Thursday, June 20, 2024

காசி யாத்திரை - சடங்குகளும் திட்டமிடலும் - 3

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

சில முக்கிய குறிப்புகள்


1. நம் வீடுகளில் இருக்கும் அளவிற்கு புண்ணிய க்ஷேத்திரங்களில் சுத்தமோ, ஆச்சாரமோ இருக்காது. அதனால் அந்த விஷயங்கள் உங்கள் ஈடுபாட்டை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

2. புண்ய க்ஷேத்திரங்களில் செய்யும் சடங்குகள் நாம் நம் ஊரில் செய்யும் சடங்குகளிலிருந்து சற்றே மாறுபடக்கூடும்.

3. குறிப்பிட்ட நேரத்தில் மதிய உணவு கிடைப்பது கடினம். சில நாட்களில் மதியம் மூன்று மணிக்கும் மேல் ஆகலாம். பிரஷர், சுகர் உள்ளவர்கள் அதற்கேற்ற முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.

4. காசி படித்துறைகளில் இறங்கி ஏற குறைந்த பட்ச ஆரோக்கியமும் ஓரளவு வலுவான முழங்கால்களும் தேவை.

5. சில படித்துறைகளில் உள்ள பாசமும், ஆழமும் நேரே கைலாயத்திற்கு இட்டுச் செல்லக் கூடும். கைலாயம் செல்லத் தயராக இல்லாதவர்கள் கவனமாக இருக்கவும்.

6. அதிக வயதானவர்களை அழைத்துச் செல்வதாக இருந்தால், அவர்களை முழு நேரம் கவனித்துக் கொள்பவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். வயதானவர்களைக் கவனித்துக் கொண்டே, சடங்குகளில் முழு மனதாக ஈடுபடுவது சாத்தியமில்லை.

7. சில இடங்களில் சக்கர நாற்காலி கிடைக்கும். காசியின் பல கோவில்களுக்குச் செல்ல அவற்றைப் பயன்படுத்த இயலாது.

திட்டமிடல்

காசி, பிரயாக்ராஜ், கயா சென்று வர மட்டும் குறைந்தபட்சம் ஐந்து நாட்களை ஒதுக்க வேண்டும்.  பயண கால தாமதம், பயண அசௌகரியம் போன்ற காரணங்களுக்கு இடம் அளித்து, சற்றே அதிகமாக ஒன்றிரண்டு நாட்களை ஒதுக்குவது நல்லது.   முதலில் கூறியுள்ளபடி, காசியில் ஏற்பாடு செய்பவர்களைத் தொடர்பு கொள்வது திட்டமிடலை எளிதாக்கும்.  அவர்களே உறைவிடம், பயணம், உணவு போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்ய உதவுவர்.


உறைவிடமும் பயண வசதிகளும்


விடுதிகளில் உச்ச வசதியை எதிர்பார்க்க முடியாது. TripAdvisor போன்ற தளங்களில் அவர்களைப் பற்றிய கருத்துக்களும் ஆதரவாக இருப்பதில்லை.  ஆனால், கிடைப்பது அது தான் என்ற நிலையில், குறைந்த எதிர்பார்ப்பும் புன்னகையும் ஏமாற்றங்களைக் குறைக்க உதவும்.


பிரயாக்ராஜ், கயா போன்ற இடங்களுக்குச் செல்ல கார், வேன் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொள்ளலாம்.  காசியில் உள்ள கோவில்களுக்கும் படி, படகுத்துறைகளுக்குச் செல்ல ஆட்டோக்கள் கிடைக்கும்.  காசி வண்டிக்காரர்கள் பெரிய அளவில் ஏமாற்றுவதில்லை.  வண்டிகள் பகிர்ந்து பயன்படுத்தப்படுவதால், கட்டணங்கள் ஒரு பயணிக்கு என்றே குறிப்பிடப்படுகின்றன.


உடை


சடங்குகள் செய்யும் ஒவ்வொரு நாளும் இரண்டு உடைகள் தேவைப்படும். அதற்காக பத்து ஜோடி உடைகளை எடுத்துச் செல்வது மிகையாகும்.  பெரும்பாலான விடுதிகளில் துணிகளை உலர்த்த இடம் இருக்கும். ஆனால் அவற்றில் வாஷிங் மெஷின்களை எதிர்பார்க்க முடியாது.   மனித சக்தியால் துவைத்து உலர்த்த வேண்டியிருக்கும்.  அதற்குத் தயாராக இருந்தால் சோப், சோப் பவுடர் எடுத்துச் செல்லலாம். கோடை காலத்தில் (மே, ஜூன் மாதங்களில்) துணி ஒன்றிரண்டு மணி நேரங்களில் உலர்ந்து விடும்.  பருவ மழைக்காலங்களில் (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில்) துணிகள் காய்வதற்கு நேரம் எடுக்கும்.


உணவு


காசியில் பயண ஏற்பாடு செய்பவர்கள் உணவுக்கும் ஏற்பாடு செய்யக்கூடும். சடங்குகள் செய்யும் நாட்களில், சிரார்தத்திற்காக சமைக்க சமையல்காரர்களையும் ஏற்பாடு செய்து தருவர். காசி, கயா போன்ற இடங்களில் உள்ள வழக்கப்படி அங்கு கிடைக்கும் காய்கறிகளை வைத்து சமைப்பது நம் ஊர் வழக்கப்படி இல்லாது இருக்கும். சிலர் தமிழ் நாட்டிலிருந்து வாழைக்காய், வாழை இலை போன்றவற்றை வரவழைப்பதும் உண்டு. பெரும்பாலான இடங்களில் காலை எட்டு மணிக்கு முன் டீ மட்டுமே கிடைக்கும்.


செலவு


காசியில் ஏற்பாடு செய்பவர்கள் வைதீக மற்றும் சிரார்த சமையலுக்கான தொகையை முன்னதாகவே குறிப்பிட்டு விடுவர்.  தங்குமிடத்திற்கான செலவு ஒரு நாளைக்கு ₹1800 முதல் ₹2500 வரை ஆகலாம். பிரயாக்ராஜ், கயா போன்ற இடங்களுக்குச் சென்று வரும் செலவு ₹20,000 வரை ஆகலாம்.  இவை 2024ஆம் ஆண்டு நிலவரம்.  இவை தவிர பிற உணவு, காசியில் உள்ளூர் பயணங்கள், படகு வாடகை, கோவில் பிரசாதங்கள், பிரயாக்ராஜில் மழித்தல் போன்ற தேவைகளுக்கு சுமார் ₹15,000 ஆகலாம்.  கடும் கோடை காலத்தில் தண்ணீருக்கு மட்டுமே ₹500 முதல் ₹1000 ஆகக்கூடும்.  குளிர் காலத்தில், ஸ்வெட்டர் போன்ற தேவைகள் ஏற்படலாம்.


தேவை

செலவு (2024 நிலவரப்படி)

வைதீகக் காரியங்கள், சிரார்த சமையல் செலவுகள்

சுமார் ₹60,000

தங்குமிடம்

நாளொன்றுக்கு இருவருக்கு ₹2500

நீண்ட தூரப் பயணங்கள்

₹20,000

உள்ளூர், படகுப் பயணங்கள் மற்றும் இதர செலவுகள்

₹15,000

இரயில், விமானப் பயணச் செலவு


உணவு, தண்ணீர்

நாளொன்றுக்கு இருவருக்கு ₹1,000 

அன்பளிப்பு, பிச்சை போன்றவை

₹5,000


உத்தேச பயண விவரம்

நாள்

விவரம்

1

இராமேஸ்வரம் செல்லுதல்

2

இராமேஸவரத்தில் செய்யும் சடங்குகள்

3

வீடு திரும்புதல், ஓய்வு.

4

காசி யாத்திரை தொடக்கம்

5

பிரயாக்ராஜ் சடங்குகள்

6

காசியில் நீராடி சிரார்தம், காசி கோவில்கள்

7

காசி படித்துறைகளில் பிண்டமிடுதல், கயா பயணம்

8

கயா சடங்குகள், காசி திரும்புதல்

9

தம்பதி பூஜை, காசி கோவில்கள்

10

ஓய்வு நாள் / காசி சுற்றிப்பார்த்தல்

11

காசியிலிருந்து ஊர் திரும்புதல்

12

ஓய்வு

13

இராமேஸ்வரம் பயணம், இராமநாதஸ்வாமி அபிஷேகம், ஊர் திரும்புதல்

14

ஓய்வு

15

சமாராதனை


இதே போன்ற விவரத்திற்கு - https://brahminrituals.blogspot.com/2015/06/tips-to-pilgrimage-to-prayag-varanasi.html


No comments:

One law for all - Ignoring Subjectivity*

A recent incident in my apartment complex highlighted a concerning disparity: businessmen seem to operate under a different set of rules. Wh...