Friday, August 02, 2024

தெரியாது என்று தெரியாது

கடந்த சில நாட்களாக சுற்றங்களுடனும் நண்பர்களுடன் நடந்த உரையாடல்களில் நம்முடைய வட்டம் எவ்வளவு சிறியது என்று உணர முடிந்தது.  ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்தை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  அங்கு வந்திருந்த பெரும்பான்மையான கட்சிக்காரர்களுடன் எங்களால் பத்து நிமிடங்கள் கூட உரையாட முடியாது.  நம் உலகம் வேறு; அவர்கள் உலகம் வேறு என்பதை அதுவரை மேலோட்டமாக அறிந்திருந்தாலும் அன்று அந்த உண்மை உரைத்தது.

ஓரளவுக்கு அந்த கட்சிக்காரர்கள் வாக்களிக்கும் மக்களுடன் தொடர்பில் இருப்பவர்கள். பிற கட்சிக்காரர்களுக்கு சற்றே அதிக தொடர்பு இருக்கலாம்.   ஆனால் சமூக வலைத்தளங்களிலும் வழக்கமான ஊடங்களிலும் அரசியல் பேசுபவர்களை விட கட்சிக்காரர்களுக்கு மக்களைப் பற்றிய அதிக பரிச்சயம் இருக்கும்.  

நாம் எந்த அளவுக்கு வாக்களிக்கும் மக்களை அறிந்திருக்கிறோம் என்பதை பின் வரும் ட்வீட் விளக்குகிறது. 

இதன் பொருள்: 
நீங்கள் வாட்ஸப், டிவிட்டர், ஃபேஸ்புக்கில் அரசியல் விவகாரங்களில் நேரத்தைக் கழிப்பவர்களா? நீங்கள் எவ்வளவு வித்தியாசமானவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? 
நீங்கள் கல்லூரிப் படிப்பை முடித்தவராக இருந்தால், நீங்கள் வாக்களிக்கும் பெரும்பான்மையான மக்களைப் போன்றவர் இல்லை. 

சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுபவராக இருந்தால், நீங்கள் வாக்களிக்கும் பெரும்பான்மையான மக்களைப் போன்றவர் இல்லை. 

நீங்கள் வேலை பாரக்கும் இடத்தில் 100 பேருக்கு மேல் வேலையில் இருந்தால், நீங்கள் வாக்களிக்கும் பெரும்பான்மையான மக்களைப் போன்றவர் இல்லை. 

உங்களுடைய எம்.எல்.ஏ, எம்.பி யார் என்று உங்களுக்குத் தெரியுமென்றால், நீங்கள் வாக்களிக்கும் பெரும்பான்மையான மக்களைப் போன்றவர் இல்லை. 

அரசியல் 
செய்திகளை உன்னிப்பாக கவனிப்பவர் என்றால், நீங்கள் வாக்களிக்கும் பெரும்பான்மையான மக்களைப் போன்றவர் இல்லை.

இவை எல்லாம் பொருந்தும் என்றால், நீங்கள் நிச்சயமாக வாக்களிக்கும் பெரும்பான்மையினரைப் போல இல்லை.  

'கொலை  தீயச்செயல்' என்பது போன்ற அடிப்படை விஷயங்களைத் தவிர பிற அரசியல் விஷயங்களைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்களே சொந்த சிந்தனையைக் கொண்டு மதிப்பிடவே கூடாது. 

ஆனால் நம்மில் பலரும் தனக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு பிறரது கருத்தைப் புரிந்து கொள்ள முயல்கின்றோம்.  தனக்கு இது தெரியாது என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் இருப்பது அறியாமையின் தீவிர வடிவம்.  

இந்த அறியாமை தான் நமது அரசியல் விவாதங்களிலும், சில சமயம் அரசியல் நிர்வாக முடிவுகளையும் ஆட்டிப்படைக்கிறது.

No comments: