Tuesday, August 15, 2017

மெஷின் லேர்னிங்

"நாளைக்கு மூணு மணிக்குமேல் வந்துவிடு.  எனக்கும் கிளாஸ் முடிஞ்சிருக்கும்.  உன்னோட பிராஜக்ட் பத்தி பேசலாம்.”

தயங்கி நின்றான். 

“வேற ஏதாவது வேல இருக்கா?” என்றேன்.

திடீரென்று முகத்தில் தெளிவுடன், “இல்ல சார். வந்திடறேன்.”   எனக்குத் தெரியும்.  வெள்ளிக்கிழமை புதுப்படம் ஏதாவது வெளியாகி இருக்கும்.  எனக்காக அதை ஒத்திப் போட்டிருப்பான்.

தமிழ்வாணன் மேல் எனக்கு ஒரு தனி கவனம் உண்டு.  விவசாயக்குடும்பத்தில் இருந்து வந்ததனால் இருக்கலாம்.  ஒவ்வொரு நாளும், பனிரெண்டு மணி நேரங்களுக்கு மேல் கடின உடல் உழைப்பில் அவன் குடும்பமே ஈடுபட்டதாக அவன் சொன்னதும் காரணமாக இருக்கலாம்.  கல்வியால் முன்னேறிவிடலாம் என்ற அவன் நம்பிக்கையால் இருக்கலாம்.  அதிக புத்திகூர்மை இல்லாவிட்டாலும், கடின உழைப்புக்கு அஞ்சாதவன்.

என் எம் ஈ மாணவர்களில் ஒரே நம்பிக்கை அவன் தான்.  இங்கு முது நிலை கல்வியின் நிலமை அது.  வேறு வேலை கிடைக்காதது, கல்யாணம் தள்ளிப்போவது போன்ற காரணங்களுக்காக  எம் ஈ சேருபவர்கள்தான் அதிகம்.  தமிழ் மட்டும்தான் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன் வந்தான்.

வெள்ளிக்கிழமை வந்தான்.

“உனக்கு ஜோஸியம் பத்தி என்ன தெரியும்.”

“அதுல எல்லாம் நம்பிக்கை இல்ல சார்.”  

படிக்கும் காலத்தில் லிண்டா குட்மனை கடலை போட பயன் படுத்திய எனக்கு கொஞ்சம் ஆச்சர்யம் தான்.  தலைமுறை இடைவெளி!

“எனக்கும் க்வாண்டம் மெகானிக்ஸ் மேல நம்பிக்கை இல்லை.  ஆனால் படிக்க வேண்டி இருந்தது. அதனால் நீயும் படிக்கணும்.  குறைந்தது அடிப்படையாவது தெரிஞ்சுக்கணும்.   நான் ஏற்பாடு பண்றேன்.”

“மெஷின் லேர்னிங் பத்தியும் நீ தெரிஞ்சுக்கணும்.  அது கோர்ஸ்லயே வந்திடும். கொஞ்சம் ஒழுங்கா படிச்சுடு.  இது ரெண்டையும் வெச்சுதான் பிராஜக்ட் பண்ணப் போறோம்.”

“எனக்கும் ஜோஸியம் மேல பெரிய நம்பிக்கை இல்லை.  ஆனால் நம்ம ஜோஸியத்துல சில ஆச்சர்யமான விஷயங்கள் இருக்கு.  கோள்களின் அடிப்படையில் பல விஷயங்கள கணிக்கிறாங்க.  என் நண்பன் ஒருவரோட ஜாதகத்தப் பாத்து அந்த ஆள் எப்படி இருப்பார், அவர் பல் எப்படி இருக்கும்னு கூட சொல்லி இருக்கார். நாம அந்த அளவுக்கு தான் தெரிஞ்சுக்கப் போறோம்.  ஒருத்தரோட ஜாதகத்த வெச்சு, அவரோட சில குணங்கள சரி பார்க்க போறோம்.  உதாரணத்துக்கு, அரசியல்வாதிகள் பலரோட சில அடிப்படை குணங்கள் இருக்கு.  பேச்சுத்திறமை, கவர்ச்சி, கடின உழைப்பு, சாதுர்யம் இப்படி பல.”

“இது ஒரு திட்டவட்டமான கணிப்பு இல்லை.  ஒரு பிராபபிலிடி தான்.  அதத்தான் மெஷின் லேர்னிங்க வெச்சு கணிக்கப் போறோம்.  இருக்கிற தகவல்களை, அதாவது ஜாதகங்களையும் அந்த ஜாதகரோட குணங்களையும் வெச்சு ஒரு அன்ஸூபர்வைஸ்ட் லேர்னிங் வெச்சு, க்ளஸ்டர் பண்ணுவோம்.   அதற்குப்பின், ஒரு புது தகவல்கள கொடுத்து, அந்த ஜாதகர் ஒரு அரசியல்வாதியாக முடியுமான்னு பார்க்கப் போறோம். சிம்பிள் ஒன் ஃபார் சிக்ஸ் மந்த்ஸ்.  பொழச்சுக்கிடந்தா, யாரயாவது பி.எச்டி ஸ்டூடண்ட வெச்சு எனக்கு அடுத்த வேள சோறு கிடைக்குமான்னு ரிசர்ச் பண்ணலாம்.  இப்ப அது வேண்டாம்.”

“என் கஸின் பாலுட்ட பேசிட்டேன்.  நாளைக்கும் நாளன்னிக்கும் உனக்கு டைம் கொடுத்திருக்கான்.  ஒரு நாலு நாலு மணி நேரம் உட்கார்ந்து கொஞ்சம் கத்துக்கோ.  ரெபரென்ஸ் புக்ஸ் என்னனு கேட்டு வாங்கிக்கோ. அவனே தருவான்.  வேணாம்னு சொல்லிடு.  நானும் கொஞ்சம் பணம் செலவழிக்கணும் இல்லையா?  லைப்ரரில வாங்கச்சொன்னா, ஒரு வருஷம் ஆகும்.”

திங்கட்கிழமை சோர்வாக வந்தான்.

“சார், மெஷின் லேர்னிங்கலயே வேற ஏதாவது பிராஜக்ட் செய்யாலாமா சார்?”

நான் முறைத்தேன்.

“இல்ல, வீட்ல சித்தப்பா திட்றாரு சார்.  நாங்கள்ளாம் பகுத்தறிவு கட்சி சார்.  கோவிலுக்கெல்லாம் போகமாட்டோம். ஜோஸியத்துல நம்பிக்கை இல்லை. அதனால…”

என் கோபம் எல்லை மீறியது.

“அறிவிருக்கா உனக்கு. இது வரைக்கும் சப்ஜெக்டிவா ஜோஸியர்கள் சொல்வதற்கு பதிலா, மனிதர்களின் சார்பில்லாமல், இதை ஆராய மெஷின் லேர்னிங்கற அற்புதமான ஆயுதம் இருக்கு.  இத வெச்சு ஜோசியம் எல்லாம் ஏமாத்து வேலன்னு கூட ப்ரூவ் பண்ணலாம்.  அது தான் பகுத்தறிவு.”

“வேணாம் சார்.  ஒரு வேள ஜோசியம் உண்மைன்னு ப்ரூவ் ஆயிருச்சுன்னா?….”

[பி.கு: இந்த விஷயத்தில் ஏற்கனவே ஆரம்பித்துள்ள ஆராய்ச்சி https://www.youtube.com/watch?v=UeHC9mfwKOg]

3 comments:

Unknown said...

Superb TRS.. beautifully written.. great idea applying machine learning for josiyam :-) :-)

Sridhar said...

Thanks Ramki.

Unknown said...

One of friends in REC, now settled in LA, was attempting to do something like this.

I'm not aware of outcome..

One law for all - Ignoring Subjectivity*

A recent incident in my apartment complex highlighted a concerning disparity: businessmen seem to operate under a different set of rules. Wh...