எச்சரிக்கை: கல்கியின் பொன்னியின் செல்வன் போல இதுவும் ஒரு கற்பனைக் கதையே. வரலாற்று ஆதாரம் கேட்டு பூட்டை ஆட்ட வேண்டாம்.
“இன்றிரவு மன்னர் உங்களை சந்திக்க அழைத்துள்ளதாக சேவகர்கள் தெரிவித்தனர்” என்றான் கிருஷ்ணன் ராமன்.
“எதற்கு?” கேட்டான் அருண்மொழி.
“அது எனக்குத் தேவையில்லாத விஷயம்.” முகத்தை திருப்பிக் கொண்டு பதில் சொன்னான் கிருஷ்ணன்.
“என் கண்ணைப் பார்த்துச் சொல். உனக்குத் தெரியும்தானே?”
“மதுரை வெற்றிக்குப் பின் நடந்தவற்றை மன்னர் விரும்பவில்லை என்று அறிகிறேன். அது பற்றிப் பேச அழைத்திருக்கலாம் என்பது என் யூகம்.”
அருண்மொழி தலைகுனிந்தான். “எனக்கும் நடந்தவை சரியில்லை என்று தான் தோன்றுகிறது. அண்ணனிடம் எப்படிச் சொல்வது? அவர் கோபக்காரர். மதிப்பில் என் தந்தைக்கு நிகரானவர். இளவரசர் கூட. அடுத்த அரசருக்கு இடித்துரைக்கும் அளவிற்கு செல்வாக்கு எனக்கு இல்லை.”
“மன்னர் இளவரசரிடம் பேசியிருக்கலாம்.”
“இருக்கலாம். இரவில் மன்னரை சந்திக்கப் போகிறேன். நீயும் வருகிறாயா?”
“எனக்கு அழைப்பில்லை. உத்தரவிட்ட செயலை செய்து முடிக்க மட்டும்தான் என் விசுவாசம் உள்ளது. துணைக்கு வர அல்ல.”
-----
“உட்கார்.” என்றார் மன்னர் சுந்தரச் சோழன்.
“பரவாயில்லை. இந்த சந்திப்பிற்கு இளவரசர் வரவில்லையா?”
”அவனுடன் நேற்று பேசி விட்டேன். அதற்குப் பின் பிரும்மராயருடன் பேசியபின் தான் உன்னை அழைத்தேன்.”
சற்று நேரம் மௌனம் நிலவியது. மன்னர் தான் பேசத் தொடங்கினார்.
“ஏன் அழைத்தேன் என்று கேட்பாய் என்று நினைத்தேன்.”
அருண்மொழி தலை குனிந்தபடி நின்றிருந்தான்.
“நீ ஏன் தலை குனிகிறாய். இப்படி ஒரு பிள்ளையைப் பெற்று அவனை இளவரசனாக்கியதற்கு நான் அல்லவா தலை குனிய வேண்டும்?”
அருண்மொழியிடமிருந்து பதில் இல்லை.
“தர்ம சாஸ்திரங்கள் ஒரு அரசனை உருவாக்க பல விஷயங்களைக் கூறுகின்றன. அரசனாகப் போகிறவன் ஆறு தீய குணங்களை வென்றிருக்க வேண்டும் என்று கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் கூறுகிறது. சொல்! உன் தமையன் அந்த ஆறில் எவற்றை வென்றிருக்கிறான்? அவனைக் கேட்டால் மதுரையை வென்றதை பெருமையாகப் பேசுவான்!”
“இளவரசர் கோபக்காரர்தான். ஆனால்...”
“அது மட்டுமா?” வறட்சியாக சிரித்தார் மன்னர். “தன் கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாதவன் எப்படி பரந்து விரிந்த சோழத்தைக் கட்டுப் படுத்தப் போகிறான்?”
”நீ விவேகி என்று எனக்குத் தோன்றுவதால் சொல்கிறேன். குறுநில மன்னன் போல சண்டையிட்டு, எல்லையை விரிவாக்கும் காலம் போய்க்கொண்டிருக்கிறது. உத்தமனைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். பிரும்மதேசத்தை சோழத்தின் கீழ் கொண்டுவர அவர் கொடுத்த உபாயம் தான் வந்தியத்தேவனுக்கு உன் தமக்கையை மணமுடித்துக் கொடுத்தது. கொடுக்கல்-வாங்கல், திருமண உறவு போன்றவற்றால் நம் எல்லையை விரிவாக்கும் காலம் வந்து கொண்டிருக்கிறது. இப்போதும் கொடூரக் கொலைகாரன் போல நடந்து கொள்ளும் அரசனை மக்கள் எப்படி மதிப்பார்கள்?”
”நீங்களும் சித்தப்பா உத்தமரும் பிரும்மராயரும் சொன்னால் அண்ணன் கேட்பார். அவர் உங்கள் எண்ணங்களை உணர ஒரு வாய்ப்பு தாருங்கள்.”
“இந்த நிதானம் தான் வருங்கால அரசர்களுக்குத் தேவை. நீ சொல்வதால் ஒரு முறை அழைத்துப் பேசுகிறேன். எனக்கு நம்பிக்கையில்லை. நேற்று அவனைக் கடிந்து கொண்டதால் இன்னும் என் மீது கோபத்தில் இருப்பான் என்று நினைக்கிறேன். இரண்டு நாட்கள் போகட்டும். பெரியவர்கள் பேசிக் கொள்கிறோம். நீ அங்கு வரவேண்டாம். நாளை உத்தமனை சந்தித்து என் கவலையை நீ தெரிவித்து விடு.”
----
“இளவரசர் அவசரமாக கடம்பூர் செல்ல வேண்டியிருந்ததால், இங்கு வர முடியவில்லை என்று தெரிவிக்கச் சொன்னார்” என்றான் சேவகன்.
“நீ போகலாம்.”
சுந்தரச் சோழனின் முகம் இறுகியது. “இன்னொரு அறிவுரை கேட்க, அதுவும் பிறர் முன்னிலையில் கேட்க அவன் தன் மானம் இடம் கொடுக்கவில்லை போலும்.”
அவரே பேசட்டும் எனக்காத்திருந்தனர் பிரம்ம ராயரும் உத்தமச் சோழனும்.
“ஆதித்தனின் இந்த வெறிச்செயலால், நாம் மதுரையை வென்ற செய்தி கூட கசப்பாக இருக்கிறது. நான் ஆதித்தனை அரசனுக்குரிய தகுதிகளுடன் வளர்க்கவில்லை என்று பெரியவர்கள் கூறும் போது நான் பேச்சற்று நிற்கிறேன்.”
“அவன் இங்கு வராமல் இருந்ததும் நல்லதற்குத்தான். நாம் ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும்.”
மௌனத்தைக் கலைத்தார் பிரம்மராயர். “ஆதித்தனை இளவரசாக்க அவசரப்பட்டிருக்க வேண்டாம் என்று இப்போது தோன்றுகிறதா மன்னரே?”
“கடந்த காலத்தை விடுங்கள். வீரம் மட்டும் ஒருவனை நல்ல அரசனாக்காது. பாண்டியனைக் கொன்ற பின் அவன் உடலுக்கு ஒரு வீரனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்திருந்தால், பாண்டிய நாட்டவர் நம் மீது ஓரளவிற்காவது பணிந்து இருப்பர். அவர்களில் இருந்தே ஒருவனை அரசனாக்கி நம் ஆட்சியின் கீழ் அவனை ஆள விடுவது எளிதாக இருந்திருக்கும். அதை விட்டுவிட்டு, பாண்டியனின் தலையை வெட்டி...சொல்லவே கூசுகிறது. யாரும் இதை நல்ல குடியில் பிறந்தவனின் செயலாகக் காணமாட்டார்கள்.”
“ ஒரு வேளை ஆதித்தனுக்கு முடி சூட்டும் எண்ணம் எனக்கு என்றாவது இருந்திருந்தால் அது இன்றோடு முற்றுப் பெருகிறது. உத்தமா! நீயே அடுத்த சோழ மன்னனாக வேண்டும் என்பதே என் விருப்பம்.”
“என் தந்தைக்கு நிகரான மன்னரே! நான் மன்னனாக விரும்பியிருக்கிறேன். ஆனால் அதற்கு நான் தகுதியானவனா என்று பல முறை சிந்தித்திருக்கிறேன். போர்களில் சோழம் பெற்ற வெற்றிகளை களத்தில் இறங்கி வாள் வீசியவர்களின் வெற்றியாகவே நான் கருதுகிறேன். ஆதித்தன் உட்பட எனக்குக் கிடைத்த வீரர்கள் பெற்றதே அவ்வெற்றிகள். எனக்குப் போர்களில் ஈடுபாடு இல்லை. தேவைக்கு அதிகமாகவே நான் போரிடுகிறோம் என்றே பல முறை நினைத்துள்ளேன். உங்கள் அன்பிற்கும் கட்டளைக்கும் பணிந்தே அதிக ஈடுபாடின்றி சோழத்திற்காகப் போரிடச் சென்றேன். உங்கள் விருப்பம் நான் முடி சூட்டிக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கும் நான் பணிவேன். ஆனால், போரில் விருப்பம் இல்லாதவன் மன்னன் ஆவது சரியா?”
“உத்தமா, உன் அறிவு முதிர்ச்சிதான் ஒரு மன்னனுக்குத் தேவை. போரிட வீரர்கள் உண்டு, தலைமை தாங்க தளபதிகள் உண்டு. போர் தேவையா, தவிர்க்கக் கூடியதா என்று சிந்திக்க, நிதானம் உள்ள அரசனால் மட்டுமே முடியும். அது உன்னால் முடியும் என்று எனக்குத் தெரியும். குந்தவையும் வந்தியத் தேவனும் கூட ஒப்புக் கொள்வர். அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்ளாமல் இருப்பதைக் கூட உன் சாதனையாக நினைக்கிறேன்.” இதைச் சொல்லும்போது தான் அவரால் புன்னகைக்க முடிந்தது.
“ஆதித்தன் இதை விரும்ப மாட்டான். அவனைப் பொறுத்தவரை நான் கோழை அல்லது வேகமற்றவன். நான் அரசனானால் எப்போது யார் என்னைக் கொல்வார்கள் என்று பயந்தபடியே ஆளவேண்டும்.”
“அதை பிரம்ம ராயர் பார்த்துக் கொள்வார். எங்கும் சென்று விடாதே. இங்கு பணிகள் உள்ளன. எனக்கு நீ ஆதரவாக இருந்தது போல, உனக்கு ஆதரவாக அருண்மொழி இருப்பான். இப்போது நீ போகலாம். பிரம்ம ராயரே, நீங்கள் இருங்கள்.”
-----
”ஆதித்தன் கடகமல்ல மன்னரே, அவர் உங்கள் மீது பெரும் மதிப்பு வைத்துள்ளார்.”
“என் மீது வைத்துள்ள மதிப்பு முக்கியமல்ல, என்னை ஆதித்தன் கொல்ல முயல்வான் என்று நான் பயப்படுபவனல்ல. ஆதித்தன் அரசனாவது சோழ சாம்ராஜ்யத்தின் முடிவிற்கு ஆரம்பமாகும். அதை நான் விரும்பவில்லை. அர்த்த சாஸ்திரங்கள் கூறியபடி, அவனை இங்கிருந்து வெளியேற்றி எல்லைகளுக்கு அனுப்பி வைத்தேன். அவன் பொறுமையின் எல்லையைக் கடந்து விட்டான் என்பதன் அடையாளம் அவன் வீரபாண்டியனின் உடலுக்கு இழைத்த அவமானம். வீர பாண்டியனின் தலையை வெட்டியபோது என்னை நினைத்திருப்பான் என்று தோன்றுகிறது. மேலும் வெட்டிய தலையை சோழ நாட்டின் தலைநகருக்குக் கொண்டு வரவேண்டிய தேவை என்ன?”
”அர்த்தசாஸ்திரங்கள், இப்படிப்பட்ட இளவரசனை சிறையில் அடைக்கவும் ஆலோசனை கூறுகின்றன. சிங்கத்தை சிறையில் அடைத்துப் பார்க்க எனக்கு மனம் வரவில்லை. பாரத்வாஜரின் அர்த்தசாஸ்திரத்தில் கூறியது போலச் செய்து விடுங்கள்...”
“தஞ்சாவூர் முத்தரையர்களையோ மதுரை மறவர்களையோ இதில் சம்பத்தப் படுத்தாமல் செய்து முடியுங்கள். அதனால் விளையும் கிளர்ச்சிகள் தவிர்க்கப் படவேண்டியவை. சோழத்தின் மீது பற்றுள்ள பார்ப்பனரைப் பயன்படுத்துங்கள். தேசத்தின் மீதுள்ள பற்றிற்கும் இளவரசர் மீதுள்ள விசுவாசத்திற்கும் அவர்களால் தர்க்கரீதியாக வேறுபாட்டைக் காணமுடியும்.”
“உத்தரவு மன்னரே.”
No comments:
Post a Comment