Sunday, October 08, 2023

கோவில்கள் ஏன் அரசின் கைகளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்?

 ‘கிறிஸ்தவர்கள் பள்ளிகளையும் கல்லூரிகளையும் ஆரம்பிக்காது இருந்தால், இந்த நாட்டில் பாதிக்கு மேல் படிப்பறிவின்றி இருப்பர்’ என்று அவ்வப்போது திராவிட அரசியல்வாதிகள் கிறிஸ்தவர்களின் கூட்டங்களில் பேசுவதுண்டு.  அதே போல, கிறிஸ்தவர்கள் இல்லாவிட்டால் மக்கள் மருத்துவமனைகள் இல்லாது நோயில் உழன்று கொண்டிருப்பர் என்ற கருத்தும் இருக்கிறது.  இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, கல்வி மருத்துவமனைகளில் கிறிஸ்தவ நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்துவந்துள்ளது.

கல்வியும் மருத்துவமும் வணிகமயமான காலத்திற்கு முந்தைய காலகட்டத்திலிருந்து இதைப் புரிந்து கொள்ளவேண்டும்.  அவை இரண்டும் வணிகமயமானது துரதிஷ்டவசமானது. அவை வணிகமயமாக இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் லாபத்தை எதிர்பார்க்காமல், மக்களின் கொடையை மட்டுமே நம்பி இருக்க வேண்டும்.  அப்படித்தான் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளும் இயங்கின.  மேலை நாடுகளில் உள்ள சர்ச்சுகளில், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் மக்களுடைய நன்மைக்காக என்று கூறி பெறப்பட்ட நிதி தான் இந்த நிறுவனங்களை நடத்த உதவியது.

ஹிந்துக்களில் யாருக்கும் உதவும் எண்ணமே இருந்ததில்லையா?  நிச்சயமாக இருந்துள்ளது, இருக்கிறது, இருக்கப் போகிறது.  உதவும் எண்ணம் கொண்டிருந்த சில வளமான ஹிந்துக்கள் பள்ளிகளையும் கல்லூரிகளையும் தொடங்கினர்.  பிராமணர்கள் அதிகம் உள்ள திருச்சி, சென்னை போன்ற இடங்களில் அவர்கள் தொடங்கிய பள்ளிகள் அதிகம்.  மேலும் சிலர் தங்கள் ஜாதியினரின் ஒத்துழைப்புடன் அறக்கட்டளைகளைத் தொடங்கி, அதன் மூலம் பள்ளிகளைத் தொடங்கினர்.  பின்னர் தென் மாவட்டங்களில், நாடார் பள்ளிகளும், மேற்கு மாவட்டங்களில் செங்குந்தர் பள்ளிகளும் தொடங்கப்பட்டன. ஆனால் கல்லூரிகளைப் பொறுத்தவரை, ஹிந்துக்கள் ஆரம்பித்த கல்லூரிகள், விகிதப்படி, கிறிஸ்தவக் கல்லூரிகளைவிட மிகக் குறைவு.  ஏனென்றால், கல்லூரிகளை நடத்த மூலதனம் அதிகம் தேவை; அவற்றில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவு.  மேற்படிப்பை வழங்கும் கல்லூரிகளை மதமாற்றத்திற்கு, கிறிஸ்தவ நிறுவனங்கள் பயன்படுத்தத் தொடங்கின.  அவ்வாறு மதம் மாற்றியதைத் தம் சாதனைகளாகக் கூறி, மேலை நாட்டு கிறிஸ்தவர்களிடம் அடுத்த ஆண்டுக்கான கொடைகளைப் பெற முடிந்தது.

