Thursday, March 24, 2022

கஷ்மீர் ஃபைல்ஸ் - சில சிந்தனைகள்

 கஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்த்துவிட்டு வந்து சில நாட்களாகின்றன.  மனம் இன்னும் அமைதியடையவில்லை.  அதற்குக் காரணம் - படத்தில் கண்ட வன்முறை மட்டுமல்ல;  படத்தில் காட்டிய வன்முறையை விட பல மடங்கு கொடுமைகளை பண்டிட்டுகள் சந்தித்துள்ளனர் என்பதை நாம் வெறும் தகவல்களாக அறிவோம்.  இத்தனை வருடங்கள் நாம் பண்டிட்டுகளின் பாதிப்பை உணராமல் இருக்கின்றோமே என்பது பெரும் சோகம்.  இந்த ‘நாம்’ என்னையும் சேர்த்துத்தான்.


உணர்வுத் தீவுகள்


வாயில் மைக்கைத் திணித்து கருத்து வாங்கும் தொலைக்காட்சி கலாச்சாரம் வந்தபின்னும், நதிமார்க் படுகொலையை மக்கள் முன் வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தேட எந்தத் தொலைக்காட்சியும் பத்திரிகையாளரும் முன்வரவில்லை.  அவர்கள் பிழைப்புக்காக அடுத்த செய்திகளுக்குத் தாவி விடுவர் என்பது இயல்பு.  1990களில் பிட்டா கராத்தேயுடனான அந்த நேர்காணலைப் பார்த்த நினைவிருக்கிறது.  அதில் அவன் முதலில் கொன்றது சதீஷ் என்ற பண்டிட் இளைஞனை என்பது நினைவில் இருக்கிறது.  கிட்டத்தட்ட அந்தக் காட்சி ‘ரோஜா’ திரைப்படத்தில் வந்தது.  அந்தப் பண்டிட்டின் குடும்பத்தின் கதி என்ன என்று எந்தப் பத்திரிகையாளரும் கண்டுபிடிக்க முனையவில்லை. அது இயல்பு தான் என்றாலும், அன்று எனக்கு ஏன் அந்தக் கேள்வி எழவில்லை?


முப்பது வருடங்களுக்குப் பின் வந்த ஒரு திரைப்படத்திற்குப் பின் தான் எனக்கும், என்னைப் போன்ற சராசரி ஹிந்துத்துவர்களுக்கும் அந்தக் கேள்வி எழுகிறது.  மற்றவர்களுக்கு?


அந்தக் காலங்களில், கஷ்மீர் பயங்கரவாதிகள் கூட்டிய கூட்டங்களையும் அதில் எழுப்பப்பட்ட முழக்கங்களையும் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.  பனி மூடிய நகரில், கறுப்பு, சாம்பல் உடைகளில் துப்பாக்கி ஏந்திய கூட்டத்தை மனத்திரையில் காணமுடிந்தது. அதை நேரடியாகக் கண்ட காட்சி ஊடகத்தினர், ஹாலிவுட் படக்காட்சிகளை நேரில் பார்த்த திருப்தியுடன் பதிவு செய்திருக்கக் கூடும்.  துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் அவர்களுக்கு ஹீரோக்களாகத் தெரிந்திருக்கக் கூடும்.  ஹீரோக்கள் காட்டிய ‘கெத்’துகளும் கஷ்மீரியத் என்ற பிரிவினைவாத கொள்கைகளும் அவர்களை ஈர்த்திருக்கலாம்.  பார்த்தவர்களில் பண்டிட்டுகளும் இருந்தனர்.  


பிறர் துன்பத்தை உணர முடியாத தீவுகளாக நாம் இருந்திருக்கிறோம்.  ஊடகங்கள் தேவைப்படும் போது மக்களை உணர்வு பூர்வமாகத் திரட்டியதைப் பார்க்கிறோம்.  ஆனால், காஷ்மீர் பண்டிட்டுகளைப் பொறுத்தவரை ஊடகங்கள் அதைச் செய்ய முயலவில்லை.  அந்த விதத்தில் இந்தத் திரைப்படம் இந்தியர்களை - முக்கியமாக ஹிந்துக்களை உணர்வு பூர்வமாக இணைக்க முயன்றிருக்கிறது.


பிராமணர்கள் அனுதாபம் தேடுவதில்லை 


ஒரு விதத்தில் பெரும்பாலான பண்டிட்டுகள் தங்களை பாதிக்கப்பட்டவர்களாக பார்க்கப்படுவதை விரும்பவில்லை என்றே தோன்றுகிறது.  இந்தத் திரைப்படத்திலும், புஷ்கர்நாத் தனக்கு நடந்த கொடுமைகளைச் சொல்லி அனுதாபம் தேட முனையவில்லை.  


ஒன்று - கடும் வன்முறையும் இழப்பும் மனிதனை மரத்துப் போகச் செய்திருக்கும்.  படத்தில் வசனமாகவும் இந்தக் காரணம் சொல்லப்படுகிறது.  


