ஹிந்து மதம் நம்மை எல்லாம் விடப் பெரியது. நாம் அழிந்துவிடப் போகும் அற்ப ஜீவிகள்; சனாதனம் அழிவில்லாதது. எந்த மத மாற்றத்தாலும் அது அழியப்போவதில்லை.
வரவிருக்கும் ஆபத்தை உணராத ஹிந்துக்கள் கூறுவது தான் மேற்கண்ட கருத்து. அதில் ஓரளவு உண்மை உள்ளது ஆனால் மதமாற்றத்தால் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வது அவசியம்.
முதலாவதாக அழியப்போவது, நான் முன்னே குறிப்பிட்ட சுதந்திரம். காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்றபடி, தனது தெய்வங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை இழக்கிறான். அவன் குடும்பத்தினரும் சந்ததியினரும் கூட இந்த சுதந்திரத்தைப் பெற முடியாது.
இரண்டாவது குடும்ப உறவுகள். மதமாற்றத்தால் உறவுகள் முறிந்ததை அறிவோம். (என்னுடன் பணி புரிந்தவர் தான் விரும்பிய பெண்ணை மணந்து கொள்வதற்காக மதம் மாறிய சம்பவங்களும் அதற்குப் பின் அவர்களுடைய குடும்பத்தில் அமைதி குலைந்ததையும் பார்த்திருக்கிறேன்.) இதை விவரமாகப் பார்க்கவேண்டுமென்றால், ஒரு மதப்பிரச்சாரகரின் மகள் அளித்த பேட்டியை பரிந்துரைக்கிறேன். (https://www.youtube.com/watch?v=r-fITuua3jY)
மூன்றாவது சமூகம். இந்தியக் குடும்பங்கள் குலத்துடனும் ஜாதிகளுடனும் இணைந்தவை. குடும்பப் பிணக்குகளைத் தீர்க்க அவை உறுதுணையாக இருக்கின்றன். சிதைந்த குடும்பங்கள், குலங்களுடன் ஜாதிகளுடன் இணங்கிப் போவதில்லை. குடும்பப் பிணக்குகளைத் தீர்க்க அவர்கள் மத போதகர்களை நம்பியிருக்க வேண்டும். மத போதகர்கள் மதத்தால் வழி நடத்தப்படுபவர்கள். குடும்பத்திற்குத் தேவையான நெகிழ்வோ பரந்த அனுபவமோ இல்லாதவர்கள். குடும்பத்தின் பிரச்சினைகள் தொடரக்கூடிய சாத்தியம் உள்ளது. குடும்பங்களுக்கும் அவை சார்ந்திருக்க வேண்டிய குலங்களுக்கும் தொடர்பு அறுந்தால், என்ன ஆகும் என்பதை மேற்கத்திய நாடுகளில் காணலாம்.
என்னைப் பொறுத்தவரை, இந்த மூன்றில் முதலாவது மிக மிக முக்கியமானது. வாழ்க்கையின் குறிக்கோளே விடுதலை என்று இருக்கும்போது, மனிதன் தன் ஆன்மீகத் தேவைக்கு ஏற்ற கடவுளை தேர்ந்தெடுக்க முடியாத நிலை மிகக் கொடுமையானது. இழக்கக் கூடாத சுதந்திரம் அது.
மதமாற்றத்தால், ஹிந்து தர்மம் அழியுமா இல்லையா, என்ற கேள்விக்கு பதிலளிக்கும் முன், தனி மனிதன் தன் சுதந்திரத்தை இழக்க வேண்டுமா? குடும்பங்கள் பிரிக்கப்படுவதை அனுமதிக்க வேண்டுமா? குடும்பங்களும் அதிலுள்ள மனிதர்களும் தனித் தீவுகளாக வாழ்வது தான் மனித குலத்திற்கு நல்லதா? - போன்ற கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும்.
No comments:
Post a Comment