Friday, December 02, 2022

தரிசனம்



"வாங்க..." என்றார் குருஜி.

நான் அவரை சந்திக்கும் முதல் முறை.  குருஜியை எனக்கு பதினைந்து வருடங்களாகத் தெரியும்.  ஆனால் நேரில் பார்த்ததில்லை, பேசியதில்லை.  அவர் குரலைக் கூட அவர் நண்பர் டேப்பில் பதிந்திருந்ததைத் தான் கேட்டிருக்கிறேன்.  நேரில் பார்க்க வேண்டிய தேவையும் இருந்ததில்லை.  இப்போதும் அவரைப்போய் பார்க்கத் தேவை இல்லை தான்.  ஆனால் எனக்கே உரிய காரணம் இல்லாத செய்கையை காரணமாகச் சொல்லலாம்.

குருஜியை பார்ப்பது அவ்வளவு சுலபம் இல்லை.  அவர் ஆசிரமம் ஊருக்கு வெளியே, ஒரு பொட்டலில் இருக்கிறது.  சில வருடங்களாக, அவர் அங்கு வந்ததில் இருந்து, கொஞ்சம் பசுமை கண்ணில் படுகிறது.  ஆசிரமம் ஒரு ஸ்தாபிக்கப்பட்ட மதத்திற்கு தேவையான எல்லா லட்சணங்களுடன் இருக்கும்.  பரவச பக்தர்கள், கடமையாக பிரச்சாரம் செய்யும் பிரச்சாரகர்கள், கறார் அதிகாரிகள், ஞானிகள் என்று பல வித மனிதர்களையும் அங்கு பார்க்கலாம்.  அதற்கு மேல், முதிர்ச்சி இல்லாத தினசரி அலுவல்கள், முதிர விடா மாற்றங்கள், அதை செய்யும் வித குழப்பங்கள் என்று வாழ்க்கைக்கு தேவையான எல்லா அம்சங்களும் அங்கு இருக்கும்.  மொத்தத்தில் இவை அனைத்தையும் கடந்து, அவரை சந்திப்பது, திருப்பதியில் கடின தடங்கல்களைத் தாண்டி வேங்கடாச்சலபதியை தரிசிப்பது போலாகும்.  உடலும், மனதும் அலுத்து இருக்கும் பொது, ஆன்மா பரவசப்படும் நேரம். 

விழுந்து வணங்கினோம்.  எங்கிருந்து வருகிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டார்.  பதில் சொன்னோம்.  ஒரு குழந்தை கதை கேட்பதைப் போல கேட்டுக்கொண்டார்.  ஒரு நாளைக்கு என்னைப்போல் சுமார் நூறு பேரையாவது இது போல் சந்தித்திருப்பார்.  குழந்தை போல் கேட்டு, குழந்தை போல் மறந்தும் விடுவார் என்று தெரியும்.  அவர் கேட்க வேண்டும் என்று தான் நூற்றுக்கணக்கில் மக்கள் அவரை சந்திக்க வருகிறார்கள்.

"என்ன வேண்டும்..." என்றார்.  அவருக்கு அநேகமாக இது ஒரு பழகிப்போன கேள்வியாக இருக்கவேண்டும்.   பார்க்க வருபவர்கள் ஒரு கோரிக்கையோடு தானே வருகிறார்கள்.

"உங்களைப்  பார்க்க வேண்டும் என்று தான் வந்தோம்." என்றேன்.  அவர் ஆச்சர்யப்படவில்லை.   எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் இன்னும் முடியாததால் அங்கே சற்றே அசந்தர்ப்பமான மௌனம் நிலவியது.  எனக்கு அங்கிருந்து உடனே இடத்தை காலி செய்ய மனம் இல்லை.  கொடுத்த காசிற்கு முடிந்த வரை பயணிக்கும் அற்ப பயணி போல் அங்கிருந்தேன்.  அமைதியை கலைக்க விரும்பி, "பதினைந்து வருடம் முன்னாள் உங்களைத் தேடி அலைந்தும் இருக்கிறேன்..." என்றேன்.

