"காலித் முதல் மரத்தை வெட்டினான். பின் நபி அவர்களிடம் சென்று தன் செயலை விவரித்தான். ‘ஏதேனும் வித்தியாசமாக நிகழ்ந்ததா?’ என்று அவர் கேட்டார். அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றான் காலித். இரண்டாவது மரத்தை வெட்டியபோது அப்படியே நிகழ்ந்தது. மூன்றாவது மரத்தை வெட்டியபோது தலைவிரி கோலத்தில் அல்-உஸா தோன்றி காலிதை அழிக்க ஆணையிட்டாள். உடனே காலித் அவளை இரு கூறாக வெட்டினான். அவள் சாம்பல் குவியலாக வீழ்ந்தாள். பின் காலித் சுலாமியைக் கொன்றுவிட்டு, கடைசி மரத்தையும் வெட்டினான். திரும்பி வந்து நபி அவர்களிடம் நடந்ததைக் கூறிய போது, “அந்தப் பெண் அல்-உஸா. அவளை ஒரு போதும் வணங்கக் கூடாது” என்றார் நபி.
-------------------
“அப்பா! என் வீடு...” என்றுதான் அவள் புலம்பியது போலத் தெரிந்தது. மொழி எது என்று புரியவில்லை. தமிழாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அவள் சொன்னது அது தான் என்று தோன்றியது. சுவற்றோரம் சாய்ந்தபடி, கையில் பெரிய வாளுடன் காலை நீட்டி அமர்ந்திருந்தாள். கழுத்தில் செவ்வரளியோ செம்பருத்தியிலோ மாலை போன்று இருந்தது. அல்லது ரத்தமா? அவள் புலம்புவதுடன் பார்த்தால் ரத்தமாக இருக்க வாய்ப்புள்ளது. நம் ஊர் பெண் போலத் தெரியவில்லை. ஹஜ்ஜில் பார்த்த வட ஆப்பிரிக்கப் பெண் அல்லது யெமன் பெண்ணைப் போல உடுத்தியிருந்தாள்.
அபுபக்கர் திடுக்கிட்டு விழித்தார்.
“இது என்ன கனவு! என் இறந்த பிள்ளைகளில் ஒன்றா? ஆனால் இந்தப் பெண் சிறுமியல்லவே...”
“இரவில் என்ன சாப்பிட்டேன்...”
போன மாதம் ஹஜ் போய்விட்டு வந்தபின், சாப்பாட்டின் நாட்டம் குறைந்துவிட்டதை உணர்ந்தார். எடையும் குறைந்திருக்கக் கூடும்.
எழுந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து படுத்தார். தூக்கம் வரவில்லை. மணி பார்க்கவும் முனையவில்லை. சற்று நேரத்தில், ஆஸான் கேட்டது. எழுந்திருக்கத் தோன்றவில்லை. அப்படியே படுத்திருந்தார்.
“என்ன ஆச்சு.. இன்னும் படுத்திருக்கீங்க..நீங்க வரலையா?” சலீம் கேட்டான். நான்கு குழந்தைகள் இறந்தபின் பிறந்தவன் சலீம்.
“இல்லப்பா... உடம்பு முடியல. அப்புறம் வரேன்” என்றார்.
அடுத்த நாள் சலீம் அவன் மனைவி கருவுற்றிருப்பதாகச் சொன்னான்.
“ரொம்ப சந்தோஷமப்பா... இனிமேல் தண்ணி நான் பிடிச்சுட்டு வரேன். அம்மா சமைக்கட்டும். நல்லா பாத்துக்க.”
அழும் பெண் கனவு அடிக்கடி வர ஆரம்பித்தது. மசூதியில் யாரிடமாவது சொல்லலாம் என்றால் அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற தயக்கம் இருந்தது.
----
“என்ன பாய்? உடம்பு சரியில்லையா? கண்ணுக்குக் கீழ கருவட்டம் கட்டியிருக்கு. ஆளும் இளச்ச மாதிரி இருக்க. வீட்டுல விசேஷம் வருது, முகத்துல தெரியலையே... ஏதாவது பிரச்சினையா? “ என்றார் ராமசாமி படையாச்சி.
ராமசாமி படையாச்சி பள்ளித் தோழன். அபுபக்கர் ஐந்தாம் வகுப்போடு நிறுத்திவிட்டு வாப்பா கடையில் வேலை பார்க்கத் தொடங்கினார்; படையாச்சி எட்டு வரை போனார். அதற்குப் பின் குடும்ப வழக்கப்படி கோவில் பூசாரி வேலை. மதுரகாளி அவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை என்று அவரைப் பார்த்தால் தெரியும். கோவில் நடை திறக்கும் திங்கள், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி தவிர பிற நாட்களில் வயலில் இறங்கி வேலை செய்யும் உழைப்பாளி. அவ்வப்போது மதுரகாளி அவர்மீது இறங்கி அருள் வாக்கு தருவதும் உண்டு. ஆனால் அதை வழக்கமாக்கிக் கொள்ள அவர் விரும்பவில்லை.
“வாரவாரம் குறி சொல்ல ஆத்தா என்ன சன் டீவில வர சினிமாவா. அவ உதவணும்னு நெனச்சா நாமதான் போய் கேட்கணும்.” என்பார்.
“ஒண்ணுமில்ல... ஒரு கனவு. கொஞ்சம் தடுமாற்றமா இருக்கு.”
படையாச்சிக்குக் கனவுகள்மீது மதிப்பு உண்டு. வாயுக் கோளாறு இல்லாத நேரத்தில் வரும் கனவு தெய்வங்கள் நம்முடன் பேசும் மொழி என்று அவருக்குத் தெரியும்.
