Sunday, April 09, 2017

சொர்க்க வாசலுக்கு

அந்த அழைப்பு மிக மகிழ்ச்சியளித்தது.  

இரண்டு வருடங்கள்.  அவன் தலைவன் வாக்களித்த எழுபத்து இரண்டு கன்னிப்பெண்கள் துணைக்கு இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்திருக்கின்றது.  ஒரு பெண் தானாம்; அதுவும் சில மணி நேரங்கள்தானாம்.  செய்தியை கொண்டுவந்த தூதனிடம் கோபத்தை காட்டினான். 

“என்னிடம் ஏன் கோபப்படுகின்றீர்கள்? நான் வெறும் தூதன்.  உங்களுக்கு வாக்களித்தவர்களிடம் கேளுங்கள்.    பொறுமையாகக் கேட்டீர்கள் என்றால், எனக்குத்தெரிந்தவரை அதன் காரணத்தைச் சொல்ல முடியும்."  

“சொல்” என்று உறுமினான்.

“போரினாலும், இயல்பாகவும் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து தான் இருக்கிறது.  ஆனால், தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.  அதுவும் இந்த மாதிரி, அசட்டுத்தனமான வாக்குறுதிகளை நம்பி தற்கொலை செய்து கொள்பவர் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அதனால் இயல்பாகவே ஏற்படக்கூடிய தட்டுப்பாடு நிலவுகிறது.  இறக்கும் பல இளம் பெண்கள் ஐஎஸ்ஐஎஸினால் பலாத்காரம் செய்யப்பட்டதால்,  அவர்கள் கன்னிகளாகவும் இல்லை.  கொடுத்த வாக்கை காக்கத்தான் இந்த கட்டுப்பாடு. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.  உங்களுக்கு கொடுக்கப்பட்ட நாளுக்கு இரண்டு நாட்கள் முன்பு அழைப்பில் உள்ளவரை தொடர்பு கொள்ளவும்."

“ம்.  தெரியும்.  நீ போகலாம்.”

அழைப்பில் இருந்த பிற தகவல்களைப் படிக்கத்தொடங்கினான்.  பக்கத்துக்குப் பக்கம் சட்ட திட்டங்கள்.  இதை அணிந்து கொள்; இத்தனை மணி நேரம் முன்னால் வந்துவிடு; நீ இருக்கும் இடத்திலிருந்து வர வேண்டிய இடத்தின் தொலைவு, பயன் படுத்த வேண்டிய வண்டி, வரக்கூடிய வேகம் எல்லாம் எரிச்சலூட்டுபவையாக இருந்தன.  

கோபப்பட்டு பயனில்லை.  அடுத்த வாய்ப்பு எப்போது வருமோ தெரியவில்லை.  

கொடுக்கப்பட்ட நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன் மறக்காமல், மற்றொரு தூதனை தொடர்பு கொண்டான்.  ஏற்கனவே அச்சிட்டிருந்த அதே சட்ட திட்டங்களை தூதன் விவரித்தான்.  அவன் மூச்சுவிட நிறுத்திய இடைவெளியில், “நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா?” 

சில நொடி அமைதிக்குப்பிறகு, “கேளுங்கள்.  என்னால் தகவல்கள் தான் கொடுக்க முடியும்.  உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளையும், வெகுமதிகளையும் மாற்றவோ பறிக்கவோ இயலாது.” 

“ஏன் இத்தனை சட்ட திட்டங்கள்?  சொர்க்கம் என்றால் இப்படியா இருக்கும்.”

“திருத்தம்.  முதலில் இது சொர்க்கம் இல்லை. சொர்க்க வாசலுக்கு செல்லும் ஏற்பாடு.  இங்கு சட்டங்களுக்கு அனுமதி உண்டு.”

“என் முதல் கேள்வி?”

“பாதுகாப்பு கருதிதான்.  சில வருடங்களுக்கு முன், சொர்க்க வாசலில் பெயருக்கு ஒரு காவலாளி இருந்தான்.  உங்களைப் போல ஒருவன், இடுப்பில் முன்னே வெடிக்காத வெடிகுண்டு பட்டியுடன் ஒருவன் வந்து மிகவும் களெபரம் ஆகிவிட்டது.  பாவம் அந்தப் எழுபத்து இரண்டு பெண்கள்.  அதனால், தீவிர சோதனைக்குப் பிறகுதான்  உள்ளே அனுமதிக்கிறோம்.  உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நேரம் அதிகம் கூட்டம் உள்ள நேரம்.  சோதனைக்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.   அதனால் தான் முன்னே வரச்சொல்கிறோம்.”

“வரவேண்டிய வண்டி, வேகம், வழி எல்லாம்?”

“உங்களுக்கு இங்கு செய்தித்தாள்கள் வருவதில்லை போலிருக்கிறது.  வெடிகுண்டு பட்டிகளுக்கு பதிலாக, கார், டிரக் எல்லாம் பயன் படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.  அதனால்தான்.”

“இவை எல்லாம்தான் அழைப்புடன் வந்த தொகுதியிலே இருக்கிறதே.  நான் எதற்கு உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்?”

“நீங்கள் கற்றறிந்தவர்.  எல்லாவற்றையும் படித்து புரிந்து கொண்டுவிட்டீர்கள் போல இருக்கிறது.  எல்லாரும் உங்களைப் போல இல்லை.  மேலும், இந்தத் தகவல் பரிமாற்றத்தில் உங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்கிறோம்.  நீங்கள் வராவிட்டால், அந்த நேரத்திற்கு வேறு ஒருவரை அனுப்பமுடியும் இல்லையா?  எத்தனை பேர் காத்திருக்கின்றார்கள்?”

“நான் ஏன் வராமல் போகிறேன்?”

“அதெப்படி நிச்சயமாக சொல்ல முடியும்.  எல்லார் இடுப்புப்பட்டி வெடிகுண்டுகளும் வெடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே.”

அவன் தன் இடுப்பை பார்த்துக்கொண்டான்.




Earlier Posts