Thursday, July 11, 2024

தேங்கிவிட்ட தமிழ் - உபசர்க்கங்கள்

சில ஆண்டுகளாக ஆங்கிலத்திலிருந்து சில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்த அனுபவத்தில், தமிழ் தேங்கி விட்டது என்ற என் கண்ணோட்டத்தை இங்கு தருகிறேன்.

சமஸ்கிருதத்தில் உபசர்க்கம் என்ற இலக்கண அம்சம் ஒன்று உண்டு; அவற்றை சமஸ்கிருதத்திலிருந்து எடுத்து,  தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் அதிகம் பயன்படுத்துகிறோம்.  உதாரணத்திற்கு நியாயம், அனுதாபம், பிரதிபலன், பரம்பொருள், அதிபுத்திசாலி, அவமானம் போன்றவை.  இந்த உதாரணங்களில் முதலில் பெரிய எழுத்துக்களில் உள்ளவை உபசர்க்கங்கள்.  அவற்றிற்குப் பின்வரும் சொற்களின் பொருளோடு பொருந்தி வேறொரு பொருளை அளிப்பன.  (ஆங்கிலத்தில் இத்தகைய பயன்பாடு இருந்தாலும், அதற்கான திட்டவட்டமான இலக்கணம் உள்ளதா என எனக்குத் தெரியாது.)

தமிழில் இயல்பான உபசர்க்கங்கள் மிகக் குறைவு.  தலை, கை, முன், பின் போன்றவை நமக்குப் பழகியவை.  பிற உபசர்க்கங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டவை.  

உபசர்க்கங்கள் இல்லாவிட்டால் என்ன?

உபசர்க்கங்கள் இல்லாவிட்டால் பல சொற்களைப் பயன்படுத்தி தேவைப்பட்ட பொருளைப் பெற வேண்டும்.  இதற்கு ஒரு உதாரணத்தைக் காணலாம்.

சம்விதான் - Constitution - அரசியல் அமைப்பு (சட்டம்)

சம்விதானீய - Constitutional - அரசியல் அமைப்பின்படி

அசம்விதானீய - Unconstitutional - அரசியல் அமைப்புக்கு எதிரான

'அரசியல் அமைப்பு' போன்ற சிக்கலான கோட்பாடுகளை ஒரு சமூகம் காலப்போக்கில் புரிந்து கொண்டுவிடும்.  ஆனால் அதற்கு இணையாக மொழி வளராவிட்டால், அத்தகைய கோட்பாடுகளை அந்த மொழியில் விளக்க நீண்ட சொற்றோடர்களைப் பயன்படுத்த வேண்டும்.  அதனால், அவற்றின் தாக்கமும்  குறைவாகவே இருக்கும்.  காத்திரமான பொருள் தருவதோடு, சுருக்கமாகக் கூற பிற மொழிகளிலிருந்து சொற்களைக் கடன் பெற வேண்டும்.  பக்தி, தத்துவம் சித்தாந்தங்களையும் தமிழில் கூற, சமஸ்கிருதச் சொற்கள் தேவைப்பட்டன (உதாரணம் - அருணகிரி நாதரின் திருப்புகழ்).  அரசியல் காரணங்களுக்காக, பிற துறைகளில், கடந்த நூறாண்டுகளாக சமஸ்கிருதத்தைச் சார்ந்திருப்பது தவிர்க்கப்பட்டது.  அதனால் நஷ்டம் தமிழுக்குத் தான்.

தென்னிந்திய மொழிகள் உட்பட பிற இந்திய மொழிகள் தொடர்ந்து சமஸ்கிருத சொற்களைப் பயன்படுத்தி வருகின்றன.   நாம் ஆங்கிலத்தை நம்பியிருக்கிறோம்.  தாய் மொழி தாய்ப்பாலுக்கு இணையானது என்றால் சமஸ்கிருதம் பசும்பால்; ஆங்கிலம் பௌடர் பால் - பயன்படுத்தலாம் ஆனால் திருப்திகரமாக இருக்காது. ஆங்கிலம் அல்லது சமஸ்கிருதம் கலக்காத தூய தமிழில் கலைச்சொற்களை உருவாக்குவதால் பெரும் பயன் இல்லை.  (ஜப்பான் போன்ற நாடுகளும் கலைச்சொற்களுக்கு ஆங்கிலத்தை ஏற்றுள்ளனர்.) ஏனென்றால், புதிய துறைகளில் பிற மொழி வல்லுனர்களைச் சார்ந்தே நாம் இருக்க வேண்டியுள்ளது. 

தமிழை மட்டும் பயன்படுத்தி பல்வேறு துறைகளின் முன்னேற்றம் காண நம்மிடம் போதிய துறை வல்லுனர்கள் இல்லை; அவர்களை உருவாக்க வேண்டிய சூழலும் இங்கில்லை.  அதனால் நாம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, ஹிந்தி போன்ற இசைவான மொழி பேசுபவர்களையும் பரஸ்பரம் சார்ந்தே இருக்க வேண்டும்.  குறைந்தபட்சம் கலைச்சொற்களில் ஒற்றுமை இருந்தால், ஒத்துழைப்பு எளிதாகும்.



No comments:

Guilt, Fear and their effects

A senior gentleman passed away early this morning near my place.  Nothing unusual about elderly people passing away.  His son was away in fo...