Friday, June 21, 2024

புண்ய க்ஷேத்ரே காசி க்ஷேத்ரே

By Marcin Białek - Own work, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=14647396


வாராணசி எனப்படும் காசி ஆன்மீக பூமி.   தெய்வங்களின் சைதன்யம் காசியில் நிரம்பியுள்ளது.  அதனால் தான், காசி மக்களை ஈர்க்கிறது.  சில ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் வசித்து வரும் மிகச்சில நகரங்களில் காசியும் ஒன்று.  ஒரு பெரும் ஆலமரம் போல, உயிருள்ள ஜீவனாக உள்ளது காசி.  அதை பகுத்துப்பார்க்கும் மனத்தால் புரிந்து கொள்வது சுலபமல்ல.  பல்வேறு தகவல்களை எப்படியோ சேமித்து வைத்திருக்கும் unconscious மனதுக்கு இணையானது வாராணசி.  இது ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு முழுமையான பதிலேதும் காசியில் கிடைப்பதில்லை. பல்லாயிரம் கேள்விகளைக்  கேட்டுக் கேட்டு அலுத்து கேள்வியும் அடங்கிப் போவது தான் காசியின் சிறப்பு.

காசியில் இருக்கும் வரை கடந்த காலத்தின் சுமைகள் இருப்பதில்லை.  வருங்காலத்தின் பயமும் இருப்பதில்லை. அங்கு வரும் யாத்ரீகர்கள் நிகழ்காலத்தில் இருந்து கொண்டு காசி அளிக்கும் அனுபவத்தைப் பெறுகின்றனர்.  காசியில் செய்ய வேண்டிய கடமைகளும், தரிசிக்க வேண்டிய கோவில்களும் மட்டுமே யாத்ரீகர்களின் மனதில் நிற்கின்றன.

ஒரு குடும்பம் பல தலைமுறைகளாக வசித்து வரும் வீட்டில் எவ்வளவு குப்பைகள் சேர்ந்திருக்கும்.  அதைப் போல, காசியிலும் களைய வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.  மகா மயான பூமி.  முழுதாக எரிக்கப்படாமல் சிதையிலிருந்து தள்ளப்படும் பிணங்களைப் போல, அங்கு முழுதாக எரிக்கப்பட வேண்டிய பல விஷயங்கள்  இன்னும் எஞ்சியிருக்கின்றன.  எவ்வளவு எரித்தாலும் ஏதோ ஒன்று மிஞ்சும் போல.

காசி மக்களும் பெரும்பாலும் நிகழ்காலத்தில்தான் வாழ்கின்றனர்.  தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ள இயலாத, நிகழ்காலத்தின் தேவைகளை மட்டும் கருதும் மக்கள் காசிவாசிகள்.  காசி அரசர்கள் தானமாகக் கொடுத்த நிலங்கள் மடங்களாகவும், மடங்கள் அதைச்சார்ந்த மக்களுக்கு வீடுகளாகவும் மாறின.  வீடுகள் கடைகளாகவும் மாறிவிட்டன. கோவில்களைச் சுற்றியுள்ள இடங்கள் கோவில்களைச் சார்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு அவை யாவும் வியாபாரத் தலங்களாகிவிட்டன. காசி நகரின் அமைப்பைக் காணும்போது, அது கிட்டத்தட்ட  Fractal நகரமாகத் தோன்றுகிறது. 

ஆன்மீகம் புனித உணர்வை ஏற்படுத்தும்.  புனித உணர்வு வழிபாட்டிற்கும், வழிபாடு மதத்திற்கும் வழி வகுக்கும். மதம் மக்களை இணைத்து, ஈர்க்கும். மக்கள் கூடும் இடம் வியாபாரத்திற்கு ஏற்ற இடம்.  அடிப்படை ஆன்மீகத்தை மறைக்கும் அளவிற்கு வணிகம் காசியை ஆக்கிரமித்துள்ளது.  வணிகமே பிரதானம் என்ற மன நிலையில், சுத்தம் சுகாதாரம் ஆகியன பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