ஆனால் தனி மனிதனாக ஜாதி கூட்டமைப்பில் இல்லாது உதவும் எண்ணம் கொண்ட சராசரி ஹிந்து, என்ன செய்வான்?  அருகில் உள்ள கோவிலின் உண்டியலில் தன்னால் இயன்ற தொகையை காணிக்கையாகப் போடுவான்.  அந்தத் தொகை நல்ல காரியங்கள் செய்யப் பயன்படும் என்பதே அவன் கருத்து.  அதிலிருந்து கோவில் அர்ச்சகர் போன்ற பணியாளர்கள் சம்பளமாகப் பெறும் தொகை மிகக்குறைவு என்பதும் அவனுக்குத் தெரியும்.  சாதாரணமான கிராமக் கோவில்களில், வளமான கோவில் அர்ச்சகரையோ, ஓதுவாரையோ, கோவில் இசைக் கலைஞர்களையோ காண்பது அரிது. இருந்தாலும் காணிக்கை அளிக்கும் பக்தர்கள் காணிக்கை அளித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

கோவில் ஒரு கல்வி நிறுவனத்தை நடத்துகிறது அல்லது ஒரு மருத்துவமனையை நடத்துகிறது என்றால், தான் போட்ட காணிக்கை நல்ல காரியத்திற்குப் பயன்படுகிறது என்ற நிறைவு பக்தனுக்கு ஏற்படும்.  இப்போது ஏன் அப்படி இல்லை?  உண்டியலில் போடுவது கோவிலுக்குக் கூட பயன்படுகிறதா என்று யாருக்கும் தெரியாது.  அதனால் நேரடியாக அர்ச்சகரின் தட்டில் பக்தன் தன் காணிக்கையை இடும் வழக்கமும் தொடங்கிவிட்டது.  ஓதுவார்கள், இசைக்கலைஞர்களின் நிலை அதைவிடக் கொடுமை.  சில கோவில்களில் அவர்கள் கையேந்தி பிச்சை கேட்கும் அவல நிலையும் உள்ளது.

மொத்தத்தில் கோவில்கள் சுதந்திரமாகச் செயல்படும் அறக்கட்டளைகளின் கீழ் இல்லாமல், அரசின் நிர்வாகத்தாலும், அரசின் தேவையற்ற தலையீட்டினாலும் சீரழிந்து, மக்களின் கொடைகள் எங்கு செல்கின்றன என்று தெரியாத நிலையில் உள்ளன. 

உள்ளூர் அறக்கட்டளைகள் கோவில்களை நிர்வகித்தால் என்னவெல்லாம் சாத்தியமாகும்?

1. கோவில்களின் அன்றாட செயல்பாடுகள் குறைவின்றி நடக்கும்.

2. உபரி நிதி உள்ள கோவில்கள் அந்த நிதியை எவ்வாறு செலவு செய்யலாம் என சுதந்திரமாகத் திட்டமிட முடியும்.  

3. தனியாகவோ, பிற கோவில் அறக்கட்டளைகளுடன் இணைந்தோ, அந்தந்தப் பகுதிகளில் நல்ல கல்விக் கூடங்களையும் தரமான மருத்துவமனைகளையும் நிறுவி, நடத்த முடியும்.

4. உபரி நிதி உள்ள கோவில்கள், பற்றாக்குறை கோவில்களுக்கு உதவ நினைத்தால் அது வெளிப்படையாக, சம்பந்தப்பட்ட மக்களின் ஒப்புதலுடன் சாத்தியமாகும்.

5. நேரடியாக, உள்ளூர் நீர் நிலைகளைப் பாதுகாத்து அவற்றை மக்களுக்குப் பயனுள்ளதாக வைத்திருக்க முடியும்.

6. கிராமங்களில் பிற பொது கட்டமைப்புகளை உருவாக்கி, அவற்றால் கிராம நலம் பெருகும்.

7. ஒத்துழைப்பும் வளமும் உயர, நகரங்களுக்கு மக்கள் குடி பெயர்வது குறையலாம்.

இவை எல்லாம் நடந்தால், கல்வி, ஏழ்மை, தனிமை போன்ற காரணங்களுக்காக மதம் மாறுவது நிற்கும். ஆனால் இவற்றை செயல்படுத்த கட்சி பாகுபாடின்றி, எந்த அரசுக்கும் துணிவில்லை.  ஹிந்துக்களின் வாழ்வியல் பாதுகாக்கப் படவேண்டியது என்ற எண்ணம் ஹிந்துக்களுக்கே இருப்பதில்லை.

No comments:

Earlier Posts