Tuesday, June 04, 2024

எழுதப்பட்டவை எல்லாம் கராறான வரலாறு அல்ல

எழுதப்பட்ட வரலாறு ஒரு குத்துமதிப்பான உண்மை.  உதாரணத்திற்கு, 'நான் இன்று காலை பொங்கல் சாப்பிட்டேன்’ என்பது போன்ற எளிமையான தகவலாக வரலாற்றைப் புரிந்து கொள்வது சரியல்ல.  இதைச் சொல்லும்போது நான் சுய நினைவுடன் இருக்கிறேன், எனக்கு இந்த விஷயத்தில் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை போன்ற காரணங்களால் இன்று இந்தக் கூற்று பெருமளவுக்கு உண்மை.  ஆனால், ‘அவன் அன்று காலை பொங்கல் சாப்பிட்டான்’ என்ற ஒரு வரலாற்று கூற்றை எடுத்துக் கொண்டால், பின் வருவன எல்லாம் சாத்தியமானவை:

  1. அவனோ அல்லது அவன் வம்சத்தில் யாரோ பொங்கல் சாப்பிட்டார்.

  2. அவன் அன்று காலை ஏதோ சாப்பிட்டான்.

  3. அவன் என்றோ பொங்கல் சாப்பிட்டான்.


இவற்றில் பொதுவான விஷயம் ‘சாப்பிட்டது’ மட்டுமே.


‘பொங்கல் சாப்பிட்டான்’ என்பதற்கு அந்தக் கூற்று எழுதப்பட்ட காலத்தில் ‘உணவுப் பொருள் பொங்கலை ஒருவன் சாப்பிட்டான்’ என்பது மட்டுமே பொருள் என்ற ஊகமும் உள்ளது.  அந்தக் காலத்தில் ஒருவன் அடி வாங்கியதை இடக்கரடக்கலாக ‘பொங்கல் சாப்பிட்டான்’ என்று கூறும் வழக்கம் இருந்ததா என்று நமக்குத் தெரியாது.  இவற்றுடன் மொழி பெயர்ப்புகள், பொருள் கொள்ளல் போன்ற மாற்றங்களும் எழுதப்பட்ட வரலாற்றில் உள்ளதால், அவை கூட்டும் குழப்பங்களும் சேர்ந்து கொள்கின்றன.  அந்த மாற்றங்களில் மொழி பெயர்ப்பவர்கள், பொருள் கூறுபவர்கள் ஆகியோரது மொழி, கலாச்சாரச் சாய்வுகளும் எழுதப்பட்ட வரலாற்றில் சாயம் சேர்க்கின்றன.


பொதுவாக எழுதப்பட்டது மட்டுமே திட்டவட்டமான வரலாறு என்று எடுத்துக் கொண்டால், சமூக அரசியல் காரணங்களுக்காக  அதைத் திரிப்பது தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. 


நமது நாட்டில் மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளிலும், சுமார் 100 வருடங்களுக்கு முன்பு வரை, மக்கள் தொகையில் ஒரு சிறு பகுதியினர் மட்டுமே எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள்.  அதிகாரிகளும், வர்த்தகத்தில் ஈடுபட்டோருக்கு மட்டுமே எழுத்துக்களால் பயன் இருந்ததால், பிறருக்கு எழுதப் படிக்க வேண்டியது இன்றியமையாத தேவை இல்லை.


எழுதப்பட்டவை என இங்கு குறிப்பிடப்படுவது கல்வெட்டுக்கள், தாமிரப் பட்டயங்கள், சுவடிகள் ஆகியன.  இவை வரலாற்று சான்றுகள் என்று எடுத்துக் கொண்டாலும், இவை யாவும் முழு வரலாற்றையும் விளக்குபவை அல்ல.


இதை ஒரு உதாரணத்துடன் புரிந்து கொள்ள -  உடையார்குடிக் கல்வெட்டு ஒரு மீள்பார்வை - பொங்கு தமிழ் - கருத்துக்களம் (yarl.com).


கல்வெட்டு ஒரு நில விற்பனை பற்றியது.  அதில் நிலத்தின் முந்தைய உரிமையாளரைப் பற்றி குறிப்பிடுகையில் அந்த நிலம் எப்படி (ஸ்ரீபராந்தக வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மகாசபை எனக்குறிப்பிடப்பட்டுள்ள) கிராம சபையின் கட்டுப்பாட்டிற்கு வந்தது என ஒரு வரியில் விவரிக்கப்பட்டுள்ளது.  அதில் ஆதித்த கரிகாலனைக் கொன்ற இராஜ துரோகிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரிடமிருந்து பறித்து கிராம சபைக்கு அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது.


இதிலுள்ள விவரங்களைக் கொண்டு, ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டான் என்பதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.  அவனை ஏன், எப்போது, எப்படி கொன்றனர் என்பதோ, கொன்றவர்கள் எப்போது எவ்வாறு தண்டிக்கப்பட்டனர் என்பதோ ஊகிக்க முடியாதவை.  இவை ஒரு மர்மக்கதைக்கு கருவாகப் பயன்படலாம்.  கல்கியும் அப்படிப் பயன்படுத்தி பொன்னியின் செல்வனை எழுதிவிட்டார்.  ஆனால் எழுதப்பட்ட வரலாறான உடையார்குடி கல்வெட்டோ, கற்பனைக் கதையான கல்கியின் பொன்னியின் செல்வனோ முழுமையான உண்மையான வரலாறைக் கூறவில்லை.  இவற்றைப் படிக்கும் சரித்திர மாணவர்களும் சாதாரண மனிதர்களும் இவற்றின் நம்பகத்தன்மையை அப்படியே ஏற்கக் கூடாது.


கதைகளிலும் இலக்கியத்திலும் வரலாற்று நிகழ்வுகள் கருக்களாகப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.  அவற்றிலிருந்து வரலாற்றைக் கட்டமைக்கும் செயலுக்குப் பின், சமூக அரசியல் காரணங்கள் இருக்கின்றன.


சங்க இலக்கியங்கள் இலக்கியங்களாகவே பார்க்கப்பட வேண்டும்.  அவற்றின் காலத்தை பல்வேறு ஊகங்களால் நிர்ணயிப்பதும் அவற்றின் நாயகர்களை ஜாதித் தலைவர்களாக நிறுத்தும் இன்றைய போக்குக்குப் பின், நிச்சயமாக அரசியல் காரணங்களே உள்ளன. 


1 comment:

othisaivu said...

+1. அருமை. நன்றி.

பொங்கல் என்பது இக்காலப் பொங்கல் தானா, பொனகம் என அக்காலத்தில் சொல்லப்பட்டது சர்க்கரைப் பொங்கலா எனவேறு கேள்விகள் கேட்கலாம்.

பிரச்சினை என்னவென்றால், வெறும் பிற்கால எழுத்துகளை (பக்கா புனைவுகள் அவையும்!) மட்டும் வைத்துக் கொண்டு முற்காலத்தில் சங்ககாலம் இருந்தது என்பதிலிருந்து ஆரம்பித்து தமிழக வரலாறு, தமிழின் வரலாறு என்பவையெல்லாம்  உருட்டப்பட்ட பெருங்கட்டுக் கதைகள் - என்பதை நாம் எப்போது அறிய ஆரம்பிக்கப் போகிறோம்?

இவற்றையும் உண்மை என நம்பி ஒரு பெருங்கூட்டம் வாளைச் சுழற்றிக் கொண்டிருக்கிறது எனும் சோகவுண்மையை எப்படிக் கடக்கப் போகிறோம்?

பார்க்கலாம். நம்மால் முடிந்ததைச் செய்வோம்.