Tuesday, August 16, 2016

பாட்டியும் பக்கத்து வீட்டு கடவுளும்

திய உணவு வேளையின் வெட்டிப் பேச்சு இன்று ஜக்கி, ரவிஷங்கர் முதலான நவீன குருக்கள் மீது  திரும்பியது. இந்த சமூகத்திற்கு இவர்கள் ஏன் தேவை என்று விளக்கும்போது, சக ஊழியர்களின் ஈகோவை சீண்டினேன். அப்போதும் அசராத என் அகங்காரம், பேசாமல் இருந்த இன்னொருவர் பக்கம் திரும்பியது.  தன் நம்பிக்கை மேல் நம்பிக்கை வைத்தவர் அவர்.  பேச்சை முடிக்க, "உங்கள் நம்பிக்கையின் அடித்தளம் மிக பலவீனமானது" என்று முடித்து விட்டு வெளியே வந்தேன்.  ஏன் இக்கால மக்களின் நம்பிக்கை பலவீனமானது என்று விளக்கவில்லை.  விளக்க முயல்கிறேன்.

நாங்கள் திருச்சிக்கு  குடியேறியபோது, கிடைத்தது மலைக்கோட்டையில் இப்போதும் இருக்கும் வன்னியடிகோவிலுக்கு அடுத்த வீடு.  அதை கோவில் என்று சொல்வது உயர்வு நவிற்சியாக இருக்கும்.  எட்டடிக்கு ஆறடி அறையில், ஒரு மரம், பக்கத்திலே ஒரு அரிவாள்.  அதுதான் வன்னியடி கருப்பு என்று அழைக்கப் பட்ட கடவுள்.  அனேகமாக, நானூறு, ஐநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த வீரனின் அடையாளமாக இருக்கலாம்.  வன்னியடி கருப்பின் அண்ணன், மலைக்கோட்டைக்கு கீழே இருக்கும் பெரிய கருப்பு அல்லது சந்தன கருப்பு.  பெரிய கருப்பின் வாள், சற்று பெரியது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

மலைக்கோட்டை மக்களின் காவல் தெய்வம், நாங்கள் இருந்த வீட்டின் மாடியில் குடி இருந்த குருக்களுக்கு படி அளந்ததற்கு மேல், பொருள் உலகில் ஒன்றும் செய்யததாகத் தெரியவில்லை.

கண் சரியாகத் தெரியாத என் பாட்டி, அந்த வீட்டிற்கு வந்தவுடன், வன்னியடி கருப்பை காவல் தெய்வமாக ஏற்றுக் கொண்டார்.  பாட்டி ஏற்கனவே, சமயபுரத்தாளையும், தையல் நாயகியையும் குடும்ப உறுப்பினர்களாக ஏற்றுக் கொண்டவர்தான்.

கருப்பின் கோவிலுக்குப் பின் எங்கள் வீட்டில் இருந்த அறையில் யாரும் படுக்க மாட்டோம்.  அது மட்டுமல்ல.  கருப்பு எங்கள் வீட்டில் நடமாட இடம் விட்டுதான் நாங்கள் படுப்போம்.  காலை சற்று சீக்கிரம் எழுந்தால், கருப்பை எங்கள் வீட்டில் பார்க்கலாம் என்று நம்பினேன்.  ஆனால், ஒரு நாளும் ஏழுக்கு முன் எழ முடிந்ததில்லை.  அதனால் கருப்பை நேரே பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை.

மீண்டும் பாட்டி பற்றி.  பாட்டி கொஞ்சம் ஆசாரம் தான்.  ஆனால் அவர் கடவுளாக ஏற்றுக்கொகொண்ட கருப்பு அப்படி இல்லை.  வருடம் ஒரு முறை ஆடு வெட்டி கொடுக்கும் பலியை ஏற்றுக்கொள்வார்.  ஆடு வெட்டப்படும்போது, சிறிதும் இரக்கமோ, பக்தியோ இல்லாமல், ஒன்றிரண்டு வருடங்கள் வேடிக்கை பார்த்திருக்கிறேன். அவர் படையலுக்கு வைக்கப்படும் பொருட்களில் சுருட்டு உண்டு.  மதுவிலக்கு அமலில் இருந்தமையால், அவருக்கு சாராயம் கிடைத்திருக்காது.  இப்போது கிடைக்கும் என்று நம்புகிறேன்.

தன் தனிப்பட்ட விழுமியங்களோடு ஒத்துப்போகும் ஒன்றை அல்லது ஒருவரைதான் கடவுளாக தேர்ந்தெடுப்பதுதான்  நம்பிக்கை என்றால், அதன் அடித்தளம் மிக பலவீனமானது.  தன் கடவுள் தன் விருப்பத்திற்க்கு மாறாக இருப்பது தெரியவந்தால்,  நம்பிக்கை ஆட்டம் காணும்.

அப்போது எந்த நம்பிக்கை நிலையாக இருக்கும்?  தான் கடவுளாக ஏற்றுக்கொண்டவருடன் ஒரு மானசீக உணர்வுபூர்வமான உறவு இருக்கும்போது, அந்த நம்பிக்கை பலம் அடைகிறது.  அந்த உறவு, பொருள் உலக உறவு போல இருத்தல் நல்லது - தாயாக, தந்தையாக, குழந்தையாக, நண்பனாக இருத்தல் சிறப்பு.  ஏனென்றால், அவர்களின் நிறை, குறைகள் உறவை பெரிதாக பாதிப்பதில்லை.

என் பாட்டிக்கு பக்கத்து வீட்டுக் காரனாக கருப்பு இருந்தான்.  பக்கத்து வீட்டுக்காரன் சுருட்டு பிடித்து, சாராயம் குடிப்பவனாக இருந்தால் என்ன? பக்கத்து வீட்டுக்காரன் அங்கே தான் இருப்பான்.  அதை ஏற்றுக்கொண்டு விட்டால், அவன் பழக்கத்தைப் பற்றி யோசிப்பதில் என்ன இருக்கிறது!

என் மகனை பல நேரங்களில், கருப்பு என்று அன்புடன் அழைப்பது சுகமாகவே இருக்கிறது.
  

3 comments:

vijayakumar said...

அவதானிப்பு அருமை.
கட்டுரை முடிந்தவிதம் சூப்பர் .

vijayakumar said...

அவதானிப்பு அருமை.
கட்டுரை முடிந்தவிதம் சூப்பர் .

Venkatesan said...

Nice Sridhar excellent message

Guilt, Fear and their effects

A senior gentleman passed away early this morning near my place.  Nothing unusual about elderly people passing away.  His son was away in fo...