கனவைப் பற்றி படையாச்சியிடம் சொன்னார். “வெள்ளிக்கிழம எட்டு மணிக்கு மேல வீட்டுக்கு வாங்க... ஆத்தாட்ட கேட்டுடுவோம்.” என்றார்.
அபுபக்கரின் நம்பிக்கை சராசரி இந்தியனைப் போன்றது. பத்து தலைமுறை இஸ்லாம் இன்னும் இந்த மண்ணில் தோன்றிய தெய்வங்கள் மீதுள்ள நம்பிக்கையை சாய்க்கவில்லை. கோவிலுக்குச் செல்லாவிட்டாலும், மதுரகாளி போன்ற தெய்வங்கள் அவர் மனத்திலிருந்து துரத்தப் படவில்லை. அடுத்த தலைமுறை இப்படி இருக்குமா என்ற சந்தேகம் அவருக்கு உண்டு. சலீம் அரசியல் கட்சிக்காக திருச்சி சென்று விட்டு வந்து, கோவில்களைப் பார்த்து முறைப்பது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
----
வெள்ளிக்கிழமை அசைவம் வேண்டாம் என்று சொன்னது அவர் மனைவிக்கு சற்றே ஆச்சரியமாக இருந்தது. மாலை ஆறு மணியிலிருந்து பரபரப்பாக இருந்தார். எட்டு மணிக்கு படையாச்சி வீட்டிற்குப் போனபோது அப்போதுதான் அவர் வந்து குளிக்கப்போயிருந்தார். “உட்காருங்க... அப்பா வந்துருவாங்க.” என்றான் குமார். அவனும் கோவில் பணிக்குப் போக ஆரம்பித்து இரண்டு வருடங்களாகிறது.
வீபூதி பூசி படையாச்சி வரும்போதே அவர் சன்னத நிலைக்குச் செல்ல தயாராக இருந்தார். கண்மூடி தியானித்துவிட்டு, கண்களைத் திறக்காமலேயே, “ரோட்டுக்குக் கிழக்க கோவில் நிலம் இருக்கு. அங்க என்னப்பாத்து அக்கா-தங்கை மூணு பேரையும் பிரதிஷ்டை பண்ணு. செல்லாயிக்கு இடம் கொடுத்த நான் உசாவுக்குக் கொடுக்க மாட்டேனா!” என்றார்.
உத்தரவின் படி நடக்க அபுபக்கர் தயாராக இருந்தாலும், நேரடியாக அதில் இறங்குவது சரியாக இருக்காது என்று தோன்றியது. படையாச்சியே கோவில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்வார் என்றும் பணம் மட்டும் அபுபக்கர் கொடுப்பது என்று முடிவு செய்து கொண்டார்கள். பணம் கொடுத்தது அவர் தான் என்று இப்போதைக்கு வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டார்கள்.
----
சலீமின் மனைவி பெண் குழந்தையை பெற்றாள். சல்மா என்று பெயரிட்டார்கள். உசா என்று பெயரிட்டிருக்கலாமோ என்று அபுபக்கருக்குத் தோன்றியது.
கோவில் எழும்பத் தொடங்கியது. அழும் பெண் கனவு வருவது தொடர்ந்தது; ஆனால் அவள் இப்போது புலம்பவதில்லை என்று அபுபக்கருக்குத் தெரிந்தது.
முக்கன்னியர் கோவில் என்று பெயரிடப்பட்டு, கோவிலுக்குக் கும்பாபிஷேகமும் நடை பெற்றது. மதுர காளி கோவிலில் வைத்துப் பூசை செய்த கலசங்களும், புனித நீரும் வண்டியில் ஊர்வலமாக முக்கன்னியர் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, குட முழுக்கு செய்விக்கப்பட்டது.
முஸ்லிம் சமூகத்தின் சார்பாக அபுபக்கரும் இன்னும் சிலரும் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக நீர் தெளிக்கப்படும் போது, அபுபக்கர் கலங்கினார். இது தான் ஜம்ஜம் என்று நினைத்தார். விழா முடியும் போது, நன்றி நவிலலில் படையாச்சி, அபுபக்கரின் கொடையை நினைவு கூர்ந்தார். அருட்பெருக்கில், அபுபக்கர் கண்ணீர் சுரந்தபடி இருந்தார்.
நெற்றி நிறைய நீருடன், மரியாதை செய்விக்க அணிவிக்கப்பட்ட மாலையுடன் வீட்டுக்கு வந்தபோது, சலீம் குதித்தான்.
“அப்பா, இது ஷிர்க் என்று உங்களுக்குத் தெரியாதா? நாம் அல்லாவின் கோபத்திற்கு ஆட்படப் போகிறோம்.”
இதுவரை ஒரு முறை கூட கடிந்து பேசியிராத அபுபக்கரின் கோபம் தலைக்கேறியது. “நீ அல்லாவுக்கா பயப்படறவன்? அரசியல் கட்சிக்காரனுக்காக மசூதிக்குப் போற நீ எனக்கு சொல்ல வேண்டாம். நான் செய்வது சரின்னு எனக்குத் தெரியும்; சிறுவாச்சூர் அம்மனுக்குத் தெரியும். அது போதும் எனக்கு.”
சலீம் ஆத்திரத்துடன் வெளியே சென்று பைக்கை உதைத்துக் கிளம்பினான். மெதுவாக நடந்து தொட்டிலில் சிரித்துக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கி உச்சி முகர்ந்து, “அவன் கிடக்கான். எங்களுக்கு நீ கெடச்சிருக்க தாயி...உஸா!” என்றார்.
No comments:
Post a Comment