இரண்டு - வாழ்க்கையே கேள்விக்குறியாகும் போது, நினைவுகள் சுமைகளாக இருந்திருக்கும்; வாழும் ஆசை உள்ளவர்கள் சோக நினைவுகளை ஆழ்மனதில் அடக்கம் செய்துவிட்டு நிகழ்காலத்தில் வாழ முயன்றிருக்கலாம்.   முயன்று தோல்வியுற்று தற்கொலை செய்துகொண்டவரைப் பற்றி ஒத்திசைவு தளத்தில் படிக்கவும்.  


மூன்று - ஆன்மீகத்தை எதேச்சையாக அறிந்திருந்தாலும் ஹிந்து, முக்கியமாக பிராமணர்களான பண்டிட்டுகள், அனுதாபம் தேடுபவர்கள் இல்லையோ? அவர்கள் வணங்கும் சாரதா  தேவியும் சிவனும் கொடுத்த சக்தியில்,  பலர் கடும் உழைப்பினால் பல்வேறு நாடுகளில் முன்னுக்கு வந்துள்ளனர்.  மத்திய மாநில அரசுகளும், சட்டங்களும்  பிராமணர்களுக்கு எதிரான போக்குகளைக் கொண்டிருந்தாலும், இந்த நாட்டின் மீதுள்ள பற்றினால் அவற்றைப் பொருட்படுத்தாமல், உழைப்பை அதிகரித்த பிராமணர்களையும் நாம் அறிவோம்.


பண்டிட் அமைப்புகள் (எடுத்துக்காட்டாக: பாணூன் கஷ்மீர் அமைப்பு, அதன் மார்க்கதர்ஷன் தீர்மானம் வழி) இந்த அவலத்தை வெளியே எடுத்துச் செல்ல முயன்றன - ஆனால் வெற்றி பரவில்லை. இதற்குப் பல காரணங்கள். :-(

  - நண்பரின் தகவல்


இப்போது பண்டிட்டுகள், நடந்த வன்முறையை பிறர் அறிய வேண்டும் என்ற முனைப்பில் மட்டுமே உள்ளனர்.  நடந்த அநீதி, இஸ்லாம் ஆதரிக்கும் வன்முறை ஆகியவற்றை உலகம் அறிய வேண்டும் என்ற முனைப்பையே நான் பார்க்கிறேன்.  சிலருக்கு மீண்டும் கஷ்மீரில் வசிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கக் கூடும்.  நடைமுறையில் அது சாத்தியமா என்பது பெரும் கேள்வி.  


கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?


இந்தப் படத்திற்குப் பின் எழும் முக்கியமான கேள்விகள் - தொடர்ந்து பெங்கால் ஃபைல்ஸ், கேரளா ஃபைல்ஸ் படங்களுக்கு நாம் இடமளிக்கப் போகிறோமா அல்லது அரசியல், சமுக, அறிவுப்புலங்களில் மாற்றத்திற்காக உழைக்கப்போகிறோமா என்பதே.


இந்தத் திரைப்படத்திற்கு ஆதரவு தந்த தரப்புகளில் ஏதும் ஆச்சர்யம் இல்லை.  எதிர்த்தரப்பும் ஆச்சர்யத்திற்கு உரியதல்ல.   முகத்திரை கிழிக்கப்பட்டதில் அவர்களிடம் அதிர்ச்சியும் பயமும் காணப்படுகிறது. 


ஒரு மிகப்பெரும் கூட்டம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறது.   காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் தான் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலையில், சமூகத்தை பெரிதும் பாதிக்கவல்ல திரைப்பட ஊடகத்தினரின் அமைதி முகத்தில் அறைகிறது.  இந்தியா முழுதும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே நடிகர்களும் திரைப்படத்துறையில் பிறரும் இந்தப் படத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். விவேக் அக்னிஹோத்ரி உண்மையை உரத்துச் சொல்ல முடிந்ததால் அவர் மேலுள்ள பொறாமையா?  நடிகர் நடிகையர் மக்களின் பாராட்டுகளைப் பெறுவதால் அவர்கள் மேல் பொறாமையா?  பொறாமைதான் காரணம் என்றால் அது புரிந்துகொள்ளக்கூடியதே.  ஆனால் அது காரணமல்ல என்பதும் நாம் அறிந்ததே.  அவர்கள் அமைதிக்குக் காரணம் - மாபெரும் கோழைத்தனம். 


இந்தக் கோழைகள்தான் அவர்களுடைய திரைப்படங்கள் மூலம் சமூகத்தை ஆட்டிவைக்கிறார்கள் என்பது நம் பெரும் துர்பாக்கியம்.  அவர்கள் மட்டும் வீரர்களாக இருந்தால், இந்தப் படம் போல உண்மையை உரக்கச் சொல்ல தைரியம் பெறவேண்டும், அப்படி இல்லையென்றால், இந்தக் கோமாளிகளின் செல்வாக்கு குறைக்கப்பட வேண்டும்.  முடிவாக, இப்படத்திலிருந்து எழும் கேள்விகளை, திரையுலகக் கோமாளிகள் முன் வைக்கிறேன்.  


