அறிமுகம்
இது கல்யாணத்தின் போது, குடை, கைத்தடி, கண் மை சகிதமாக மாமனார் பெண் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் போகும் யாத்திரை பற்றிய பதிவு அல்ல. கால் நடையாகச் சென்று திரும்பி வருவோம் என்ற எதிர்பார்ப்பு இல்லாது அந்தக் கால மனிதர்கள் போன காசியாத்திரை பற்றியதும் அல்ல. ஓரளவு வசதிக்குப் பழகிவிட்டு, சம்பிரதாயங்களை முடிந்தவரை கடைபிடிக்கும் சாதாரணர்கள் இரயிலிலோ விமானத்திலோ போகும் காசியாத்திரை பற்றியது.
அதிலுள்ள சடங்குகள் பற்றிய சிறிய அறிமுகம். இது திட்டவட்டமான சாஸ்திர வழிகாட்டி அல்ல. மேலும் இந்தச் சடங்குகளை ஏன் செய்ய வேண்டும் அல்லது அவற்றைச் செய்வதால் என்ன பலன் போன்ற விவரங்கள் இந்தக் கட்டுரையில் இல்லை.
காசி யாத்திரை செல்ல முடிவெடுத்தபின், காசியிலும் பிற இடங்களிலும் சடங்குகளுக்கும் பிற வசதிகளுக்கும் ஏற்பாடு செய்ய காசியில் பலர் உள்ளனர். அனேகமாக சாஸ்திரிகள் பலருக்கும், நேரடியாகவோ அல்லது பிற தொடர்புகளும் மூலமோ காசியில் ஏற்பாடு செய்பவர்களைப் பற்றி தெரிந்திருக்கும். அவர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொள்வது நலம். அவர்களில் பலர், தெளிவான தகவல் பரிமாற்றத்திற்கு முக்கியத்துவம் தருவதில்லை. அதனால் கிருஹஸ்தர்களுக்குப் பதட்டம் ஏற்படுவது சகஜம். இந்தக் கட்டுரை அந்தப் பதட்டத்தைத் தணிக்க உதவும் என்று நம்புகிறேன்.
அடிப்படை சடங்குகள்
புண்ய க்ஷேத்திரங்களுக்குச் செல்லும் போது முதலில் குளித்து விட்டு, காய்ந்த ஆடை அணிந்து கொண்டு சங்கல்பம் செய்துவிட்டு, அதன் பின்னரே புனித நீராடி முன்னோர்களுக்கு சிரார்தம் செய்வது வழக்கம். அங்கு சிரார்தத்தின் அங்கங்களான அக்னிக்கு அன்னமிடல், பிராமணர்களுக்கு உணவளித்தல், பிண்டமிடல், தர்ப்பணம் ஆகியவற்றை வசதிக்கு ஏற்றபடி செய்வர். அவற்றை (மஹாளயத்தின் போது செய்வது போல) காருணீகப் பித்ருக்களுக்கும் சேர்த்து செய்ய வேண்டும்.
(தொடரும்)
No comments:
Post a Comment