவன் தான் வீட்டில் பூஜை செய்து வருகிறான்.  வருடத்திற்கு, பொங்கல், வருடப்பிறப்பு, வினாயக சதுர்த்தி, கோகுலாஷ்டமி, சரஸ்வதி பூஜை என்று குறைந்தபட்சம் ஐந்து பூஜைகள் என்று வைத்துக்கொண்டாலும், ஒன்றிரண்டு வருடங்கள் விட்டுப் போயிருந்தாலும், இருபது, மிக குறைவாகவே இருப்பதாகப் பட்டது.

“நல்லாப் பாருங்க.  நூறாவது இருக்கும்.”

“நீங்க இந்த பூஜையெல்லாம் செய்யும்போது, மந்திரத்த தப்பா சொன்னாலோ, ஏதாவது வார்த்தைய விட்டாலோ இப்படி நடக்க வாய்ப்பு இருக்கு.  தப்பா நினைக்காதீங்க.  உங்க மந்திரம் எல்லாம் சரியில்லைன்னு நினைக்கிறேன்.  சங்கல்பம் செய்யும் போது, இன்னும் ஜம்பூத்வீபத்த பத்தி சொல்றீங்க.  இப்ப ஜம்பூத்வீபம் இருக்கான்னு சொல்லுங்க.  நீங்க அப்டேட் பண்ணாததால, நாங்க இன்னும் பேக்வேட் கம்பாட்பிலிடி கொடுக்க வேண்டியிருக்கு.  ஒவ்வொரு தடவையும் நாங்க ரிலீஸ் பண்ணும்போது தாவு தீந்துடுது.”  இளைஞன் சிடுசிடுத்தான்.  அவன் தன்னைப்போல இருப்பதாகப் பட்டது.

“இதுக்கு மேல வேற ஊருக்கு போனாலும் இதே மந்திரம் தான்.  அமெரிக்கா, ஆப்பிரிக்கான்னு போயிட்டு, ஜம்பூத்வீபே.  டைம் அண்ட் ஸ்பேஸ் பற்றி எதுவும் தெரிஞ்சுக்காம திரும்பி திரும்பி ஒரே பாட்டு.  இதுல பூஜை பண்ணினேன்னு க்லெய்ம் வேற.”

“அசோக், நீங்க டேட்டா அனலிஸ்ட்ங்கறதால சொல்றேன்.  புரியும்னு நினைக்கிறேன்.  நீங்க சொல்ற சங்கல்பம், உங்க பூஜைக்கு ப்ரைமரி கீ.  நீங்க தப்பா சொன்னா, வேற எங்கயாவது ஸ்டோர் ஆகியிருக்கும்.  பரார்த்தம், கல்பம், மன்வந்த்ரம், கலியுகம் எல்லாம் ஹரிசாண்டல் பார்ட்டிஷன்ல பயன் படுத்தறோம்.  இப்ப எனக்கு உங்க ரெகார்ட் எல்லாம் தேட நேரமில்லை.  இத டிஸ்ப்யூட்டா ரெகார்ட் பண்ணிட்றேன்.  நீங்க பெரியவர பார்க்கும் போது, பேசிக்கலாம்.”

“பெரியவரா?  அப்ப இவர்?” அசோக் அங்கு உட்கார்ந்து இருந்த முதியவரைப் பார்த்து கை காண்பித்தான்.

“நான், இவனோட ஸூபர்வஸர்.  பெரியவர் போஸ்ட்டுக்கு இன்னும் எனக்கு ரெண்டு ப்ரமோஷன் வேணும்.  கவலைப் படாதீங்க.  உங்களோட கர்மாவுல, இது அவ்வளவு முக்கியமாக இருக்காது.  ஈகோ, பூனையக் கொல்லப் பார்த்ததுக்கெல்லாம் வெய்ட்டேஜ் ஜாஸ்தி.  கொஞ்சம் வெளில வெயிட் பண்ணுங்க.  ரெண்டு, மூணு நாள்ல பெரியவரப் பாத்துடலாம்.”

லேசாக அதிர்ச்சியாக இருந்தது.  தன் வாதம் இங்கு எடுபடாது என்று தோன்றியது.  அசோக் வெளியே வந்து பெரியவருக்காக காத்திருந்தான்

No comments:

Earlier Posts