---
அருண்தான் எனக்கு குருஜியை அறிமுகப் படுத்தி இருந்தான்.  அருணின் ஆன்மீக தேடல், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது.   அவனுக்கு குருவின் ஆளுமை ஒரு முக்கிய அம்சம்.  அவன் வழிகாட்டி, நன்கு கற்றறிந்த ஒரு மனிதர்.  அழகானவர்.  அவர் மூலமாக குருஜியின் மீது நம்பிக்கை வைத்திருந்தான்.  நம்பிக்கைகள் மீது பெரிதும் நம்பிக்கை இல்லாத எனக்கு, குருஜி ஒரு வழிகாட்டி மட்டும் அல்ல, கடவுள் கூட.  ஒரு கோடையில் நான், என் மனைவியுடன் அருணோடு மதிய உணவுக்குப் பின்,  குருஜியைத் தேடிப்பார்ப்போம் என்று கிளம்பினோம்.  அக்காலத்தில் அவர் குறிப்பிட்ட சில நண்பர்களையும் சில சிஷ்யர்களையும் தவிர வேறு யாரையும் சந்திக்காமல் இருந்தார்.  

அவர் நீலாங்கரையில் இருப்பதாக அருணுக்குத் தெரிந்திருந்திருந்தது.  ஆனால் நீலாங்கரை கிராமம் அல்ல என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.  படபடக்கும் வெயிலில் ஒரு மணி நேரம் தெருத்தெருவாக சுற்றினோம்.  விசாரிக்கக்கூட மனிதர்களைக் காணோம்.  ஏதோ ஒரு  பங்களா வாசலில் நின்றிருந்த கூர்க்காவிடம், “ஐயா இருக்காங்களா?” என்று அருண் கேட்டான்.  “யார் ஐயா, இங்க யாரும் இல்லை” என்றான். அவன் உண்மையைச் சொல்லியிருக்கக் கூடும்.  பல பங்களாக்கள், கருப்புப் பணத்தின் மறு உருவங்கள்.  டிவி சீரியல்கள் அதிகம் இல்லா அக்காலத்தில் பங்களாக்கள் வெறும் காலி வீடுகளாக இருந்திருக்க சாத்தியம் அதிகம்.

வெயிலின் கடுமை தாங்க முடியாமல், ஒரு சிறிய மரத்தின்கீழ் மூவரும் ஒண்டிக் கொண்டோம்.  வீட்டிற்குப் போகலாம் என்றேன்.  இவ்வாறு குருஜியை இவ்வாறு  தேடுவது அபத்தமாக இருந்தது.  அருணின் பிடிவாதத்தைத் தணிப்பது சிரமம்.  “நாம் தீவிரமாகக் காண விழையும்போது கிடைப்பவர் இறைவன்...” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போது எங்களைக் கடந்து ஒருவன் சென்று கொண்டிருந்தான்.  எங்களை நோக்கி நின்றிருந்த அருண் அவர் முகத்தைப் பார்த்திருக்கலாம். அழுக்கு ஆடைகள், காலில் செருப்பின்றி அந்த வெயிலில் தார்ச்சாலையில் நடந்தவனின் முகத்தைப் பார்க்க முடியவில்லை.  எங்களைக் கடந்து அவன் சென்றபின், “ஏன் இவராகக் கூட இருக்கலாம்” என்றேன்.  அந்த மனிதன் சற்றே நின்று கைகளை உயர்த்தி ஆசிர்வதித்தை நானும் என் மனைவியும் மட்டும் பார்த்தோம்.

No comments:

Guilt, Fear and their effects

A senior gentleman passed away early this morning near my place.  Nothing unusual about elderly people passing away.  His son was away in fo...