Wednesday, June 19, 2024

காசி யாத்திரை - சடங்குகளும் திட்டமிடலும் - 2


யாத்திரை

காசி செல்லும் முன், இராமேஸ்வரம் சென்று, கடலில் நீராடி பிந்து மாதவர், சேது மாதவர், வேணி மாதவர்களை மணலில் லிங்கங்களாகச் செய்து, அவற்றில் சேது மாதவரை சமுத்திரத்திற்கும், பிந்து மாதவரை அந்தணருக்கும் தானமாக அளிக்க வேண்டும்; வேணி மாதவரை, காசிக்கு எடுத்துச் செல்ல ஒரு (பித்தளை) சம்புடத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இராமநாதஸ்வாமி கோவிலில் உள்ள 22 கிணறுகளில் நீராடிவிட்டு முன்னோர்களுக்கு சிரார்தம் செய்த பின் இராமேஸ்வரத்திலிருந்து பிந்து மாதவரை இட்ட சம்புடத்தை எடுத்துச் செல்ல வேண்டும். பிந்துமாதவர் மீது உள்ள ஈரம் காயும் முன், காசிக்குச் செல்ல வேண்டும்.


1. காசி யாத்திரையின் முதல் கட்டம் பிரயாக்ராஜில் (அலகாபாத்) தொடங்குகிறது. பிரயாக்ராஜிலும் இவற்றிற்கு ஏற்பாடு செய்பவர்கள் இருக்கின்றன. காசியில் ஏற்பாடு செய்தவர்கள் மூலம் இதற்குப் பதிவு செய்து கொள்ளலாம். நாங்கள் சிவ மடம் என்ற இடத்தில் சடங்குகளைச் செய்தோம். அங்கிருந்து திரிவேணி சங்கமத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு, பெண்கள் பூமுடி அளிப்பதும் (வேணி தானம்) ஆண்கள் தலையை மழித்துக் கொள்வதும் வழக்கம். இராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த வேணி மாதவரை எடுத்துச் சென்று, திரிவேணி சங்கமத்திற்கு முன் உள்ள கங்கையில் கரைக்க வேண்டும். அங்கிருந்தே கங்கை நீரை எடுத்து வர வேண்டும். (காசியில் கங்கை நீரை எடுப்பது வழக்கமல்ல.) திரிவேணி சங்கமத்தில் நீராடிவிட்டு, மடத்திற்குத் திரும்பி, முன்னோர்களுக்குப் பிண்டம் வைத்து, தர்ப்பணம் செய்ய வேண்டும்.

காசியிலிருந்து பிரயாக்ராஜ் சென்று நீராடி விட்டு, சடங்குகள் செய்ய அரை நாளுக்கு மேல் ஆகும். பிரயாக்ராஜிலிருந்து அயோத்தி தாம் மூன்று மணி நேரப் பயணம் மட்டுமே என்பதால், அயோத்தி தாம் சென்று குழந்தை இராமனை தரிசித்து வருவது உசிதம். 

2. அடுத்த கட்டம் அதாவது அடுத்த நாள், காசியில் உள்ள அந்தணர்களின் அனுமதி பெற்று கங்கையில் நீராடி, பின்னர் சிரார்தம் செய்ய வேண்டும். 

3. அதற்கு அடுத்தபடி , காசியில் உள்ள முக்கியமான ஐந்து படித்துறைகளில் நீராடி, பிண்டம் வைத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்கு படகில் செல்ல வேண்டும். பிண்டம் வைக்கத் தேவையான அன்னத்தை முன்பு படகில் சமைக்கும் வழக்கம் இருந்தது. இப்போது, அதற்கு அனுமதி இல்லாததால், சமைத்த அன்னத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.

4. பின்னர் கயா செல்ல வேண்டும். கயா, புத்தருக்கு ஞானம் கிட்டிய பௌத்த கயாவிலிருந்து 15 கிமி தூரம். காசியிலிருந்து ஐந்து மணி நேர சாலைப் பயணம். இரவு கயாவில் தங்குவதால், அடுத்த நாள் சடங்குகளை இயன்றவரை முன்னதாக ஆரம்பிக்க முடியும்.

கயாவில் சிரார்த்தம் ஃபல்குனி நதியிலும், விஷ்ணு பாதத்திலும் அக்ஷய வடத்திலும் பிண்டமிட வேண்டும். ஃபல்குனி நதியில் பிண்டம் இடுவதைத் தடை செய்துள்ளனர். அந்த நதியில் நீர் ஓடுவது வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே. விஷ்ணு பாதம் ஒரு சிறு கோவில். அதில் ஒரு பாறையின் மீது விஷ்ணுவின் பாதச்சுவடு உள்ளது. அதில் பிண்டமிடுவது வழக்கம். அங்கிருந்து சுமார் 2 கிமி தொலைவில் உள்ள அக்ஷய வடம் என்பது தாய் ஆலமரம். அதன் அடியிலும் பிண்டமிடுவர். 


விஷ்ணு பாத, அக்ஷய வட சிரார்தங்களில் காருணீகப் பித்ருக்களுடன், தன்னைச் சுமந்ததால் தாயாருக்கு நேர்ந்த சிரமங்களுக்காகவும், பல்வேறு காரணங்களால் பிண்டங்களைப் பெற இயலாது போன இறந்த ஆண்களுக்காகவும் பெண்களுக்காகவும் பிண்டங்கள் இடவேண்டும். இவ்விரண்டு சிரார்தங்களிலும் குறைந்த பட்சம் 65 பிண்டங்களை இட வேண்டும். இவற்றில் அக்ஷய வட சிரார்தத்திற்கு மட்டும் அக்னிக்கு அன்னமளிப்பது உட்பட முழு சிரார்தம் செய்வது வழக்கம்.  இது வசதிக்காக மட்டுமே. மூன்று நாட்கள் தங்க முடிந்தால், ஒவ்வொரு நாளும் முழு சிரார்தம் செய்யலாம். அக்ஷய வடத்தில் பிண்டமிட்டபின், தமக்குப் பிடித்த இலை, காய், கனி மீதுள்ள பற்றை ஒரு பிராமணருக்கு தானமாக அளிக்கும் சடங்கு உண்டு.

5. காசிக்குத் திரும்பிய பின்னர், பிராமணர்களுக்கு பத்து வித தானம் செய்ய வேண்டும். சடங்குகள் நல்ல விதமாக முடிந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, விஸ்வேஸ்வரன் - அன்னபூரணியை ஒரு தம்பதியர் மீது ஆவாஹனம் செய்து, தம்பதி பூஜை செய்ய வேண்டும். அதன் பின், பிராமணர்களுக்கு உணவளித்து, யாத்திரையின் காசி படலத்தை முடிக்க வேண்டும்.

திரிவேணி சங்கமத்திலிருந்து எடுத்து வந்த கங்கை நீரை, அது குளிர்ச்சியை இழக்கும் முன், இராமேஸ்வரம் சென்று பூஜித்து இராமநாத ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். 

இராமேஸ்வரத்திலிருந்து வீடு திரும்பி, சமாராதனை செய்து பிராமணர்களுக்கு உணவளித்து காசி யாத்திரையில் எடுத்து வந்த கங்கை நீர், அன்னபூரணி விக்ரகம், காசி கயிறு போன்றவற்றை பிறருக்கு வினியோகிக்க வேண்டும்.

(தொடரும்)

No comments: