தசம பாகம் அல்லது பூவும் பொட்டும்
[இந்தக் கதையில் வரும் சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே. இந்தக் கதையின் கரு கார் ஓட்டும் ஒரு நண்பர் கொடுத்தது. அவர் செய்ய நினைத்ததாக விளையாட்டாகக் கூறியதை சற்றே மசாலா தடவி பொறித்துள்ளேன்.] மோசஸுக்கு எதேச்சையாகத் தான் அந்த யோசனை தோன்றியது. ஊழியத்திற்குப் போக முடியாமல் பணியின் அழுத்தம். வாக் இன் இண்டர்வ்யூ என்று ஏதாவதொரு நகரத்திற்கோ, சிற்றூருக்கோ வாராவாரம் அலைச்சல். திங்கட்கிழமை காலை தவறாமல் பாஸ்டர் கூப்பிட்டு விடுவார். பிளாக் செய்யலாமா என்று கூட யோசித்திருக்கிறான். உடனே எடுக்காவிட்டாலும், மரியாதைக்காக பின்னர் கூப்பிட்டுவிடுவான். ஒரு திங்கட்கிழமை தவறு செய்ய சிறு வாய்ப்பை பாஸ்டர் கொடுத்தார். இண்டர்வ்யூ முடிந்து ஆஃபர் லெட்டர் தயாரிக்கும் பணியில் இருந்த போது பாஸ்டரின் அழைப்பு வந்தது. "நீங்க வேலை விஷயமா ஊர் ஊரா அலையுறீங்க. எத்தனை பேரை சந்திப்பீங்க! அதுல ஒருத்தர் கிட்ட கூட நீங்க கர்த்தர் பற்றி கூட பேசியிருக்க மாட்டீங்களா என்ன? உங்களோட நம்பிக்கை பற்றி எனக்குத் தெரியும். பேசியிருந்தீங்கன்னா அவங்க பெயர், விவரங்களை அனுப்புங்க. நம்ம க...