தாத்தாவும் கப்பல் ஒட்டிய தமிழர்களும்
வருடம் 1961. ஒரு வழியாக தாத்தாவை சம்மதிக்க வைத்தாகி விட்டது. அவரும் அதிகம் பயன் படுத்தாத ஒரு சட்டையை மாட்டிக்கொண்டுவிட்டார். ரேழியில் செருப்பை மாட்டிக்கொள்ளும்போது கொஞ்சம் யோசிப்பது போல நின்றார். வீட்டில் எல்லோருக்கும் மிக ஆச்சர்யமான விஷயம் - தாத்தா சினிமாவிற்கு கிளம்புவது. சினிமா பற்றி அவருக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது. அவர் கடைசீயாக பார்த்த படம் நாகையா நடித்த சக்ரதாரி. சினிமா போய்விட்டு லேட்டாக வீட்டுக்கு வருவது இன்னும் கோபத்தை கொடுக்கும். ஒரு முறை மரியாதைக்குரிய மாப்பிள்ளையைக்கூட வெளியே நிறுத்தி வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட தாத்தா பார்க்கக் கிளம்பியது - கப்பலோட்டிய தமிழன் படம் பார்ப்பதற்கு. அவரை சம்மதிக்க அப்பாவும், சித்தப்பாவும் பகீரத பிரயத்தனம் செய்தார்கள். பரம எம்ஜியார் ரசிகரான சித்தப்பா, இதுவரை 5 தடவை ஒரு சிவாஜி படம் பார்த்தது இதுவே முதல் முறை. ஒவ்வொரு நாளும் பார்த்துவிட்டு, பிழியப்பிழிய அழுது, சிவந்த கண்களுடன் வருவது எல்லாருக்கும் தெரியும். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிக்கும் தாத்தாவிற்கும் அறிமுகம் உண்டு. ...