"யூ மே கோ இன் சார்", என்றாள் உதவிப் பெண்.
"வா, வா, எத்தனை நாள் ஆச்சு பார்த்து. எப்படி இருக்கே? இன்னும் உத்தராகண்ட்ல தான் இருக்கேன்னு நினைச்சேன்." என்றாள் கமலா. கமலா அனந்தராமன். பிரின்ஸிபல்.
"அங்கதான் இருக்கேன். ஒரு வேலையா இந்தப்பக்கம் வந்தேன். உன்னையும் பார்த்துவிட்டுப் போலாம்னு வந்தேன். அப்படியே நாம மூணு வருஷம் முன்ன ஆரம்பிச்ச ஸ்வச்ச பாரத் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்னு இந்தப் பக்கம் வந்தேன்."
மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பித்த ஒரு சிறு முயற்சி அது. பிரதம மந்திரியின் தூய்மை பாரதம் பற்றி கமலாவுடன் பேசிக்கொண்டிருந்த போது, சிறு வயதில் சுற்றுப்புற தூய்மையை குழந்தைகள் தெரிந்து கொண்டால், 5, 10 வருடங்களில் பெரும் மாற்றம் கொண்டு வரலாம் என்று பேசினோம். அத்துடன், ஜப்பானில், பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லை என்றும் சொன்னேன். குழந்தைகளே, பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள பழகிக்கொள்கின்றனர் என்றேன்.
"இங்க குழந்தைகள சுத்தம் செய்ய சொன்னா, அப்புறம், தினமலர்ல போட்டு காச்சிருவான். டிஈஓ, ஸிஏஓன்னு நான் தான் பதில் சொல்லணும்."
"அப்ப ஒண்ணு செய்யலாம். பெற்றோர்களை வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ அவர்கள் குழந்தைகளின் பள்ளியில் துப்புரவு செய்யச் சொல்லலாம். அவர்கள் செய்வது, குழந்தைகளுக்கும், பிற பெற்றோருக்கும் ஒரு ஊக்கமாக இருக்கலாம். உன் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர், குடிமை உணர்வு மேலானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்."
நான் அதை கிண்டலாகத்தான் சொன்னேன். சென்னையில் உயர் மத்திய வர்க்கம் இருக்கும் ஒரு பகுதியில் உள்ள பல பள்ளிகளில் அதுவும் ஒன்று. எனக்கு சென்னையின் உயர் மத்திய வர்க்கம் ஒரு ஹிப்போக்ரைட் சமூகம் என்ற திட்டவட்டமான எண்ணம் உண்டு.
என் கிண்டலை, கமலா புரிந்து கொள்ளவில்லை.
"நல்ல ஐடியா. செய்வோம். அடுத்த பிடிஏ மீட்டிங்கில் இதைப்பற்றி பேசுகிறன்."
பின்னர் கமலாதான் எனக்கு போன் செய்தாள்.
"நீ சொன்ன ஐடியா எல்லோருக்கும் பிடித்திருந்தது. பிடிஏல நான் பேசினப்புறம் எல்லா பேரண்ட்ஸும் உற்சாகமாக கலந்துக்க பேர் கொடுத்திருக்காங்க. என் அஸிஸ்டெண்ட் ஜானகி தான் ஸ்கெட்யூல் எல்லாம் போட்டு மானேஜ் பண்ணறா. யூ வில் ஸீ ய டிஃபரென்ஸ் நெக்ஸ்ட் டைம்." என்றாள்.
அதற்குப்பின் நான் அதை மறந்து விட்டேன். இப்போது தான் கேட்க வாய்ப்பு வந்தது.
"ஐ திங்க் வி டிட் இட். ஸ்கூல் எவ்வளவு நீட்டா இருக்குன்னு பார். முன்னாடி இருந்த துப்புரவு பணியாளர்களை ரீட்ரெயின் பண்ணி மற்ற வேலைக்கு மாத்திட்டோம். ஜானகிய கூப்பிடறேன். இந்த ஏரியாவில் மத்த ஸ்கூல்லெல்லாம் கூட ஃபாலோ பண்ணறாங்கன்னு கேள்விப்பட்டேன்."
என்னால் நம்ப முடியவில்லை.
ஜானகி, கமலாவுக்கு அடுத்த ஸீனியர், கண்டிப்பானவராகத் தெரிந்தாள். வரிசையில் கமலாவுக்குப்பின் அடுத்த ப்ரின்ஸிபல் அவள்தான் போலும். உற்சாகமாக சொன்னாள்.
"யெஸ், இட் ஈஸ் வொர்க்கிங்."
"எவ்வளவு பேரண்ட்ஸ் வராங்க."
"அது... வந்து"
"ஏன்? என்னாச்சு?"
"முதல்ல ஒரு மாசம், பேரண்ட்ஸ் ஒழுங்காதான் வந்திட்டு இருந்தாங்க. அப்புறம் ஒரு பேரண்ட் அவர் ஆன்ஸைட் போற வேல வந்திடுச்சுன்னு, அவரோட டிரைவர அனுப்பிச்சார். அதே வாரம், இன்னோரு பேரண்ட், ஆபீஸ்ல மீட்டிங்னு, அவர் தம்பிய அனுப்பிச்சார்."
"இப்ப?"
"அது, முன்னாடி துப்புரவு வேலை செஞ்சுகிட்டிருந்தவங்களே கொஞ்சம் எக்ஸ்ட்ரா வருமானம் வரும்னு அவங்களே பேரண்ட்ஸோட பேசி செய்யராங்க."
வறட்சியாக சிரித்தேன்.
"அப்புறம் பாக்கலாம் கமலா. நைஸ் மீட்டிங் யூ ஜானகி."
வெளியே பள்ளி வாசலில், நீலச்சட்டை அணிந்த ஒரு இளைஞன், கையில் நோட்டுப்புத்தகம், பேனா சகிதம், ஒரு பெண்ணிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
"இன்னிக்கு, நீ இங்க பாத்துடு. நான், குமார நாளைக்கு இங்க வரச்சொல்லிட்டேன். அவனுக்கு சிக்ஷால தான் டூட்டி போட்டிருக்கேன். பதினோரு மணிக்கு வந்திருவான்."
No comments:
Post a Comment