Friday, September 01, 2017

ரஷ்ய தொலைக்காட்சி

குறைந்த செலவில், வேறு நாட்டு தொலைக்காட்சி பார்க்க முடியும் என்பது எங்களுத்தெரியும்.   கோடைக்கானலில் இருந்து வரும் சென்னைத் தொலைக்காட்சி நாங்கள் அதிகம் பார்க்காவிட்டாலும், போதுமானதாக இல்லை.  மார்ச், ஏப்ரல் மாதங்களில், இலங்கையிலிருந்து ரூபவாஹினி அலை அலையாகத் தெரியும். அதை தெரிய வைக்க, இயற்கை ஒத்துழைத்தால் மட்டும் போதாது.  மொட்டை மாடியில் ஆண்டெனாவைத் திருப்ப ஒருவர், தொலைக்காட்சி பெட்டியின் டியூனரை திருக ஒருவர், இவர்கள் இருவரையும் மேய்க்க ஒரு கண்காணிப்பாளர் ஆகிய மூன்று பேர் இருந்தாலே அது சாத்தியம்.  அபூர்வமாய், ஏப்ரல், மே மாதங்களில் பங்களாதேஷின் பச்சை பின்னணியில் செய்தி வாசிப்பது தெரியும். எப்படி என்று யோசிப்பவர்கள், சுஜாதாவின் ரசிகர்களாக இருக்க வாய்ப்பில்லை.

குறைந்த செலவில், ரஷ்யத் தொலைக்காட்சியை வரவேற்பது எப்படி என்று எலக்ட்ரானிக்ஸ் ஃபார் யூவில் வந்திருந்த அந்த கட்டுரை எங்களுக்கு ஆர்வமூட்டியது.  இதில் நாங்கள் என்பது, நானும், கல்யாண், ரவி, திருவி என்றும் இன்னும் பல பெயர்களில் விளிக்கப்படும் எனப்படும் கல்யாணசுந்தரமும் தான்.

பத்து, பனிரெண்டு அடிக்கு அலுமினியப்பட்டி, அதே நீளத்தில் அலுமினியக் குழாய், இரண்டு அடிக்கு தாமிரப்பட்டி என்று ராஜா டாக்கீஸுக்கு அருகில் கடையிலும் திட்டுகளை ஒண்ணாம் எண் பஸ் கண்டக்டரிடமும் வாங்கி வீட்டுக்கு எடுத்து வந்தோம்.  செலவு கல்யாணுடையது.  மொட்டை மாடியும், டிவியும், கோ-ஆக்ஸியல் கேபிளும் என்னுடையது.  அலுமினிய, தாமிரப்பட்டைகளை ஒரு அடிக்கு வெட்டிக்கொண்டு, பட்டைகளை போர்ன்வீட்டா டப்பாவின் மேல் வைத்து வளைத்துக்கொண்டோம்.  குழாயில், அடிக்கு ஒன்று வீதம் ஓட்டை இட்டு, இந்தப்பட்டைகளை முடுக்கி விட்டோம். தாமிரப்பட்டை டைபோல், அதைத்தான் பதினொன்றாம் இடத்தில் முடுக்க வேண்டும்.  அதற்குப்பின் இருக்கும் கடைசி பட்டை, ஃபில்டர் எனப்படும்.  தாமிரப்பட்டையில் கோ-ஆக்ஸியல் கேபிளை ஸோல்டர் செய்து, ஒரு சிறு சர்க்யூட் வழியாக, டிவிக்கு அனுப்பினோம்.

ப்ரிஸிஷன் என்றால் என்னவென்று தெரியாததால், கல்யாண் பேனாவில் வைத்து ஒன்றரை சுற்று சுற்றி மாட்டிய இண்டக்டன்ஸ்தான் சர்க்யூட்டில் முக்கிய பாகம்.  நாங்கள் சற்றும் எதிர்பாரத விதமாக, டிவியில் அலை மட்டுமே அடித்துக்கொண்டிருந்தது.  VHF, UHF முழுதும் தேடியும் வேறு ஒன்றும் கிடைக்க வில்லை.  சற்றே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால், செர்ஜி புப்கா போல்வால்ட் தாண்டுவது போலவும், கோர்பசேவ் மீட்டிங்கில் பேசுவது போலவும் எனக்கு மட்டும் தோன்றியதால், யாரிடமும் சொல்லவில்லை.

யாரவது காலேஜ் சீனியரிடம் கேட்கலாம் என்றால், இருப்பதிலேயே நாங்கள் தான் சீனியர்.  கடவுளுக்கே சோதனை வந்தால் எப்படி இருக்கும் என்று அப்போதுதான் தெரிந்தது.  கொஞ்சம் அகலமாக மற்ற காலேஜிலும் தேடலாம் என்ற போது, கீழ் வீட்டிலேயே ஒரு சீனியர் இருப்பது நினைவுக்கு வந்தது.  அதுவும் RECயில் கடைசி வருடம் படிப்பவர்.  அவர் EEE மாணவராக இருந்தது அதி விசேஷம்.  பணிவை வரவழைத்துக் கொண்டு, அந்தப் பெண்ணிடம் எங்கள் டிசைனில் என்ன தவறு என்று கேட்கத்துணிந்தேன்.

எலக்ட்ரானிக்ஸ் ஃபார் யூ புத்தகத்தையோ, எங்கள் சர்க்யூட்டையோ சிறிதும் பார்க்காமல், அதெல்லாம் அவுட் ஆஃப் போர்ஷன் என்று ஒப்புக்கொண்டுவிட்டார்.

சில நாட்கள் டிவியை திருகி  அலைகள் மாறாததால், கை விட்டு விட்டேன்.

அந்த ஆண்டனா, நான் பி.எஸ்ஸி ஃபெயில் ஆனதையும், அந்தப்பெண் காம்பஸ் இன்டர்வியூவில் TNEBக்குத் தேர்வானதையும் பார்த்திருக்கும்.

சில வருடங்களுக்குப் பின் சித்தப்பா தன் நண்பர் ஒருவரிடம் என்னை -  ரஷ்ய டிவி ஆண்டெனா செய்தவன் - என்று அறிமுகப்படுத்திய போது சந்தோஷமாகவே இருந்தது.