Friday, August 02, 2024

மொழிபெயர்ப்புகளின் மொழி

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

  தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;

இறவாத புகழுடைய புதுநூல்கள்

  தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

  சொல்வதிலோர் மகிமை இல்லை;

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்

  அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.


பாரதி சொன்னாரென்று தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கி மூன்று வருட அனுபவம் பெற்றேன்.  என்னைப் போல பலரும் மொழிபெயர்ப்பதை பாரதி கண்டால் சந்தோஷப்பட்டிருப்பானா என்பதில் கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது.  இந்தக் கட்டுரையில் சுட்டியுள்ள குறைகள் என் எழுத்துக்களிலும் இருக்கிறது.  மேம்படுத்த முயல்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.  இந்தக் கட்டுரையில் உள்ள உதாரணங்கள் வேறொரு மொழிபெயர்ப்பு ஆசிரியரின் புத்தகத்திலிருந்தும் எடுக்கப்பட்டவை.  இதே குறைகள் நான் எழுதியவற்றிலும் இருக்கலாம்.  முதல் வருட அனுபவத்திலிருந்து அத்தகைய குறைகள் குறைந்து வந்திருக்கும் என்பது என் நம்பிக்கை.

தமிழனின் அன்றாட வாழ்வைத் தாண்டி உள்ள சிக்கலான விஷயங்களைத் தமிழில் எழுதுவது எளிதல்ல.  கடந்த நூறு ஆண்டுகளாகத் தமிழ் தேங்கியுள்ளது.  புதிய கலைச்சொற்கள் தேவையான அளவு புழக்கத்தில் இல்லாததால், மொழிபெயர்ப்பாளரின் பணி மேலும் கடினமாகிறது.

ஒரு புத்தகம் மொழி பெயர்க்கப்பட்டதா என்பது அதன் நடையில் தெரியக் கூடாது.  இயல்பாக அந்த மொழியிலேயே எழுதப்பட்டவற்றை படிப்பது எளிது.  பிற மொழிகளிலிருந்து, முக்கியமாக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றும்போது, கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்.

முதலில் என் கண்ணை உறுத்துவது 'மற்றும்' என்ற சொல்.  ஆங்கிலத்தில் 'and' எங்கு வேண்டுமானாலும் வசதிப்படி பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது.  அதை அப்படியே 'மற்றும்' என்று மொழிபெயர்க்கிறார்கள்.  பல விஷயங்களைப் பட்டியலிடும் போது 'உம்' என்ற இடைச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.  பல இடங்களில் அது தொக்கி நின்றாலும் பொருள் தரும்.  அதனால் 'மற்றும்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது தேவையற்றது.  

ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தின் முதல் பகுதியில் அழுத்தம் இருக்கும்.  அதை அப்படியே மொழி பெயர்க்கும் போது செயற்கையாகத் தோன்றும்.  தமிழுக்கு ஏற்றபடி மொழி வாக்கிய அமைப்பை மாற்றும் போது, பொருளில் அழுத்தமின்றி சாதாரணமாக இருக்கும்.  "But your perceptions will be wholly different if you were more patient with him and read him with an open mind." என்பதை 'பொறுமையாக திறந்த மனத்துடன் அவரைப் படித்தால், உங்கள் கண்ணோட்டம் மாறும்' என்று மொழிபெயர்க்கும் போது அழுத்தம் குறைவதை கவனிக்கலாம்.  பேசும் முறையில்  நாம் ஏற்ற இறக்கத்துடன் (intonation),  பேச்சின் இறுதியில் தான் முக்கியமானவற்றைக் கூறுகிறோம். 

ஒரு சொல்லை அப்படியே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றுவதால் அது அன்னியமாகத் தோன்றும். உதாரணத்திற்கு, "The court accepted the submissions of the petitioner." என்பதை "மனுதாரர்களின் சமர்பிப்புகளை நீதிமன்றம் ஏற்றது" என்பதில் 'சமர்ப்பிப்புகள்' என்ற சொல்லை விட, நடைமுறையில் பயன்படுத்தப்படும் 'கோரிக்கைகள்', 'ஆவணங்கள்' இயல்பாகத் தோன்றும்.  இதே சூழலில், 'representation' என்ற சொல்லுக்கு 'பிரதிநிதித்துவம்' என்ற சொல் பொருத்தமானதல்ல - அதற்கு, 'மனு' அல்லது 'கோரிக்கை' அல்லது 'தரப்பு வாதம்' போன்றவை பொருத்தமாக இருக்கும்.

தவிர்க்க வேண்டிய செயல்பாட்டு வினை.  "violence got triggered" என்பதை மொழிபெயர்க்கும் போது, 'வன்முறை தூண்டப்பட்டது' என்பது ஆல் இண்டியா ரேடியோ மாநிலச் செய்திகள் போல இருக்கும்; 'சமூகவிரோதிகள் வன்முறையைத் தூண்டினர்' என்பது படிக்க இயல்பாக இருக்கும்.

தமிழில், அழுத்தம் கொடுக்க இரட்டை எதிர்மறையைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக உள்ளது.  'உங்களுக்குத் தெரியாததல்ல' என்ற பிரயோகத்தைத் தாண்டி என்னால் அது போன்ற சொல்லமைப்புகளை நினைவு படுத்த முடியவில்லை.  "not an unknown phenomenon" என்பதற்கு 'அறிமுகமுல்லாத நிகழ்வு அல்ல' என்பதை விட 'சகஜம் தான்' சுருக்கமாக உள்ளது.   

ரா கி ரங்கராஜனின் மொழிபெயர்ப்புகளில், கதை நிகழ்விடம், கதை மாந்தர்கள் மட்டுமே அன்னியமாக இருக்கும்.  அப்படி எழுத முடிவது எப்போதோ!

No comments: