Sunday, September 13, 2020

முன்னேற எந்த மொழி?

முதலில் கொஞ்சம் அனுபவம், அறிமுகங்கள்.  அனுபவங்களிலிருந்து கற்கும் பாடத்திற்கே நான் அதிகம் முக்கியத்துவம் தருகிறேன்.


நான் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி; பின்னர் ஆங்கில வழி.  ஆங்கிலம் புரிந்தாலும்,  அறிவியல், புவியியல், வரலாற்றைப் புரிந்து கொள்ளத் தேவையான அளவு ஞானம், கல்லூரிப் படிப்பை முடித்தபின் தான் எனக்குக் கிடைத்தது.  காரணம் சூழல் அப்படி.  படிப்பைத் தாண்டி ஆங்கிலத்தில் பரிச்சயம் பெற வாய்ப்பு இல்லை.  கடனே என்று பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தேன்.  ஓரளவுக்கு ஞாபக சக்தி இருந்ததால், 50-60 மதிப்பெண்கள் வாங்கித் தேருவது கஷ்டமாக இல்லை.  (கல்லூரியில் எழுத்துத் தேர்வுகளில், தமிழில் மட்டும் தான் 60க்கு மேல் வாங்கியிருக்கிறேன்.)


பல கோடி மாணவர்களின் பிரச்சினைக்கு என் அனுபவம் ஒரு உதாரணம்.  நேர்முகத்தேர்வுக்கு வரும் பலர் ஆங்கிலத்தில் பதில் சொல்லத் திணறும்போது, இந்திய மொழிகளில் பதில் சொல்ல ஊக்குவித்திருக்கிறேன்.


முடிவு 1: பள்ளிக்கல்வி தாய்மொழி வழியில் இருப்பது சிறப்பு


பள்ளியில் படிக்கும் போது ஹிந்தியிலும், தெலுங்கிலும் பரிச்சயம் ஏற்பட்டது.  பின்னர் ஜெர்மன், ஜப்பானீஸ், சமஸ்கிருதம் கற்க முயன்றேன்.  வயதான பின் மொழி கற்றல் எளிதல்ல.  இளம் வயதில், தாய் மொழி தவிர ஒன்றிரண்டு பிற மொழிகளில் பரிச்சயம் இருந்தால், காலம் பூர உடன் வரும். 


முடிவு 2: பள்ளியில் தாய் மொழி தவிர ஒன்றிரண்டு பிற மொழிகளை பரிச்சயம் பெரும் அளவிற்குக் கற்பது நல்லது.


சமீப காலங்களில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து வருகிறேன்.  ஆங்கிலச் சொற்களுக்கு இணையான அழுத்தமான சுருக்கமான தமிழ்ச் சொற்கள் இல்லை.  கணிதம், அறிவியல் கலைச்சொற்கள் மட்டுமல்ல; சமூகவியல், தத்துவம் ஆகியவற்றிலும் இணையான சொற்கள் கிடைப்பது கடினம்.   


கடந்த 60-70 ஆண்டுகளில் வந்த தமிழ் மொழிபெயர்ப்புகள் முரட்டுத்தனமான ஒற்றைப் பொருளையே தருகின்றன.   ஆங்கிலச் சொற்களில் உள்ள வளைந்து கொடுக்கும் தன்மையோ, சொல் சிக்கனமோ தமிழில் இல்லை.  


அது மட்டுமல்ல; கடந்த நூறு ஆண்டுகளில் தமிழில் புதிய உவமைகள் எதுவும் பொதுவில் வரவில்லை.  வடிவேலு, விவேக் நகைச்சுவையைத் தவிர புதிய பேச்சு வழக்குகளும் இல்லை.


நூறு ஆண்டுகளுக்கும் முன் நாராயண ஐயங்கார் என்பவர் மணிமேகலையின் ஒரு பகுதிக்கு விளக்கம் ஒன்று எழுதினார்.  அனுமான விளக்கம் என்ற அந்தப் புத்தகத்தில் உள்ள சொற்கள் சமஸ்கிருத மூலத்திலிருந்து பெற்றவை.  இப்போதைய பெரும்பாலான தமிழர்களுக்கு அதில் ஒன்றும் புரியாது.  அந்த அளவிற்கு நாம் அறிவுப் புலத்திலிருந்து நகர்ந்து விட்டோம்.  தனித்தமிழ், தனித்தெலுங்கு என்பது எல்லா மொழிகளும் தேங்கி நிற்பதிலேயே முடியும்.


முடிவு 3: சமஸ்கிருதத்துடன் மீண்டும் தொடர்பு இல்லாமல், அறிவுப் புலத்தில் தமிழுக்கு எதிர்காலம் இல்லை.


சமஸ்கிருதத்திற்கும் பிற இந்திய மொழிகளுக்குமான உறவை - மழைக்கும், நதிக்கும் உள்ள உறவு என்று சன்க்ராந்த் சானு குறிப்பிடுகிறார்.  சமஸ்கிருதம் பிற மொழிகளிலிருந்து சொற்களைப் பெற்று, அதை செறிவூட்டி, பிற மொழிகளுக்கு அளிக்கிறது.  எது முதல் மொழி, எது முதல் குரங்கு என்ற வெட்டி விவாதங்களை விட்டுவிட்டு, இந்திய மொழிகளை எவ்வாறு செறிவூட்டலாம் என்று யோசிக்க வேண்டும்.  ‘ஆம்’ என்ற சொல் சமஸ்கிருதத்தில் பயன்படுத்தப் படுகிறது.  இது தமிழிலிருந்து போயிருந்தால் தமிழர்கள் பெருமைப் படட்டும்.


நாம் ஏன் ஹிந்தி படிக்க வேண்டும்?


தேவையில்லை தான்.  நிச்சயமாக தாய்மொழிவழி கற்பதே சிறந்தது என்பதில் சந்தேகமில்லை.  ஆனால், இன்னொரு மொழியில் பெற்ற பரிச்சயம், நம் சிந்தனையை சற்றேனும் விசாலமாக்குகிறது.  அது ஹிந்தியாக இருக்க வேண்டியதில்லை - தெலுங்கு, மலையாளம், கன்னடம் கற்றாலும் அதற்குப் பலன் உண்டு.


முன்னேற வேண்டும் என்ற பேரார்வம் கொண்டவர்கள் அதிக மொழிகளைக் கற்பது நல்லது.  


ஹிந்திக்காரர்கள் பிற மொழிகளைக் கற்பதில்லையே?


இதை நானும் பிரச்சினையாகத்தான் பார்க்கிறேன்.  பெங்களூரிலோ,  சென்னையிலோ புணேவிலோ, ஹைதராபாத்திலோ ‘அலுவலக’ வேலைக்கு வரும் இளைஞர்கள் தங்கள் ஹிந்தியை வைத்துக் காலம் தள்ள முடிகிறது.  (கூலி வேலைக்கு வருபவர்கள் கொஞ்சமாவது பிற மொழியைக் கற்கின்றனர்.)   மொழிகளுக்கிடையே ஒரு பரஸ்பர மரியாதை தேவை.  அது இல்லாவிட்டால், இந்தியாவின் சிறுபான்மை மொழி பேசுபவர்கள் தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப் படுவதைப் போல உணர்வர்.  இது பிற மொழியை அவமானப் படுத்துவது என்று ஒரு அதீத முடிவுக்குப் போகலாம்.  இது நாட்டிற்கு நல்லதல்ல.


சிறுபான்மை மொழிகள் ஒன்றிணைந்து தங்களுடைய இருப்பைக் காட்டினாலொழிய இதில் மாற்றம் வராது.  இந்த ஒன்றிணைப்பு, அரசியல் ஒன்றிணைப்பு அல்ல.  


இதுவரை, சிறுபான்மை மொழிகளுக்கிடையே அவற்றின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் ஒரு துரும்பையும் எந்த மொழிவாரி மாநிலமும் எடுத்துப் போடவில்லை.  தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார சபாவைப் போல, ஏன் தக்ஷிண பாரத பாஷா சபாவை வட மாநிலங்களில், தென்னிந்திய மாநில மொழி வளர்ச்சித் துறை ஆரம்பித்தால் என்ன?  பிற்காலத்தில் எல்லா சிறுபான்மை மொழிகளையும் வளர்க்க முயலலாம்.  


வட மாநிலத்திலிருந்து, தென்னிந்திய நகரங்களுக்கு வேலைக்கு வருபவர்கள், உள்ளூர் மொழியில் சில அடிப்படை வாக்கியங்கள் பேசும் அளவிற்குப் பயிற்சியை, தனியார் நிறுவனங்கள் அளிக்க நிர்ப்பந்திக்கலாம். 


எந்த மாநிலம் இதற்கான முதல் அடியை எடுத்து வைக்கப் போகிறது?


Earlier Posts