“தொடர்ந்து பெங்கால் ஃபைல்ஸ், கேரளா ஃபைல்ஸ் படங்களுக்கு நாம் இடமளிக்கப் போகிறோமா அல்லது அரசியல், சமுக, அறிவுப்புலங்களில் மாற்றத்திற்காக உழைக்கப்போகிறோமா?”


2 comments:

othisaivu said...

// முயன்று தோல்வியுற்று தற்கொலை செய்துகொண்டவரைப் பற்றி ஒத்திசைவு தளத்தில் படிக்கவும்.

நன்றி, அதற்கான சுட்டி: https://othisaivu.in/2014/01/19/post-320/

நல்ல கட்டுரை - தங்கள் சிந்தனைகளைப் பகிர்ந்ததற்கு நன்றி.

நீங்கள் ஏன், இரண்டுவாரங்களுக்கு ஒருமுறையாவது காத்திரமான பதிவொன்றை இட முயற்சிக்கக் கூடாது?

***

விவேக் அவர்களைப் பற்றிப் பல்லாண்டுகளாக அறிவேன், அவர் புத்திசாலி, கடுமையாக உழைக்கக்கூடியவர், அவர் மனைவி பல்லவிஜோஷி அவர்கள் ஒரு ஜொலிக்கும் பாரதீயர் - என்றெல்லாம் இருந்தாலும் - சுமார் 10-15 வருடம் முன் கூட அவருக்கு, பாரதீய விஷயங்கள் குறித்த ப்ரக்ஞை இருந்ததா என எனக்குச் சந்தேகம்தான். ஒரு சாதாரண 'லிபரல்' ஆகத்தான் சராசரியாக இருந்தார். ஆனால், அவர் பொதுவாக சமூகவலைத்தளங்களில் ஊடாட வந்தபிறகுதான் அவருக்கு, இம்மாதிரி விஷயங்கள் குறித்த சிந்தனைகள் வாய்க்கப் பெற்றிருக்கவேண்டும்.

அதற்குப் பின் அவர் எடுத்த படங்களின் வீரியமும், தாக்கத்தும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.

கொஞ்சம் யோசியுங்கள் - அவர் நோக்கில் + பாதையில் மாற்றம் என்பது, சமூகவலைத்தளங்களின் நேரிடை சாத்தியக்கூறுகளால்தான் சாத்தியமாகி இருக்கிறது.

இதற்கு முன் எஸ்டாப்ளிஷ்மெண்ட் பெருச்சாளிகள்தான் கருத்துருவாக்கில் ஏகபோக முதலாளிகளாக இருந்தனர். மூளைச்சலவை செய்வதும் அவர்களுக்கு எளிதாக இருந்தது. இப்போது அப்படியில்லை, நல்லவேளை!

ஆகவே எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் - இந்த சமூகவலையை ஆர்வத்துடனும் அணுகி, அதைக் குறித்த சாத்தியக்கூறுகளை வைத்து நேர்மையான உரையாடல்களை நடத்துவதும் முக்கியம் - இதனால், வெள்ளையடித்தல்கள் அம்பலப் படுத்தப்பட்டு பரப்புரை செய்யப்பட்டாலே, நம் பாரதத்துக்கு நன்மைகள் விளையும் என்பதில் சந்தேகமேயில்லை.

அதனால் மேற்கொண்டு *ஃபைல்ஸ் வந்தால் அவற்றை வரவேற்பேன்; இந்த ஃபார்மேட் நன்றாக இருக்கிறது. வாய் ஓயாமல் பேசி கை ஓயாமல் தட்டச்சு செய்து ஒரு நூறு ஆண்டுகளில் சாதிக்கமுடியாததை - ஒரு அணுக்கமான திரைப்படம் சாதித்திருக்கிறது - ஆகவே இது நல்ல விஷயமே.

ஆனால், வெறுமனே பேசிக்கொண்டு இராமல் களப்பணிகள் பலவிதங்களிலும் செய்யவேண்டும் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.

பார்க்கலாம்...

பிராமணர்கள் பெரும்பாலும் அனுதாபம் தேடுவதில்லை என்பது உண்மைதான் என்றாலும், நீதி கிடைக்கவேண்டியது முக்கியம்; அதே சமயம், எந்தவொரு மக்கள் திரளும் கண்ணீரும்கம்பலையுமாக, 'எங்களை வஞ்சித்து விட்டார்கள், ஒடுக்கி விட்டார்கள்' என அலைய, மருகவேண்டிய அவசியம் இல்லை - மாறாக விஷயங்கள் தவறென்றால் அதனை மாற்ற, நீதி கிடைக்க எவ்வளவோ காத்திரமான/வன்முறையற்ற வழிகள் இருக்கின்றன என்பதை உணரவேண்டும். வன்முறைதான் வழியென்றாலும் அதனையும் துப்புரவாகச் செய்யவேண்டும்.

உங்கள் சஞ்சிகை தமிழ்க் கட்டுரை - on the parable of the pedestrian - நினைவுக்கு வருகிறது...

---

Sridhar said...

மிக்க நன்றி. தொடர்ந்து எழுத முயல்கிறேன்.

Earlier Posts