காசியின் அசுத்தமே, அதன் நாடாளுமன்ற பிரதிநிதியும், இந்த நாட்டின் பிரதமரான மோதியை சுத்தத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஸ்வச்ச பாரத் திட்டத்தைக் கையிலெடுக்க வைத்தது என்று சொல்லிவிட்டு, ஓடும் கார் கதவைத் திறந்து புளிச்சென்று வாயில் உள்ள புகையிலையைத் துப்பினார் கார் ஓட்டுனர்.  இது தான் காசி மக்களின் நிலைமை.  தன் செயலை உணராமல், அரசியல் பேசி, மற்றவரைக் குறை கூறும் நிலைமை.  இந்த மானுட இயல்பும் காசியில் அடர்ந்து காணப்படுகிறது.

ஓயாமல் ஒலி எழுப்பிக்கொண்டு வழி கேட்கும் வாகனங்கள்; வழி விடு என பிறரை அதட்டும் பண்டிதர்கள்.  ஆதி சங்கரருக்குக் கிடைத்த ஞானம் இப்போதைய காசி யாத்ரீகர்களுக்கும் கிடைக்க ஆயிரம் வாய்ப்புகள்.  இருப்பினும் மனிஷா பஞ்சகத்தை பாடிய ஆதி சங்கரருக்கு அடுத்த ஞானிக்காக காசி காத்திருக்கிறது.

உலகின் சுருக்கமான வடிவம் இந்தியா என்றால், இந்தியாவின் சுருக்கமான வடிவம் காசி.  ஆன்மீகம், பாரம்பரியம் ஆகியவற்றுடன் பல மொழிகளும், பல மதங்களும் கூடும் இடமாக காசி உள்ளது.  மெய் ஞானம் தேடி இந்தியாவுக்கு வரும் மேற்கத்தியர்கள் போல, காசிக்குச் செல்லும் இந்தியர்களும் உணர்வார்கள்.  ஆன்மீக உச்சம் ஒரு புறம்; அருவருப்பின் உச்சம் ஒரு புறம் என்ற இரு எல்லைக்களுக்கிடையே ஊஞ்சலாடுவர்.

உலகாயத் தேவைகளுக்காக காசி வருபவர்கள் இன்னொரு ஆச்சரியம்.  சந்து பொந்துகளில் புகுந்து பல்வேறு கோவில்களில் உள்ள இறைவனை தரிசிக்க அவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப நேரத்தில் என்ன கேட்பார்கள்?  தென்னிந்தியாவில், திட்டமிட்டு கட்டப்பட்ட பெரும் கோவில்கள் படிப்படியாக பக்தனின் மனதை அமைதிப்படுத்தி, இறைவனின் சன்னதிக்கு இட்டுச் செல்லும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் காசியில் அது சாத்தியமே இல்லை. காசியும் காசி மக்களும் உள்ள நிலைமையில் அங்கு வரும் யாத்ரீகர்கள் அகோரியாகவோ அல்லது நாத்திகனாகவோ மாறும் சாத்தியமும் உள்ளது.

காசி மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவது கடினம்.  ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர்ப்புடன் உள்ள நகரத்தைச் சரி செய்வது அசாத்தியம். அதற்கான எத்தனங்களைப் பார்க்கும் போது, அவை குழந்தைத்தனமாகத் தோன்றுகிறது.  காசி விஸ்வநாதர் கோவிலைச் சுற்றி மேற்கொண்ட கட்டுமானங்கள், வழக்கமான அரசாங்க குளறுபடி போல எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதோ?

எது எப்படி இருப்பினும், காசியை விட்டுக் கிளம்பும்போது, அடுத்த முறை வரும்போது என்று எங்களைப் பேச வைத்தது.  இந்த ஜன்மம் முடியும் போது, அடுத்தது முக்தியோ அல்லது மற்றொரு ஜன்மமோ, எதுவாக இருந்தாலும், போகும் வழியில் தவிர்க்க முடியாத நிறுத்தம் காசி.  அதனால் தானோ என்னவோ, அடுத்த முறை காசி வரும்போது என்ற பேச்சும் தவிர்க்க முடியாததாகிறது.




No comments: