நான் அனைத்தையும் அறிந்தவனல்ல; அனைத்தையும் அறிந்தவர் எவரும் இல்லை! இருப்பினும் நாம் சேர்ந்து, இந்தியாவை கட்டமைப்போம்.
(Source: I am not perfect. Nobody is! Let’s build India anyway!)
“மக்களின் பின் நிற்பவன் தான் தலைவன்.” ~லவோ ட்சு
இது முணுமுணுக்கப் படும் ஒப்புதல் வாக்கு மூலம் அல்ல. கடினமான பொதுவாழ்க்கையில் இருக்கும் எனது முழக்கம். இங்கு, முழுமையின்மை பலவீனமாகக் காணப்படுகிறது; சந்தேகங்கள் நையாண்டிக்கு உள்ளாகின்றன; “எனக்குத் தெரியாது” என்று ஒப்புக் கொள்வது அரசியல் தற்கொலைக்கு நிகரானது
இருந்தாலும் அதை ஒளிவு மறைவின்றி தெளிவாகக் கூற விரும்புகிறேன்: என்னிடம் எல்லாவற்றையும் மாற்றும் மந்திரக் கோல் இல்லை. எல்லாக் கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இல்லை. சிக்கலான, சுடும் உண்மைகளை தவிர்த்துப் பேசுபவர்கள் உங்களை ஏமாற்றுகின்றனர் அல்லது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.
"பிரபலமான அரசியல்வாதி”யானவுடன் மக்கள் உங்களை வேறு விதமாகக் காண்கின்றனர். அவர்களது எல்லா கேள்விகளுக்கும் உங்களிடம் ஆணித்தரமான, உறுதியான, திருப்திகரமான பதில்களை எதிர்பார்க்கின்றனர். உங்கள் தயக்கங்களை , உறுதியின்மையை ஆராய்ந்து வைத்து முடிவெடுக்கின்றனர். உங்கள் பலவீனத்தக் காயமாகக் காண்கின்றனர். வாழ்க்கையில் போராடிக்கொண்டிருக்கும், சாதாரண மனிதர்களுக்கிடையே நீங்கள் திறன் மிக்க இயந்திரமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் நான் இயந்திரமல்ல. உங்களுக்கு இந்த நாடகத்தை விட முக்கியமானவை உள்ளன.
பல இரவுகளில், என் முன்னே படிக்க வேண்டிய அறிக்கைகள் உள்ளன; தங்கள் வாழ்வின் போராட்டங்களை என்னிடம் கொட்டிவிட விரும்பும் மனிதர்கள் உள்ளனர்; ஒரு எளிய உண்மை எனக்கு சுமையாகிறது: இவை அனைத்தையும் நான் ஒருவனாக தீர்த்து விட முடியாது. அனைத்து கோணங்களையும் நான் பார்ப்பதில்லை. என் கல்வி, என் அனுபவம், என் செல்வாக்கு எல்லாம் உதவக்கூடும்; ஆனால் அவை அனைத்தும் கடனில் தவிக்கும் ஒரு விவசாயியின் வாழ்க்கை போராட்டங்களை, பத்து நேர்காணல்களில் தோல்வியடைந்த ஒரு இளம் பட்டதாரியின் தவிப்பை, வாடகைக்கும் பள்ளிக் கட்டணத்திற்கும் அல்லாடும் ஒரு தாயின் பரிதவிப்பை தீர்த்து வைக்க முடியாது.
இந்தியா போன்ற தேசத்திற்கு ஒற்றை மனம் போதாது
இந்தியா போன்ற தேசத்திற்கு ஒற்றை மனம் போதாது நாம் சுருக்கமாக சொல்லிவிடக் கூடிய கதை அல்ல. ஒரே சமயத்தில், ஓசையும் இசையும் நாம் தான்! மோதிக்கொள்ளும் ஓராயிரம் மொழிகள், ருசிகள், சடங்குகள், நம்பிக்கைகள், அச்சங்கள் நாம் தான்! இருப்பினும், தலைவன், அவன் அலுவலகம், தலைநகரில் அவனது குழு, ஒரு அறையில் அமர்ந்து அனைவருக்கும் எது உகந்தது என்று முடிவு செய்யும் வகையில் நம் அரசியல் நடக்கிறது. எனவே கட்டமைக்கப் பட்ட பிம்பங்களால் நாடுகள் அன்றாடம் நடத்தப் படுகின்றன.
எனவே மாயைகளால் நாம் சமாளிக்கிறோம்!
சற்று ஆராய்வோம்! திடீரென வேலைவாய்ப்புகள் வறண்டு போகின்றன. விலைகள் உயர்கின்றன. விவசாயிகள் துன்பப்படுகின்றனர். சமூகம் தன் குரலை யாரும் கேட்கவில்லை என்கிறது. நிறுவனங்கள் மீதுள்ள நம்பிக்கை ஆட்டம் காண்கிறது. அப்போது நம் முன்னே இரு வழிகள் உள்ளன.
ஒன்று: மக்களுடன் அமர்ந்து, அவர்கள் குறைகளை கேட்டு, நம் அறியாமையை ஒப்புக் கொண்டு, சேர்ந்து பிரச்சினையைத் தீர்க்க முயல்வோம்.
இரண்டு: ஒரு கூட்டத்தைக் கூட்டி, வரைவறிக்கை தயார் செய்து, கதை சொல்லலாம்.
நாம் பெரும்பாலும் இரண்டாம் வழியையே தேர்ந்தெடுக்கிறோம்.
“நாளை தலைப்பு என்னவாக இருக்கும்?” “யார் எந்த தொலைக்காட்சியில் பேசுவார்?”, “இதை எப்படித் திரிக்கலாம்?”. சில ஊடகங்கள் இதற்கு ஒப்புக் கொள்ளும்; சிலருக்கு அழுத்தம் தர வேண்டும். பிறர் வெறுமனே மற்றவர்களை பின்பற்றுவர்.
தொலைக்காட்சி பிரைம் டைமில், சிறு பெட்டிகளில் கோபத்துடன் விவாதிப்பர். ஒரு கூற்றை வளைத்துப் பேசுவர். சிலர் மீது சில அடையாளங்கள் ஒட்டப்படும். மடை மாற்றப்படும். தொலைக்காட்சி விவாதங்கள் காரசாரமாக முடிந்த களத்தில் எந்த மாற்றமும் இருக்காது.
இளைஞன் வேலை , வறுமை ஓயுமா என்ற விவசாயியின் கவலை, எல்லாம் அப்படியே இருக்கும். அவர்கள் வாழ்க்கை எந்த மாற்றமுமின்றி அப்படியே தொடரும். பெண் இருக்கும் பணம் களவு போகாமல் இருக்க வேண்டுமே என்று இரவில் அக்கம்பக்கம் பார்த்து பயந்து செல்வார்.
கதைகள் முடிந்து விடும். அவர்கள் வாழ்க்கை அப்படியே தொடரும்.
இதை நான் கோபத்துடனும் பொறுப்புடனும் கூறுகிறேன்: "நாம் இந்த நாடகத்திற்குப் பழகி விட்டோம்." மக்களின் எதார்த்தத்தை பிற்பாடு எதிர்கொள்ளலாம்; அவர்கள் கேட்கும், காணும் விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடிகின்றது என்ற எண்ணம் அவர்களுக்கு வருகிறது.
எனக்கு அதில் விருப்பமில்லை.
என்னைப் பொறுத்தவரை “எனக்குத் தெரியாது” என்று கூறுவது பலவீனமல்ல. அதன்உண்மையான பொருள்: “இதை நான் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. என்னுடன் அமர்ந்து விளக்குங்கள். குறுகிய தீர்வை விட பெரிய தீர்வை நாம் கண்டடைவோம்.” தட்டிக் கழிக்காமல், உங்களுக்கு தோள் கொடுக்கிறேன்; நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை மாற்ற சேர்ந்து சிந்திப்போம்.
அக்கலாச்சாரத்தில், விவசாயத்தில் எழும் பிரச்சினைகளை, திட்டமிடுபவர்கள் குரலை விட, விவசாயிகள், விவசாயப் பொருளாதார வல்லுனர்கள், உள்ளூர் நிர்வாகிகள், சேற்றில் கால் வைப்பவர்களின் குரல் கேட்கப்பட வைப்போம்.
கல்வி அமைப்பு சீர்படுத்த புதிய திட்டங்களையும் கோஷங்களையும் தொடங்க மாட்டோம்; சோர்வடைந்த ஆசிரியர்கள், ஆர்வம் கொண்ட மாணவர்கள், தவிக்கும் பெற்றோர் கருத்துகளைக் கேட்போம். சமூக மோதல்கள் எழுந்தால், அச்சம் கொண்ட மக்களுடன் அமர்ந்து அவர்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுவோம்.
உரக்கப் பேசுபவர்களின் ஒலி பெருக்கியாக மட்டுமே ஊடகம் இருக்கக் கூடாது. ஊடகங்கள் சமூகத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும்.
நேரடியாகப் பேசும்போது ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்றை கற்றுக் கொள்கிறேன். “என்னிடம் தீர்வு தயாராக இல்லை; ஆனால் நாம் இருவரும் சேர்ந்து தீர்வை கண்டுபிடிக்கும் வரை உங்களுடன் ஒத்துழைக்கிறேன்” என்று மக்களிடம் கூறும் போது, அவர்கள் பின்வாங்குவதில்லை, கேலி செய்வதில்லை. அப்போது உரையாடலில் பணிவு தோன்றுகிறது; மொழி மென்மையாகி உண்மை எழுகிறது.
கிடைக்கவே வாய்ப்பில்லாத ஒரு ஆவணத்திற்காக, ஒரு தந்தை மணிக்கணக்கில் வரிசையில் நிற்பதைப் பற்றி சொல்கிறார். சட்டத்தில் உள்ள சிறு குழுப்பம் தன் லாபத்தை அடியோடு அழித்துவிட்டதை ஒரு வணிகர் விளக்குகிறார். வறுமையில் உழலும் சிறுமி பெரும் வீட்டைப் பற்றிய தன் கனவை விளக்குகிறாள். அவை பேச்சுக்காகக் கூறப்பட்டவை அல்ல. இவை தீர்வுக்கான கோரிக்கை உள்ள கதைகள்.
கேட்க நன்றாக இருக்கும் இந்தக் கதைகளை மட்டும் பின்னணியாகக் கொண்ட அரசியல் நமக்கு அயர்ச்சி தருகின்றதல்லவா?
நம் நாடு மிகப்பெரியது; பல காயங்களைக் கண்டது; ஒரு சிலரின் அகங்காரத்தாலும் மாயக்காட்சிகளாலும் அதை நிர்வகிப்பத்து அநியாயம். நம் எதார்த்தத்தை, கச்சிதமான கதைகளாக கட்டுப்படுத்தும் கூட்டத்திடம் விட்டு விட முடியாது. நம் பொது வாழ்க்கை, தலைவர்கள் நடித்து, ஊடங்கள் ஒலி பெருக்கி, குடிமக்கள் அடுத்த நடவடிக்கையை செயல்படுத்த அழைக்கப்படாமல், வெறுமே பார்த்து கைதட்டி, விவாதித்து பகிரும் அன்றாக காட்சியாகி விட அனுமதிக்கக் கூடாது.
நான் அப்படிப்பட்ட தலைவனாக இருக்க விரும்பவில்லை. சுவரொட்டியில் தோன்றும் முகமாகவோ, சற்றுமுன் கிடைத்த செய்தியில் தோன்றும் பெயராகவோ இருக்க விரும்பவில்லை.
காற்றோட்டமற்ற அறையில் பத்து குடிமக்களுடன் அமர்ந்து அவர்கள் குறைகளைக் கேட்டு, என் திட்டங்களை அவர்கள் பிய்த்தெடுத்து வாதிடுவதே என் விருப்பம். மேடையில் நின்று அனைத்தும் அறிந்ததாகக் காட்டிக் கொள்வது என் வழியல்ல. முதலாவது சிக்கலானது, சுகமானதல்ல, அதில் பணிவு முக்கியம். மற்றது பளபளப்பானது, வெற்றுப் பேச்சு, பாதுகாப்பானது. இதில் ஒன்று தான் நாளைய உலகை நல்லதாக அமைக்கும்.
உண்மையான தலைவன் ஒத்திகை பார்க்கப்பட்ட கதையாடலுக்குள் ஒளிந்து கொள்ள மாட்டான். கடினமான கேள்விகளிலிருந்து தன் பிம்பத்தைக் காத்துக் கொள்ள, ஊடகத்தை பயன்படுத்திக் கொள்ள மாட்டான. மாறாக, அவன் தன் சந்தேகத்தைக் கேட்பான், நிறைகுறைகளை விளக்குவான், தவறுகளை ஒப்புக் கொள்வான்; அத்துடன் அவனுடன் சேர்ந்து நடந்து தீர்வைக் காண உங்களை அழைப்பான்.
முழுமையற்ற நூறு கோடி மக்களின் முன் நின்று, “எனக்கு அனைத்தும் தெரியாது -ஆனால் நான் முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டேன், உங்களை ஏமாற்ற மாட்டேன், சரியான வழியைக் காணும் வரை உங்களுடன் ஒத்துழைப்பேன்” என்று தைரியமாகப் பேசும் தலைவனாகவே நினைவு கொள்ளப்பட விரும்புகிறேன்.
அவ்வாறு இருப்பதால், என் பலவீனம் வெளிப்படும் என்றால் பரவாயில்லை. அதனால் எனக்கு கைத்தட்டல்கள் கிடைக்காது என்றால் பரவாயில்லை.
ஏனென்றால், மக்களுக்கு மேலே குறைகள் தெரியாதபடி நிற்கும் தலைவன் இந்த நாட்டிற்குத் தேவையில்லை; மக்களுடன் நின்று, திறந்த மனதுடன் கைகளை விரித்து அழைக்கிறேன்:
“நான் இங்கிருக்கிறேன். உங்கள் குறைகளைக் கேட்கிறேன். நாம் சேர்ந்து அதைத் தீர்த்து வைப்போம்.”
No comments:
Post a Comment