Anti-fragile எனும் ஆயிரங்காலத்துப் பயிர்
தமிழ் மொழிபெயர்ப்பில் உள்ள சிரமங்களையும் சிக்கலான சிந்தனைகளை எப்படி தமிழில் விளக்குவது என்ற ஆலோசனைகளிலும் சிந்தனைகளிலும் நேரம் சென்றது. நண்பருக்கு என்னுடைய பழைய கட்டுரைகளில் ஒன்றை அனுப்பத் தேடியபோது நான் நாஸிம் நிக்கலஸ் தாலேபின் Anti-fragile என்பதை விளக்க முயன்ற கட்டுரை கண்ணில் பட்டது. குழந்தைத்தனமாக சுற்றி சுற்றி விளக்கியிருந்தேன். எழுதிய எனக்கே அது புரியவில்லை.
ஆங்கிலத்திலேயே Anti-fragile என்பதை விளக்க ஒரு புத்தகமே தேவைப்பட்டிருக்கிறது. ஆனால், சிக்கலான இந்திய சமூகங்களே Anti-fragile. ஆனால் அவை அதை எப்படிப் புரிந்து கொண்டுள்ளன? நாம் உவமைகளைக் கொண்டு சிக்கலானவற்றைப் புரிந்து கொள்கிறோம். அந்த உவமைகளும் பெருமளவு இயற்கையுடன் ஒன்றியவை. தாவரங்கள், விலங்குகள், இயற்கை அமைப்புகள் கொடுத்த உவமைகளைக் கொண்டு சமூக பொருளாதார கருத்தியல்களைப் புரிந்து கொள்வது நமக்கு எளிது; அதுவே வழக்கம் கூட. வரம்பின்றி வரிகளின் மூலம் மக்களை வதைக்கும் அரசுக்கு 'யானை புக்க புலத்தை' உவமையாகக் கூறினர். அப்படி இருக்கும்போது Anti-fragile என்பதை விளக்க இயற்கை ஒரு உவமையையாவது கொடுத்திருக்க வேண்டும்.
Antifragility is a property of systems in which they increase in capability to thrive as a result of stressors, shocks, volatility, noise, mistakes, faults, attacks, or failures.
ஒரு பொருள் வலுவானது (robustness) என்றால், அதன் திண்மைக்கு உவமையாக 'தூணை'க் குறிப்பிடுகிறோம். வலுவானது, வளைந்து கொடுக்காது; ஆனால் அதீத தாக்குதலுக்கு உள்ளாகும்போது உடைந்து போகக் கூடும்.
ஒரு பொருள் வளைந்து கொடுத்து அழியாமல் எழுந்து நிற்கும் (resilient) என்றால், அதற்கு உவமையாக 'நாணலை'க் கூறுவோம். ஆற்றின் வெள்ளத்தில் கரையில் உள்ள மரங்கள் அடித்துச் செல்லப்பட்டாலும், ஆற்றில் உள்ள நாணல் வளைந்து கொடுத்துத் தப்பிக்கிறது.
ஒரு பொருள் பல்வேறு இன்னல்களைக் கடந்து அதன் மூலம் மேலும் தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்கு உதாரணம் - ஆயிரங்காலத்துப் பயிர். அது வறட்சி, வெள்ளம், நோய்கள், பூச்சிகள் என்று பல சோதனைகளை சந்தித்து ஒவ்வொன்றிற்கும் ஏற்றபடி தன்னை மாற்றிக்கொண்டே வந்துள்ளது. புதிய சோதனைகள் வந்தாலும், அதைக் கற்று, கடந்து அடுத்த தலைமுறையில் அதை எதிர்கொள்ளும் திறனை பயிர் பெற்று விடுகிறது. இதுவே Anti-fragile.
ஓரளவுக்கு இயற்கையுடன் தொடர்பு இருந்து, கொஞ்சம் கற்பனையும் இருந்தால், ஆயிரங்காலத்து பயிர் என்பதன் பொருள் தரும் பார்வை விரிவானதாகவும் ஆழமானதாகவும் இருக்கும். இவை இரண்டுக்கும் உள்ள தட்டுப்பாடுதான் தமிழனின் நிலைமை.
இயற்கையிலிருந்து விலகிப் போகும் போது, இந்த உவமைகள் எடுபடுவதில்லை. அது இப்போதைய தமிழின், தமிழனின் பிரச்சினை. பெரும்பாலான வாசகர்கள் நகரங்களில் இருப்பதால், இயற்கையை உவமையாகக் கூறுவது அவர்களிடம் தேவையான தாக்கத்தை உருவாக்குவதில்லை. நகர வாழ்க்கையிலும், நிறுவனச் சூழல்களிலும், அன்னியமாக இருந்தாலும் ஏற்கனவே அமெரிக்காவில் புழக்கத்தில் இருக்கும் ஆங்கில உவமைகள் நேரடியாகக் கிடைத்துவிடுவதால், புதிய உவமைகளை தமிழில் உருவாக்கிக் கொள்ளும் திறமையும் அவனிடம் இல்லை.
இதுவே தமிழின் சோகம்.